நான் ஒரு நான் மட்டுமே

நானொரு
கவிஞனென்று
உங்களிடம் சொன்னால்
நீங்கள்
திடுக்கிடுவீர்கள் !
மேலும் கீழுமாய்
உங்களது பார்வை
என்னை
அளவெடுக்கும் !
உங்களுக்கும்
எனக்குமான
அந்தச் சூழலில்
மகா அழுத்தம்
வந்து
குடிகொள்ளும் !
சட்டென்று
நான் உங்களுக்கு
அந்நியனாகிவிடுவேன் !
பச்சக் என்று
உங்கள் நடவடிக்கைகளில்
ஒரு செயற்கை வந்து
ஒட்டிக்கொள்ளும் !

விழுந்த
தேநீர்க்கோப்பை போல
நீங்களென்னை
அருவெறுக்கலாம் !
என்னுடைய
இயல்பான பேச்சிலும்
கவிதையைத் தேட
நீங்கள்
மெனக் கெடுவீர்கள் !
ஒரு தெருநாய்
மின்கம்பத்தில்
காலைத்தூக்கி
ஒன்றுக்குப் போவதை
நான் வெறுமனே
வேடிக்கை பார்த்தாலும்
உள்ளுக்குள்ளே
அதை நான்
கவிதையாக்கிக்
கொண்டிருக்ககூடும்
என்று நீங்கள்
யூகிப்பீர்கள் !
எனக்கான
உங்கள் விளிப்பு
திடீரென்று
ஒருமையிலிருந்து
பன்மைக்குத் தாவலாம் !
தொண்டையில்
கீச் சீச் வந்து
நான்
தொண்டை செருமினாலும்
அர்த்த புஷ்டியோடு
நான்
தொண்டை செருமுவதாக
நீங்கள்
தப்பர்த்தம்
பண்ணுவீர்கள் !
மிகத் தீவிரமான
சமூகப் பிரச்சனையொன்றை
முன்வைத்து
அதுபற்றிக்
கருத்துக்கேட்டு
என்
முகம் பார்ப்பீர்கள் !
என் தோள்மீது
கைபோட
தயங்கித் தொலைப்பீர்கள் !
இன்ஸ்டன்ட் சூழலுக்கு
இன்ஸ்டன்ட் கவிதை
சொல்லச்சொல்லி
நச்சரிபீர்கள் !
கவிதை எழுதுவதால்
என்னென்ன பயனென்று
பட்டியல்
போடச்சொல்வீர்கள் !
உங்கள்
மகனையோ மகளையோ
கவிதை கற்றுக்கொள்ள
என்னிடம்
டியூஷன் அனுப்ப
நீங்கள்
யோசித்துக் கொண்டிருக்கலாம் !
ஆகவே,
நீங்கள் எனக்குத்
தெரிந்தவராக
தெரியாதவராக
நண்பராக
உறவினராக
என
யாராக இருப்பினும் ,
நான்
சுய இன்பம் செய்கிறேன்
என்பதை
எவ்வளவுக்கெவ்வளவு
உங்களிடம்
மறைக்க விரும்புகிறேனோ
அவ்வளவுக்கவ்வளவு
மறைக்க விரும்புகிறேன்
நான்
கவிஞன் என்பதையும் !!!

எழுதியவர் : குருச்சந்திரன் (30-Jan-15, 12:32 am)
பார்வை : 197

மேலே