அம்மாவின் கைகள்
எனக்கு முதல் அமுதை ஊட்டிய கைகள்
நான் கை கோர்த்து நடந்த கைகள்
அயர்ந்தபோது என்னை எழுப்பிய கைகள்
நான் விழுந்தபொழுது என்னை தூக்கிய கைகள்
அழுதபொழுது துடைத்துவிட்ட கைகள்
நான் உயர்ந்தபொழுது கை தட்டிய கைகள்
வாசலில் நின்று அன்போடு கை அசைத்த கைகள்
வாழ்நாள் முழுவதும் உழைத்த கைகள்
ஒடுங்கியவுடன் நான் வருடிய கைகள்
உணவு அற்று கண்கள் இருண்டு
ஆவி பிரியும் முன்னே
என்னை மெலிதாக அழைக்க சிறிது அசைந்த கைகள்
என் நேசமுள்ள அன்னையே
உன் பாசக் கரங்கள் பற்றி
வானிலே பறந்து செல்ல ஆசை
ஏனோ ? நீ மட்டும் பறந்து சென்றாய்
என் கைகளை விலக்கிக் கொண்டு !