நெஞ்சு பொறுக்குதில்லையே மண் பயனுற வேண்டும் கவிதைப் போட்டிக்கான கவிதை

நீர் நிறைந்த கண்மாய்க்கள்
விரிவோடிக் கிடப்பதையும்...

விவசாய நிலமெல்லாம்
கருவை மண்டிக் கிடப்பதையும்...

நீர் பாய்ந்த வாய்க்கால்கள்
தூர்ந்து போய்க் கிடப்பதையும்...

மாடுகள் சுமந்த கலப்பை
மண்ணோடு மக்கிக் கிடப்பதையும்...

காளைகள் கிடந்த கசாலை
மூளியாகிக் கிடப்பதையும்..

கூட்டுவண்டி மொட்டவண்டி
கேட்பாரற்றுக் கிடப்பதையும்...

பார்க்கும் மனசு
பரிதவிச்சிப் போகுதய்யா...

தாலாட்டிய என் கிராமம்...
தாலாட்ட நாதியின்றி
தனியே கிடக்குதய்யா...

கதிர் விளையும் பூமியிப்போ
காஞ்சு கிடக்கக் கண்டு..
நெஞ்சு பொறுக்குதில்லையே...

-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (3-Feb-15, 7:20 pm)
பார்வை : 87

மேலே