சக்தி புகழ்

வான வெளியிடை ஞானம் விளைந்திட
---வாழும் ரவிச்சுடரே - உன்
ஞான ஒளியினை ஈந்த பராசக்தி
---நல்லபேர் உரைத்திடுவாய் - இங்கு
நானும் பராசக்தி நற்புகழ் தனையே
---நற்றமிழ்க் கவிதையிலே - பொருட்
தேனும் விளங்கிடப் பாட்டிசைக் கின்றேன்
---தாயவள் நலமருள்வாள் !

முன்னம் இழைத்திட்ட பெரும்பிழை எல்லாம்
---முள்ளிடை பட்டுவிட்ட - நனிச்
சின்னக் குமிழிகள் நொறுங்குதற் போலே
---நித்தம் நொறுக்கிடுவாய் !- எம
தன்னை பராசக்தி உமதிரு பாதம்
---அள்ளி அணைத்துக்கொண்டேன் - உன
தின்னருள் தாரை பூமியில் நானும்
---இன்புற்று வாழுதற்கே !

மாதர் முகங்களைக், கூந்தல், நகங்களை
---கவிதையில் போற்றிவந்தேன் - அற்பக்
காதல் வளர்ந்ததும் கன்னி அவளையே
---கருத்தினில் பாடிவந்தேன் - புவி
சேத மடைந்ததும் கவிதைக் கணைகளைப்
---புரட்சியில் திருப்பிவிட்டேன் - உயர்
வேத மறிந்ததும் நாத வடிவமே
---நின்னைச் சரண்புகுந்தேன் !

உலகம் சுழல்வது தன்னை மறக்கலாம்
---உன்புகழ் மறந்திடுமோ ? - வண்ண
மலரும் தேனினை ஆக்க மறக்கலாம்
---உன்பதம் மறந்திடுமோ ? - பல
இலகு கவிதைகள் நானும் மறக்கலாம்
---இன்னருள் அமுதினையே - வரும்
கலகம் நீங்கிடப் பாய்ச்சிய உனைஎன்
---நினைவு மறந்திடுமோ ?

ஆதி சிவனுடை ஆறடி உடலினில்
---அங்கே இடப்புறத்தில் - ஒரு
பாதி இடத்தினை வென்றாய் அதையும்
---பாடி முரசறைய - நின்றன்
காதி னருகினில் உன்னரும் பிள்ளை
---யானும் கவியுரைத்தேன் ! - முகச்
சோதிச் சுடரினை நித்தம் காட்டியே
---சொர்க்கத்தில் ஏற்றிடுவாய் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (5-Feb-15, 9:17 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 88

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே