தேங்காய் நார் சிற்பம்

காலைக் குளிர்-
மனதின் ஒரு மூலையில் எங்கோ
துளிர்விட்ட கவிதையின் கரு..
நல்ல வேளை..இனியும்
செய்தித்தாள் வரவில்லை..
வெள்ளைக் காகிதம் மேசை மேல்
கருநிறகாகம் ஜன்னலின் அருகே..

நீல கோலிக் கண்களால்
உற்றுப் பார்க்கும் குரங்கின் சிற்பம்
முழுத் தேங்காய் நாரில் செதுக்கியது
பவ்யமாய் அமர்ந்திருந்தது !
சென்னைக்கு சுற்றுலா சென்ற
என் மகள் வாங்கி வந்தது
நூற்றியன்பது ரூபாயாம் !

ஜன்னலோர காகம் கரைந்தது !
தேங்காய் நாரிலும் கொட்டாங்கச்சியிலும்
எப்படித்தான் சிற்பம் செதுக்குகிறார்களோ !
காந்திஜி ரசித்த குரங்கு பொம்மைகள்
இப்போதெல்லாம் காணப்படுவதில்லை !
தேங்காய் நார் சிற்பம் அழகு !
அந்த கைவினைக் கலைஞனுக்கு
எவ்வளவு கொடுத்திருப்பார்கள் ?

தென்னை என்னவெல்லாம் தருகிறது?
கடற்கரை இப்போது விற்பனை வளாகமோ ?
காற்றுக்கு விலை நிர்ணயிக்கவில்லையோ !
கடல்கரையிலும் மணல் போல் மாந்தர்கள் !
காகம் கரைந்து பறந்து போயிற்று !
வெள்ளைத் தாளுடன் நான்.......

எழுதியவர் : ஜி ராஜன் (12-Feb-15, 3:52 pm)
பார்வை : 173

மேலே