சீதனம் -ரகு
ஒத்தப்புள்ள
பெத்தாமட்டும் போதாது
சீர்செனத்தியெல்லாம்
வனப்பா செஞ்சு
புகுந்த வீட்டுக்கு
அனுப்பி வைக்கணும்
வாய்க்காத உங்கொப்பென்
பாக்கிப் பணத்த இந்த மாசமாவது
கொடுக்கானா பாப்போம்
மாமியார் வசை
வீட்டுக் கோலமிடும்
ஒவ்வொரு அதிகாலையிலும்
கட்டிலும் கழிப்பிடமும் மட்டுமே
வாழ்க்கையில வாய்த்துப்போன
மாமனார் முகஞ்சுளிப்பார் இனி
காப்பித்தண்ணி கொடுக்கையில
குளிச்சு டிப்டாப்பா
இன்னுங் கொஞ்ச நேரத்தில
கெளம்பிடும் வீட்டுக்காரருக்கு
இட்லி எடுத்துவைக்கையில்
மூக்குறிஞ்சிப் பார்த்தா
அந்த அபலைப்பெண்
அனுசரிச்சு நடந்துக்கோ...
ராத்திரிக்கும்...
என்ன புரிஞ்சுதா....
ஜாடையா ஒரு
வக்கிரத்தை வீசிப்போனவனை
வெறித்திட்டாள்
அன்றிரவும்
ஊரிலிருந்து வந்த
நாத்தனார் உட்பட
தூங்கமுடியாமல்
அலறிக் கொண்டிருந்தனர்
யாவரும்
வந்த மருமகள்
சீதனமாய் வாங்கிவந்த
மரக்கட்டிலிலிருந்தேப்
பரவியதாகச் சொல்லும்
மூட்டைப்பூச்சிதான்
காரணமாம்
ஆச்சர்யமோ
வாழ்விய ஆறுதலோ
அதே கட்டிலில்
நிம்மதியான
தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்
அவள்
அவளுக்கான
இதமானக் காற்றை
சத்தமின்றிச்
சுழற்றிக் கொண்டிருந்தது
மற்றுமொரு
சீதனமான மின்விசிறி !

