அவளுடன் ஒரு நடைபயணம்
அனல் கக்கும் கதிரவனின் நெருப்பை அணைக்க
உடல் உமிழ்ந்து கொண்டிருந்தது உப்புத் தண்ணீரை..
சட்டென்று குறைந்த வெயிலின் தாக்கம் உணர்த்தியது
அவள் என்னை நெருங்கிக் கொண்டிருப்பதை...
உள்ளுணர்வு பொய்த்ததில்லை, வந்திறங்கினாள் பேருந்தில்...
இரண்டு மைல் தூரம்,
ஒரு மயிலுடன் பயணத் தொடக்கம்,
அந்தக் கொதிக்கும் குளிர்ந்த வெயிலில்...
நடக்க ஆரம்பித்த இரண்டாவது நிமிடம்,
இரண்டாம் உலகக் கதவு திறந்தது...
அந்த நெகிலான சாலையில்,
நாங்கள் இருவர் மட்டும் ...
புறம் இரண்டும் பச்சைப் புல்வெளிகள்,
மருங்கிரண்டும் எண்ணில்லா மரங்கள்..
குயில்களின் இரைச்சல் மட்டுமே அங்கு அதிகம்...
சட்டென்ற பனிப்பொழிவு,
வட்டமாய் ஒரு வானவில்...
சொர்க்கம் அதுவெனபதாய்த் தோன்றியது...
அவள் பேச்சின் வீரியத்திற்கு ஏற்றார்போல்
அவ்வுலக அழகு கூடிக் கொண்டிருந்தது...
குளிர்ச்சியும் களிப்பும் அதிகரித்தது...
பாவனைகளால் பாசாங்கு செய்தாள்,
பாசங்குகளால் பாவனை செய்தாள்...
அவள் கரம் பற்றிக் கைகோர்த்த போது,
உள்ளமெங்கும் காதல் ததும்பித் தத்தளித்தது...
சிறகுகள் இருந்தால் மட்டுமே பறப்போம் என்பது
அறிவியல் உண்மை காதலில் பொய்.....
விடைபெறுவதாய் கூறினாள்...
வினாவொயொன்றை கோபமாய் அளித்தேன்..
பேருந்தில் ஏறினாள்...
குளிர்ந்த வெயில் கொளுத்தும் வெயிலானது...
மீண்டும் இப்புவியில் சிக்கிக் கொண்டேன்...
இரண்டு நிமிடத்தில் கைபேசியில் அழைப்பு,
"அந்த இரண்டாம் உலகத்திற்கு"..