காதலும் கவிஞனும் தொடர் 6 -காதல் நெருப்பு

இன்னொரு சோகம் பார்த்துவிட்டு மற்றைய உணர்வுகளுக்கு வருவோம்


ஓடிவந் துள்ளமதை உத்தமரே அணைத் தென்ன
உடல் சிலிர்க்க ஒரு முத்தம் ஊருறங்கத் தந்தென்ன
நாடிமலர் மேனியிடை நடுங்கவே இழைந்தென்ன
நாணமே இன்றியென் நல்மனதைக் கெடுத்ததென்ன
ஆடிவரும் தேனே அழகுச் சிலை யமுதே
அன்பேயென் றாயிரமாய் அழைத்து மகிழ்தென்ன
கூடிக்கிடந் தென்னை குலவி களித்த பின்னர்
கோதையிவள் குமுறியழக் குடிபோன தெங்கையா

ஆவின்சிறு கன்றலைந்து அன்பில் கதறுவதாய்
அங்கே கிளையிருந்து அணையுமிரு குருவியொலி
மாவின் மேற்துள்ளு மணில் மறைந்து களிக்குமொலி
மலர்மீது வண்டூதி மதுவில் திளைக்குமொலி
தாவியெனை வாட்டமுறத் தவித்திடவே செய்யுதையோ
தலையிருந்து கால்கள்வரை தணலாய் கொதிக்குதையோ
நாவிருந்து வேதனையில் நானும் விடுத்தஒலி
நங்கையிவள் பாடலொலி நாடியுனைச் சேர்க்காதோ

வானவில்லி னேழுவகை வண்ணம் வெளுத்திருக்க
வட்டநிலா பொட்டல்வெளி வரண்டமண்ணாய் தெரிய
தேன்மலரில் வாசமிலை தென்றல் தொடக் கூதலிலை
தின்னவெனக் கனிபிழியத் திகட்டிக் கசக்குதய்யோ
கூன் விழுந்தகோலமென்று கொள்ளா நடைதளர
குழந்தையது மழலை சொலக் கோவமெழுந்தேபரவ
ஏன் இதுவும் வேண்டியதோ இன்னல்தான் நான்படவோ
ஏழையிவள் தான்கொதித்து எரிமலையாய் சிதைவதுவோ

எழுதியவர் : கிரிகாசன் (11-Feb-15, 4:33 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 92

மேலே