நெஞ்சு பொறுக்குதில்லையே - மண் பயனுற வேண்டும் கவிதைப் போட்டி

அறிவைப் பதறவைத்து ஆசையைப் பறக்கவைத்து
ஆயுளைக் கடன்மூச்சாய்
விடவைக்கும் வியாபாரத்தால்...
மனிதனை வாளாக்கி வாழும் நிலையாவும்
மூலமுகவரியால் மூளைசாய்த்திடப்
போரிடும் சாதி-மதங்களால்...
மாண்புச் சங்கை மேடைதோறும் முழங்கி
மக்கள் பிரதிநிதி வழித்தெடுக்கும்
மாநிதிப் புதையலால்....
மனத்தினைக் கல்லாக்கி சகமனித நிலைகுலைவை
கண்டதும் மெல்லகலும்
சுயநலத்தான் சூத்திரத்தால்
மனிதனையே ஆயுதமென எருமையில்லா எமனென
சாமானியருடன் உலவவிட்டு
வெடித்துச் சிதறுகையில்
காதல்-காமமதை சதாதூண்டி சற்றுந் துலக்காது
வல்லுறவுக்கு வழிசெய்து, பழிசொல்லும்
நயந்தனைக் கிறுக்கையில்
என்னவுமாகுமாம் செய்தி, ஏறுக்குமாறாகுமாம் நீதி
என்நெஞ்சாற்றப் பொறுக்குதில்லையே இம்மெய்த்தீ...