தியாகம் - உடல், பொருள், ஆவி எல்லாம் உலகுக்கு

மண்ணில் முளைத்து
மடிந்து போகுமுன்
தன்னை முழுவதும்
தானம் செய்வான்..!

தன்னை உரித்துபின்
தலையும் கொடுத்து
குலையும் ஈய்வான்
கொடையின் மகனாய்..!

உண்ணும் விருந்தில்
உடலால் மரித்து
இலையாய் கிடப்பான்
இன்முகம் சிரிக்க ..!

வயிற்றின் வலியை
வருமுன் காத்திட
வாழைப் பழமாய்
வேலை முடிப்பான்..!

வெட்டிட மீண்டும்
விதையது யின்றி
விளைந்து வருவான்
விண்ணை நோக்கி..!

படுத்திடும் உயிரை
பசுமையில் காண
இரத்தம் கொடுக்கும்
இதயத்தை போல

உடல்பொருள் ஆவி
உதவிட என்றே
உயரிய கருத்தை
உள்ளத்தில் வைத்து

உறுப்புகள் தானம்
உலகினில் பெருக
சிந்தையில் புகுத்தி
சிகரமாய் ஆனாய் ..!

உன்மன வாழ்க்கை
உள்ளே வைத்து
வாழும் மனிதரும்
வாழை யன்றோ..!

கொடுத்திடும் போது
கிடைத்திடும் சுகமே
உயிரெனும் தெய்வம்
உறைவிடம் ஆகும்..!

எழுதியவர் : ஜாக் .ஜெ .ஜெ (1-Feb-15, 11:53 am)
பார்வை : 121

மேலே