நெஞ்சு பொறுக்குதில்லையே -மண் பயனுறவேண்டும் கவிதை போட்டி

பலமரங்களை வெட்டி வீழ்த்தி ஒரு
மனிதன் அரண்மனை கட்டி அதிலே
தனியாக உலவுகிறான் -அந்தோ
பாவம் உண்ண வழியின்றியும்

நடக்க நாதியற்றும் நடுத்
தெருவில் ஒருகுடும்பம் மரநிழல்
தேடித் திரியும் நிலைகண்டு
நெஞ்சமது வெடித்து சிதறுகிறதே .

அடைமழை அதிலே நனைந்து
வெகுநாள் ஆனதை எண்ணியும்
தண்ணீர் பாம்பொன்று நாவறண்டு
தாகத்தால் துடிக்கும் நிலைகண்டும்,

எங்கும் பசுமையை கண்ட
கண்களின்று கருமை நிற
காட்சியை கண்டு ஏங்குவதை
எண்ணியும் நெஞ்சு பொறுக்குதிலையே ...

வாய்க்கா வரப்பில் எங்கும்
துள்ளித் திரியும் கெண்டைமீன்
குஞ்சின்று எங்கேயென எண்ணும்போதே
கண்கள் கலங்கும் நிலைகண்டும்,

கம்மாக் கரையோரமும் ,ஆத்தங்கரை
ஓரமும் அமர்ந்து ,அல்லியும் ,தாமரையும்
அலர்ந்து கிடக்கும் கண்கொள்ளா
காட்சியினைக் கண்டே விரலிடையில்
எழுதுகோல் ஏந்தி ,அங்கும் இங்கும்
நீந்தியே அழகு நடைபோடும்

அன்னத்தின் அழகையும் ,ஒற்றைக்கால்
நாரையின் பொறுமையையும் கண்டு
ரசித்தே கவிஎழுதிய கவிஞன் இன்று
வறட்சிக் கவி வடிக்கும் நிலைகண்டும்
நெஞ்சு பொறுக்குதில்லையே ....

எழுதியவர் : பிரியாராம் (7-Feb-15, 1:42 pm)
பார்வை : 215

மேலே