அன்னைமடி
அன்னை மடி!
பாவலர் கருமலைத்தமிழாழன்
வெண்பஞ்சு மெத்தையினும் மென்மை; மஞ்ஞை
விரிதோகை இறகினையும் வெல்லும் தன்மை
தண்முகிலை அடைத்துவைத்த தலைய ணையும்
தானுவமை இல்லையென நாணம் கொள்ளும்
கண்ணிமையின் நுனிமயிரும் பட்டுப் பூச்சி
கரம்வைத்த மெல்லுணர்வும் தோற்றுப் போகும்
மண்பூத்த மலரையெல்லாம் குவித்துச் செய்த
மடியெனினும் அன்னைமடிக் கீடாய் ஆமோ !
எத்தனைதான் வயதெனினும் முகம்பு தைத்தால்
எத்தகைய துயரினையும் ஓட வைக்கும்
சித்தத்தில் குழப்பங்கள் சேர்ந்து வாழ்வைச்
சிதறடிக்க நேர்ந்தபோதும் அமைதி நல்கும்
கொத்தாகத் தோல்விகள்தாம் சூழ்ந்த போதும்
கோலூன்றும் துணிவுதனை நெஞ்சில் சேர்க்கும்
தத்தளிக்கும் போதெல்லாம் தாங்கி நிற்கும்
தாய்மடிதான் நாம்பெற்ற காம தேனு!
பாட்டிமடி நீதிகளை ஊட்டி னாலும்
பாசத்தை அத்தைமடி கூட்டி னாலும்
வேட்கையினைத் தூண்டியின்ப ரகசி யத்தை
வேண்டுமட்டும் மனைவிமடி காட்டி னாலும்
ஊட்டுகின்ற பாலோடு தமிழை ஊட்டி
உள்ளத்தில் நேசிக்கும் அன்பை ஊட்டி
நாட்டிற்குள் நல்லவனாய் வாழ வைத்த
நற்றாயின் மடிக்கிங்கே ஈடு முண்டோ !