யார் காரணம்

யார் காரணம்? - விஜயலக்ஷ்மி சுஷில்குமார்




“என்ன தம்பிகளா, ரெண்டு நாளா பாக்கறேன், இங்கயே சுத்திக்கிட்டும், தூங்கிகிட்டும் இருக்கீங்க?” என்று ஒரு பத்து பதினோரு வயது இருக்கும் சிறுவர்களைப் பார்த்துக் கேட்டான் செல்வா.


இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்கு வந்து சேர்ந்த மூன்று நாளும் அந்த ரயிலடியையே சுற்றி சுற்றி வந்தார்கள். கையில் இருந்த சில்லறை பணமும் ஒரு நாள் உணவிற்கே சரியாகிவிட்டது. அச்சிறுவர்கள் பதில் சொல்லாமல் மௌனமாய் இருந்ததை கண்ட செல்வம்


“என்னப்பா யாரும் உங்ககூட வரலையா? சாப்பிட்டிங்களா?” என்று செல்வம் அக்கறையுடன் கேட்டதும் அவர்களுக்கு தங்கள் அம்மாவின் ஞாபகம் வந்தது.



“இல்லைண்ணா, வந்து..” என்று தயங்கிய சிறுவனை மேற்கொண்டு எதுவும் கேட்காமல்

“வா, ஆமாம் உங்க பேர் என்ன?” என்று அழைத்துச் சென்று அருகில் இருந்த கையேந்தி பவனில் உணவு வாங்கித்தந்தான்.



“சுரேஷ், செந்தில் உங்களுக்கு வேறேதாவது வேணும்னாலும் வாங்கிக்கோங்க. நீங்க சாப்பிட்டுகிட்டே இருங்க இப்போ வரேன்” என்று கூறிவிட்டு அருகில் இருந்த தொலைபேசி பெட்டியை நோக்கி சென்றான்.
சென்னைக்கு வந்த ஒரு மாதத்தில் சுரேஷிற்கும், செந்திலுக்கும் செல்வம் தெய்வமாகி போனான். தினமும் இருவருக்கும் பிடித்த உணவுவகைகளும், நல்ல உடைகளையும் விளையாட்டு பொருட்களும் கொண்டு நிறைத்து வீட்டை விட்டு வெளியேறிய துக்கமேயில்லாமல் பார்த்துக்கொண்டான், செல்வம்.
சுரேஷிற்கும், செந்திலுக்கும் படிப்பு சுமை இல்லாமல் விளையாடியபடி பொழுதைக்கழிப்பதில் மகிழ்ச்சி.
ஆறுமாதங்கள் கடந்திருந்தது.


சுரேஷ், செந்தில் நான் சொன்னேன்ல நம்ப ஐயாவ போய் பாத்துட்டு வரலாம். நான் ஊருக்கு போயிட்டு வர வரைக்கும் நம்ப பெரிய ஐயாவும், சின்ன ஐயாவும் உங்களை பத்திரமா பாத்துப்பாங்க. அவங்க சொன்னபடியே நீங்க நடந்துக்கணும். அப்போதான் நீங்க நல்ல நிலைமைக்கு வந்து உங்க ஊருக்குபோய் நின்னாதான் உங்களோட அருமையும், பெருமையும் எல்லோருக்கும் தெரியும். அப்புறம் ...” என்று சிறிது காலமாக செய்யும் மூளைச்சலவையை செவ்வனே செய்து சுரேஷை ஒரு பெரிய வீட்டிற்கு அழைத்துச்சென்றான். அவர்கள் உள்ளே சென்ற நேரம் செந்தில் கேட்டின் வெளியே நின்றுக்கொண்டிருந்தான்.



“வா வா செல்வம். இதுதான் நீ சொன்ன பையனா? வாப்பா உன் பேரு என்ன, சுரேஷா? எப்பவும் செல்வத்துக்கு உன் நினைப்புத்தான்.” வேலைக்காரனை அழைத்து சுரேஷை அவன் தங்கும் இடத்தை காண்பிக்க சொன்னார் அப்பெரியவர்.


சுரேஷும் செல்வத்திற்கு பிரியாவிடை கொடுத்துச் சென்றான்.


“செல்வம், இந்தா.” என்று மூன்று பணக்கட்டை தந்தார். “சொன்னபடியே வந்துட்டியே, அதுனாலதான் செல்வத்துக்கு கிராக்கியிருக்கு. எப்பவும் புதுசு வந்தா முதல்ல என்கிட்ட சொல்லு. சரியா?” என்ற பெரியவருக்கு வயது ஐம்பதுகளில் இருக்கும்.


“சரிங்கையா, ஏதோ உங்க தயவுலதான் எங்க பொழப்பு நடக்குது.” என்று மரியாதையுடன் அப்பணத்தை பெற்றுக்கொண்டு சென்றான்.



அங்கிருந்து செந்திலை வேறொரு இடத்திற்கு அழைத்துச்சென்றான், வெளியே இருந்து காணும்போது சிறிய வீடு போல் இருந்தது, ஆனால் உள்ளே சென்றபோது விஸ்தாரமாகவும் எல்லா வசதிகளுடனும் சற்று வித்தியாசமாகவும் இருந்தது. அங்கும் செந்திலுக்கு தெரியாமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு செல்வம் தன் புரோக்கர் தொழிலுக்கு மரியாதை செலுத்தினான்.



முதல் ஒரு வாரம் ஒரு மாற்றமும் இல்லாமல் அப்பெரியவர் சொன்ன வேலைகளை எல்லாம் செய்தான் சிறுவன் சுரேஷ். அவரும் பெரிய வேலைகள் எதுவும் தராமல், ஆனால் தன் சுற்றுவட்டத்தில் இருக்குமாறு பார்த்துக்கொண்டார். சில சமயம் அவரின் தனி அறையில் இருக்கும் போது அவனை தடவியபடி அன்பொழுக பேசுவார்.



சுரேஷிற்கு தன் தாத்தாவின் ஞாபகம் வந்தது. அதனால், மேலும் அப்பெரியவரின்பால் ஒரு பிணைப்பு ஏற்பட்டது. அவனால் அந்த வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி சுரேஷிற்கு அறியாமலேயே கண்காணிப்பு இருந்தது.



இரண்டாவது வாரம் அப்பெரியவர் கூடுதல் நேரம் தன் தனியறையில் செலவிட தொடங்கினார். அவரின் தடவலில் உணர்ச்சி வெளிப்பாடு மாறுப்பட்டது.


“என்ன சுரேஷ், இதெல்லாம் தப்பேயில்லை. இங்க வா. இங்க தொட்டு பார்....” என்று அப்பெரியவர் அவனை வழிநடத்தினார்.


முதலில் ஒருவித அச்சமும், தயக்கமும், அருவருப்பும் உணர்ந்த சுரேஷ் இந்த குறுகிய காலத்தில் அப்பெரியவரின் இச்சையை தீர்க்கும் அருமருந்தானான். அவனின் வாழ்க்கையே மாறிவிட்டது, ஆம் இன்று அவனும் ஒரு ஹோமோசெக்ஸாக மாறிவிட்டான். அவன் அவ்வீட்டை விட்டு வெளியேறி தனியாக வந்துவிட்டான். அவனைப்போன்ற நண்பர்கள் கூட்டம் அவனை தத்தெடுத்துக் கொண்டது.
அவனுக்கு வீட்டைவிட்டு வந்த இந்த ஏழு வருடங்களில் வீட்டினரை காணும் ஆசையும் ஏக்கமும் இருந்தாலும்கூட பொருளாதாரத்தில் கொஞ்சம் முன்னேறிய பிறகே செல்லவேண்டும் என்று வைராக்கியம் காத்தான். கடைசியில் இன்று பிறந்து வளர்ந்த வீட்டிற்கு செல்லும் உணர்ச்சிகலவையில் இருந்தான்.



“சுரேஷ்... “ பேச்சே வராமல் தன் தாய் நிற்பதைக் கண்டு மனம் கசிந்து கனத்தது.


“எப்படிப்பா இருக்க? இத்தனை காலம் உன்னை தேடாத இடம் இல்ல. எங்க இருந்த?...” என்று அடுக்காக வந்த கேள்விகளுக்கு பதிலளித்தவாறே கைக்கொள்ளாமல் வாங்கிவந்த பொருட்களை கடைப்பரப்பினான்.


“எங்க வேலை செய்யற?” என்ற கேள்விக்கு மட்டும் பதில்சொல்ல முடியவில்லை. மனம் வலித்தது. “ஒரு பெரியவர் வீட்டுல, சொல்லற வேலை எல்லாம் செய்வேன். அவங்களும் நல்ல சம்பளம் தராங்க.” என்று பதிலளித்து பெருமூச்சுடன் வேறு விஷயங்களுக்கு பேச்சை திசை மாற்றினான்.


இரண்டு நாள் சந்தோஷமாக பொழுதை கழித்துவிட்டு மீண்டும் தன் உலகிற்கு வந்தான்.
“சுரேஷ், நீ ஊருக்கு போனப்ப வசந்த் வந்து அடுத்தவாரம் உன்ன ரெண்டு நாளைக்கு வேண்டியத எடுத்துகிட்டு எப்பவும் பாக்கற எடத்துக்கு வர சொன்னார்.” என்றான் அலெக்ஸ்.


வசந்த் ஒரு செல்வாக்கான அரசியல்வாதியின் மகன். சல்லாப பேர்விழி, அவனின் விருபத்திற்கு ஈடுகொடுத்து திருப்திப்படுத்தினால் போதும் கூடுதல் பணமும் மற்ற விஷயங்களும் கிடக்கும், அவனின் மூலமே மேலும் பல நிலையான வாடிக்கையாளர்கள் கிடைத்துவிட்டார்கள்.



ஒருமுறை கடற்கரையில் தன் நண்பர்களுடன் செல்லும்போது யாரோ தன் பெயரை கூறி அழைப்பதைக் கேட்டு திரும்பினான். ஒரு பெண் நின்றுக்கொண்டிருந்தாள். எங்கேயோ பார்த்த முகம் போல் தோன்றினாலும் அடையாளம் தெரியவில்லை.


“என்ன சுரேஷ் அடையாளம் தெரியலையா? நான்தான் செல்வி, அதுதான் செந்தில். நீ எப்படி இருக்க? நீயாவது நல்லா இருக்கியே அதுபோதும்” என்று கூறியதைக் கேட்டு திடுக்கிட்டான்.



“நீ ..எப்படி ..இப்படி” என்று தடுமாறி கேட்டான் சுரேஷ்.



“அதையேன் கேக்கற, அந்த கஸ்மாலம் செல்வம் என்னை கொண்டுபோய் விட்டது ஒருமாதிரி எடம். அப்பா மாதிரி இருந்த ஒரு ஆளுக்கு எப்பெப்போ தோணுதோ என்னை பொம்பள மாதிரி உடுக்க சொல்லி என்னென்னவோ பண்ணுவான். ..ம்ம்... அதுவே பழகி பழகி ஒருகட்டத்தில என்னால ஆம்பள கணக்கா இருக்கமுடியல. அதுதான் எனக்கு தெரிஞ்சி என்னை மாதிரி இருக்கறவங்க கூட வந்துட்டேன். இப்போ ஆணுமில்லாம பெண்ணுமில்லாம அலாடறேன். சரி சரி ..நான் போறேன் என்னை இட்டுபோக ஆளு வந்திருக்கு. எப்பனாச்சும் பாக்கணும்னா நான் இந்த பக்கம்தான் சுத்திக்கிட்டு இருப்பேன். இப்போ வரேன்.” என்று ஓடிச்சென்றான் செந்தில்..இல்லையில்லை ஓடிச்சென்றாள் செல்வி.


அன்று எப்பொழுதும் செல்லும் பெட்டிக்கடைக்கு சென்றபோது முதலாளியான பெரியவர், “ஏன் தம்பி, இதையெல்லாம் விட்டுட்டு வேற வேலை தேடிகிட்டு போகலாமே. எதுக்கு கெட்டு சீரழியனும்?” என்று எப்பவும் சொல்லற மாதிரி சொன்னார்.


“ஆமாம் நான் ஒருத்தன் விட்டுட்டு போய்ட்டா எல்லாம் சரியாயிடுமா? அரசியல்வாதி, போலிஸ்காரன், பெரிய மனுஷனுங்க எல்லாம் என்னை மாதிரி பலரை வளர்த்துவிட்டு சுகம் காணும்வரைக்கும் இது மாறவே மாறாது. எனக்கும் இதுல கிடைக்கற பணம் வேற எதுலையும் கிடைக்காது, அப்புறம் நான் என்ன செய்ய? நானும் செக்குமாடு மாதிரி இதுக்குனே வளர்க்கப்பட்டவன். எல்லாருக்கும் இது எங்க எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியும், தனக்கு என்ன வந்ததுன்னு கண்டும் காணாம போறாங்க.. அவனுங்களுக்கு என்ன வந்தது, இப்போ என்னையும் சேர்த்து எல்லோருமே சுயநலபிண்டங்கள்.” என்று கூறிச்சென்றான் சுரேஷ்.





அங்கு எழும்பூர் ரயில் நிலையம், கொஞ்சம் வயது கூடியிருந்தாலும் கம்பீரமாக இருந்தான் செல்வம் , “என்ன தம்பி, ரெண்டு நாளா பாக்கறேன், இங்கயே சுத்திக்கிட்டு தூங்கிகிட்டு இருக்க?” ............. மறுபடியும் சுரேஷோ செல்வியோ உருவாக்கப்படுகிறார்கள்.

எழுதியவர் : விஜயலக்ஷ்மி சுஷில்குமார (12-Feb-15, 9:52 am)
Tanglish : yaar kaaranam
பார்வை : 287

மேலே