காதலும் கவிஞனும் தொடர் 5 - காதலும் வீரமும்

சரி இப்படிபட்ட காதற் கவிதைகள் மட்டுமா காதலைக் கூற உகந்தன! இல்லை யென்றுணர்ந்தேன். காதலில் சோகமுண்டு, நகைச்சுவையுண்டு. பைத்தியக்காரத் தனமுமுண்டு அதிசயம் உண்டு.
அவைகளை தொட்டுக்கவிதை படைக்க முயன்றேன்

இது மெல்லிய சோகம்

மாலையும் இரவும் அதிகாலைப் போதும்
. --மதி மயங்கினாள்

மாலையி ருண்டென்ன மல்லிகை பூத்தென்ன
மங்கைமன மிசைபாடி யென்ன
சோலை மலர்மணம் சேருந் தென்றல் வந்து
செல்லும்வழி உடல்நீவி யென்ன
மேலை வானச் செம்மை போயிருள மணி
மாடத்தகல் விளக்கேற்றி யென்ன
நாலைக் குணம்கொண்ட நங்கை விட்டுப் போரை
நாடிச்சென்ற மன்னன் காணவில்லை

மாலையிட்டே மணங் கொண்டவனோ தனின்
மார்பில் இடம் தந்தே கையினில்செங்
கோலைப் பிடித்தர சோச்சுபவ னெதிர்
கொண்ட பகைமுடித்துன் னிடத்தில்
நூலை இடைகொண்ட நேரிழையே இருள்
நீங்குமுன் கூடுவன் நேரிலென
வேலைக் கை கொண்டுமே வீறெழச் சென்றுமேன்
வெற்றி முரசொலி கேட்கவில்லை

ஊரைப் பகைத்தென்ன உண்ண மறுத்தென்ன
ஓசையின்றி உள்ளம் கேவியென்ன
கூரைக்கொள் வாள்நிகர் கொண்ட விழிகளில்
கூடும் நீர் கன்னத்தில் சுட்டுமென்ன
போரை நிறுத்தடி போதுமென மங்கை
பூவடி மீது கை பற்றியவன்
தேரை அடுத்தொரு தீரர் படையுடன்
தேடிச்சென்றவழி தேறவில்லை

வானம் சிவந்தென்ன வண்ணப்பூப் பூத்தென்ன
வட்டக்கோலம் வாசலிட்டுமென்ன
தேனம் மலர்கொண்டு தென்றலில் ஆடியும்
தேவை கடந்தெழில் கொண்டுமென்ன
மோன நிலைதன்னில் மூடும் விழியின்றி
முற்றும் துயில்விட்டு காத்துமென்ன
போன வழியின்னும் போரைமுடித்தபின்
பூவை அணிந்தில்லம் சேரவில்லை

காலை விடிந்தென்ன காகம் கரைந்தென்ன
கங்கை போலும்விழி பொங்கியென்ன
சேலை யணிமாது செவ்விதழ்கோணியே
திஙகள் முகத்தொளி சோர்ந்துமென்ன
பாலை அருந்தவும் பக்கமாகக் கனி
பார்த்திரவு வைத்துக் காத்துமென்ன
பாலைவனமெனும் பாஙகில் வெறிச்சோடிப்
பார்க்கும் வழி காய்ந்து காணுவதேன்

வீணை இருந்தென்ன வித்தைகள் கற்றென்ன
வெள்ளிச் சலங்கைகள் பூட்டியென்ன
நாணமுடன் உடை பூண்டுமென்ன அதில்
நர்த்தன மாடும் மெய் காத்துமென்ன
பாணம்,தொடுத்திடும் பைங்கிளி தூயநல்
பாசமெழ மனம் காத்திருந்தும்
ஆணை யிடும் மன்னன் அந்தபுரத்திடை
ஆவலெழச் சேரக் காணவில்லை

ஓலை படித்திட உன்னத மாம்மொழி
யோங்கித் தமிழ் சொலும் காதலுடன்
சோலைக் கரும்பதன் சாறு பிழிந்ததில்
சொட்டும் தேனை இட்டதாய் உவந்து
காலைக் கருக்கலில் சொந்தமென எழில்
காணும் மலர்கொண்டை சூடிநின்றும்
வாலைக் குமரியின் வாசமெழும் கூந்தல்
வந்து கலைத்திடக் காணவில்லை

*****************

எழுதியவர் : கிரிகாசன் (11-Feb-15, 4:25 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 75

மேலே