காதலின் தெய்வம் உன் மடி
குரல் கேட்க
தவிக்கும் உயிருக்குள்
கேட்டுக் கொண்டேயிருக்கிறது
உன் உயிரின் குரல்.....
திரை மீறத்
துடிக்கும் மனதுக்குள்
விட்டு விட்டு துடிக்கிறது
உன் பாதக் கொலுசு பரல்...
உச்சி முத்தம் பேசும்
நினைவில்
குயில் தேசம் உன்மடியில்....
பிச்சிப் பூக்கள் வீசும்
காற்றில்
மலை தூரம் உன் காலடியில்....
அள்ளி அணைத்திடும்
பிரிவுக்கொர் எண்ணமுண்டோ......
தோழி, நீ பள்ளி
பயின்ற என் மார்புக்கு புது வண்ணமுண்டோ....
கிழியும் இதயத்தை என்னவென்பேன்....
அழியாத உன் கால்தடத்தை பூக்களென்பேன்....
சொல்லற்ற நாவினில்
அலகாய் குத்துகிறது உன்
திருவிழா தொலைதல்.....
முள்ளற்ற பூவினில்
அழகாய் சுத்துகிறது உன்
திருமுடி கலைதல்....
இதழ் தீண்டல் சிறகாக
இலைமறை நீ முத்தச் சான்றாக
இனித்திட்ட இதழ் காய
இனித்திட்டாய் இனி திட்டாய்....
விரல் மீட்டல் விசையாக
இசையானாய் நீ திசையாக
பொழிந்திட்ட பொன் வீணையில் நீ
பதிந்திட்டாய் மின் மினி மெட்டாய்...
மயில் ஆடும் மழைநாளில்
நீ உறவாடும் தேநீர் கோப்பை...
சதிராடும் மனக்காட்டில்
நீ கலைந்தாடும் வானவில் சேர்க்கை....
வெயில் சாடும் ஒரு நாளில்
நீ பறந்தோடும் கானல்நீரோ...
சதி செய்த காலக்காட்டில்
நான் குடைசாய்ந்த திருவிழாத்தேரோ....
யாரின் வாழ்வு எதுவரையென்பது
எவனுக்கு தெரியும்- ஒருமுறை
வாழ்வதும் உன்னுடன் வாழ்வதே
வாழ்வென்று புரியும்.....
தேரின் காலிலும் காதல்கள் உண்டு
எறும்புக்கு புரியும்- மறுமுறை
சாவது வீணென்ற உண்மை- உன்
பிரிவுக்குள் உறையும்....
சட்டையில்லாத புழுதிக்குள்
சக்கர பாதம் உன் நினைவு...
சர்க்கரை கசக்கும் என்பதே உன்
விரல் தொடா இனிப்பின் புனைவு....
காட்டு வழி தனிமைக்குள்
தவித்துக் கிடக்கும் பச்சிலைநாக்கு....
பாட்டு கிளி பரிதவிப்பில்
ரத்தம் குடிக்கும் நீ மென்ற வெற்றிலைபாக்கு...
நித்தம் இதழ் தூவும் கொத்து மலரடி
செத்தும் விடாத பித்தம் நீயடி...
பத்தும் பத்தாத முத்தம் தானடி
சத்தம் இல்லாத யுத்தம் நீயடி.....
வானடி-வான் இடி
வைகறை நீராடி- தேரடி
தீயடி- நீ தெவிட்டாத
தேனடி...
வேரடி - உன் விழி
வேறடி-சீர் அடி- உன் நடை
தானடி... பாரடி -இன்னும்
ஓரடி.... என் நரம்பெல்லாம் புது
பறையடி...
எதிர்வினை எதுவெடி- எறும்பு
மொய்க்கும் உன் திருவடி....
வள்ளுவன் குறளடி- அரும்பு
மீசை உன் பருவடி....
யாரடி நீ வெண்பாவடி
செந்தமிழ் இடி இடிக்க
கவிதை போல நீ நடி...
முதல் படி, முடிந்த படி
ரெண்டும் முடிந்த தெய்வமடி...
தேகம் தாண்டிய தீராக்
காதலின் தெய்வம் உன் மடி....
கவிஜி