தேடல்

அம்மா
எங்கே நீ?

எங்கும் சொல்லாமல் போகாதே என்றாய் ,
எங்கு போனாய் நீ சொல்லாமல்?
இரவானால் திரும்பி விடு என்றாய்,
இன்னும் எத்தனை இரவுகள் காத்திருக்க?

நீ சொல்லாமல் சென்றதற்காய்
மன்னிக்கவும் மாட்டேன்.
திரும்பாமல் போனதற்காய்
மறக்கவும் மாட்டேன்.

உயிரற்ற உன் உடல் எனை
உயிரோடு புதைத்த ஒரு நிசம்.
மின்சுடு காட்டில் பொசுங்கியது
உன் உடல் மட்டுமல்ல;
உன்னால் உருவான என்
அத்தனை அணுக்களும்தான்.

என்னுடன் இல்லாமல் என்னுள்ளேயே
இருந்து எனைக் கொல்கிறாய்.
என்னை நினைத்திருந்தால் நீ
உன்னை மறந்திருக்க மாட்டாய்.

இதுவரை நான் இவ்வுலகத்தோடு அல்ல,
உன்னோடு தான் இயங்கியுள்ளேன்.
இருந்தபொழுது உணரவில்லை
இறந்த பிறகு பயனுமில்லை.

உனைத் தொடர முடியவில்லை ,
எனைச் சார்ந்த என் பிள்ளைகளுக்காய் ;
நிசம் சந்திக்கும் திடம் ஊற்றி
வளர்ப்பேன் அவர்களை,
நானும் சுழல்கிறேன் என் கடமைக்காக
என்றும் உன் பிரிவு தரும் கண்ணீருடன்

அபர்ணாசெங்கு

எழுதியவர் : அபர்ணாசெங்கு (30-Jan-15, 12:08 pm)
Tanglish : thedal
பார்வை : 118

மேலே