முதல் கவிதை
கருவறையின்
நிசப்த இருளிலிருந்து
வெளிவந்த அத்தருணம்
அந்த என் அழுகை...
அந்த ஒரே ஒரு அழுகை மட்டுமே
உன் முகத்தில் சிரிப்பையும்
உள்ளத்தில் உவகையும் தந்தது!!
அதற்குபிறகு
என்வயதொத்த குழந்தை
எங்கேயோ அழுதால் கூட
பேருந்தின் ஜன்னல் வழியே
பதறிப்போய் பார்த்தவள் நீ!!
புத்தகப்பையும் எழுதுகோலும் பிடித்ததால்
வலிக்குமே என்று
பள்ளிக்கூட வாசலிலேயே
என் விரல் பிடித்து முத்தமிடுவாய் !
என் வலியெல்லாம் உன் விரல் வழியே
வாங்கித்தான் போனாயோ ??
அரை நிஜாரிலிருந்து நான்
முழுச்சட்டை மாறியபின்
மேலும் கீழுமாய் நானே எனை
கண்ணாடியில் பார்ப்பதுபோல் ..
மோவாயில் விரல் வைத்து அதிசயிப்பாய் ..
அரும்பு மீசை பார்த்து
எனக்காக ஆர்ப்பரிப்பாய் !!
குரல் உடைதலுக்காய்
போராடும் எனை அமர்த்தி
திருப்புகழ் , திருக்குறள் என
உடனிருத்தி படிக்கவைத்து..
குரல் வளத்துடன்
குண வளமும் சிறக்க வைத்தாய்.. !
மதிபெண்ணுக்காய் பாடங்கள்
இல்லை என்று எனை மாற்றி
உயர்வதற்காய் கற்க வைத்தாய்..
உணர்வதனை மாற்றிவிட்டாய்!!
புது அறிவு..
புது நட்பு..
புதுமைகள்..
புது நரம்பு, நாளங்கள் ...
எதுவும் எனைக் கட்டிவிடக் கூடாதென ..
தீமைகள் உணர வைத்தாய் !!
தீர்க்கமாய் அறிவு தந்தாய் !!
கட்டுப்படுத்தாமலேயே கட்டுவித்தாய்!!
கடல் கடந்து உயரவைத்தாய் ,
இப்பெரும் சபையினிலே
என் பெயரதனை விளங்கவைத்தாய் !!
என் அன்னையே உன்னை வணங்குகிறேன் !
இந்த அந்நிய தேசத்திலும்
உன் நேசத்தையே கவிதையாக்கி
இன்று நான் வாசித்தாலும்..
நான் சொன்ன முதல் கவிதை நீதானன்றோ..
"" அம்மா"" !
--
அந்த நேரடி ஒளிபரப்பில்
அரங்கமே அதிரும் வண்ணம்
பரிசு தட்டிசென்றது
அவன் கவிதை.
பெருமையாய் கோப்பையை அவன் உயர்த்திக்காட்ட ..
வெளிச்சங்கள் குறைந்து கொண்டே வர....
அவன் கன்னம் பதித்து முத்தமிட்டு
பரிசினை வாங்கி பார்க்கும் சிறுமி...
...........
ஒ !.. இவள் தான் என் பேத்தியோ ... !
ஒரு பத்து வயதிருக்குமோ ..
அடடா எத்தனை உயரம் என் மகன் !!
என் மகன்போல் இவளும் உயரம்.. !!
என்றெல்லாம்....
பாசத்திலும்...
வியப்பிலும் ....
ஏக்கத்திலும் .....
அந்த அந்நிய நாட்டின் நேரடி ஒளிபரப்பினை ...
சென்னையின் நடுவே
ஒருஅடுக்குமாடி கட்டிடத்தில்..
சுருங்கிய கண் வழியே.....
விழியோரம் ஒரு துளி வழிய ...
பார்த்துக்கொண்டிருந்தது
பரிசுபெற்ற அவனின்
"முதல் கவிதை ".
......................
எங்கள் குடும்ப நண்பர் திருமதி மாலினி பாலாஜி எழுதிய இந்த கவிதை ... தமிழ்குடில் அறக்கட்டளை நடத்திய மகாகவி பாரதியின் பிறந்ததின கவிதைபோட்டி - முதல் பரிசு பெற்ற கவிதை.
நம் தளத்தின் உறுப்பினரும் கூட . பணி நிமித்தம் நிறைய எழுத முடிவதில்லை அவரால் .
மிகுந்த வேண்டுதலுக்கு பிறகு இதை வெளியிட ஒப்புக் கொண்டார் .