இவன்+இவள்= காதல் ~~சந்தோஷ்

இவன்+இவள்= காதல்
**********************************

இந்த கால பெண்கள் மிகவும் விரும்பும் மூன்று நாட்கள் வளர்க்கப்பட்ட தாடியுடன். சிறுப் புன்னகையை எந்நேரம் சிந்திக்கொண்டிருக்கும் இதழ்களுக்கும் கூரிய நாசிக்கும் இடையே.சின்ன மீசையுடன் , ஒரளவு மாநிறம், அடர்த்தியான தலைமுடி. அளவான உடலமைப்பு கொண்ட வசீகர நாயகன் போலத்தான் இருக்கிறான் இந்த சிரஞ்சீவி.

Express Avenue லுள்ள ஒரு காபி ஷாபில் கையில் சில ரோஜா பூக்களுடனும், வாழ்த்து அட்டையில் கவிதை என்று அவனாக தமிழில் தப்பும்தவறுமாக எழுதிய காதல் வாசகத்துடனும் அமர்ந்துக்கொண்டிருக்கிறான். காலை 10 மணிக்கு வருகிறேன் என்று சொன்னவளுக்காக மதியம் 12 மணி வரை காத்திருக்கிறான். அவளிடம் இன்று எப்படியும் தன் மனதில் இருப்பதை சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்துதான் காத்திருக்கிறான். அவள் வருவதாக சொல்லியிருக்கிறாள். வருவாள் என்று நம்பிக்கொண்டு கருப்புக்கண்ணாடி அணிந்து காத்திருக்கிறான்.

வரவில்லை.. வரவே இல்லை. 20 முதல் 30 குறுஞ்செய்தி அனுப்பி விட்டான். 75 க்கும் அதிகமாக அலைப்பேசியில் அழைத்தும் விட்டான். அழைத்த அழைப்புக்கள் யாவும் மிஸ்டுகால்களாக மாறிவிட்டன. இயல்பாகவே பதட்டப்படாத குணமுடைய சிரஞ்சீவி. இன்று மட்டும் ஏனோ பதட்டப்பட ஆரம்பித்தான்.

“ ஷீபா என்னை ஏமாத்த பாக்குறாளா ? எவ்வளவு நேரமானாலும் வந்துடுறேன்னு சொன்னாளே? வர பிடிக்கலைன்னா பிடிக்கலன்னு சொல்லியிருப்பாளே.. இபபடி ஆசைமூட்டி விடமாட்டாளே என்ன ஆச்சு ..? அவளுக்கு எதாவது ஆச்சா ? சரி.. நேத்து வரைக்கும் அவளும் நானும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் தானே.. என்கூட நிறைய இடத்திற்கு வந்து இருக்காளே.. இன்னிக்கு மட்டும் ஏன் வரல.. ? லவர்ஸ் டே நான் தப்பா சொல்லிடுவேன்னு நினைச்சாளா ? ஒரு வேளை நீலமுகலியையும் கூட்டிட்டுவர நீலமுகிலி வீட்டுக்கு போயிருப்பாளோ ? . போன் அட்டெண்ட் பண்ணியாவது தொலையாலாமே அவ.? “

சிரஞ்சிவீயின் மனதில் கேள்விகளும் சந்தேகங்களும் மாறி மாறி அவனின் இதயத்துடிப்பை அதிகரிக்க செய்தது.

லப் டப் .......... லப் டப் .. லப் டப் ......லப் டப்.......லப் டப்................... அவனின் இருதயம் பலமடங்கு அதிகமாய் அனலாய் துடிதுடிக்க ஆரம்பித்தது.

காபி ஷாப் சோபாவில் தலையில் கைவைத்து பதட்டமடைந்தவனின் முதுகை தொட்டது அந்த அழகு கை. நிமிர்ந்து திரும்பிநோக்கியவன்... ஏதோ உணர்ந்தவனாய்

“ ஹே சர்ப்ரைஸ் ..! நீலமுகிலி........! உன்னை இங்க எதிர்பார்க்கவே இல்ல. சரி முதல்ல இங்க உக்காரு பா.”

மெளனமாக ஏதும் பதில் சொல்லாத நீலமுகிலி இவன் விழியை உற்று நோக்கினாள். என்ன என்பதை போல.

” ஷீபா.. ஷீபா வர வர லை யா ? “ முதல் முறையாக திக்கி பேசுகிறான் சிரஞ்சீவி.

“ இல்ல.. வரமாட்டா.. அவ உன் மேல கோவமா இருக்கா. அதான் போன் எடுத்திருக்க மாட்டா. என்னையும் இங்க கட்டாயப்படுத்தி தான் உன்னை பார்க்க சொன்னா . அவகிட்ட உன் காதலை சொல்லனும் இல்லையா..... என்கிட்ட சொல்லு. அதுபோதும்.”

“ இல்ல பா.. ஷீபா.. என் கிளோஸ் ப்ரெண்ட் அதான்......அவ கிட்ட ... அவள வ ... வ்வ வரச் சொன்னேன் பா... “ சிரஞ்சீவியின் பதட்டம் இம்முறை அதிகரித்தது.

ஆழ்ந்த பெருமூச்சை விட்டவளாக... “ சரி சிரஞ்சீவி.. என்ன மேட்டர் என்கிட்ட சொல்லு. அது ஏன் பா.. இன்னிக்குதான் லவ் ப்ரொபசல் பண்ணனுமா... நாளைக்கு சொல்லலாமே.... இது என்ன மூட நம்பிக்கை சிரஞ்சீவி.. ? “

”தெரியல பா.... ஆனா.... சொல்லனும் சொல்லியே ஆகணுமுன்னு தோணிச்சு.. ” என்றவனாக
தயங்கித் தயங்கி ரோஜாக்களையும் வாழ்த்து அட்டையும் நீலமுகிலியுடன் கொடுத்தான். சிறு புன்னகைப் பூத்து அதை ஆர்வமாக வாங்கினாள்.

அவள் வாழ்த்து அட்டையை பிரித்தாள்.
இவன் மேஜையிலிருந்த தண்ணீர் பாட்டில் மூடி திறந்து அவள் என்ன சொல்லபோகிறளோ என்பதை கேட்க அஞ்சி இவன் விழியை மூடிக்கொண்டு மடமட என தண்ணீர் குடிக்க குடிக்க அவள் அந்த வாழ்த்து அட்டையை படிக்க ஆரம்பித்தாள்.

லப் டப் .........லப் டப்..........லப் டப் .......லப் டப்



அந்த வாழ்த்து அட்டையில் ........ தாறுமாறான கையெழுத்தில் ஒரு கவிதை இருந்தது.

சற்று நாளாய்
என்னிதயம் தொலைந்துவிட்டது.
தொலைந்த இடம் எதுவென்று
தேடிப்பார்த்தேன்.
அது உன்னிதயம் என்றானது.

என்ன செய்ய போகிறாய் ?
என்னிதயத்தை திருப்பிக் கொடுப்பாயா?
இல்லை
நீயே வைத்துக்கொள்வாயா ?

காத்திருக்கிறது..
என் வாழ்க்கையும்
என் உயிரும்
நீ சொல்லும் பதிலுக்காக... ?

என்ன சொல்லபோகிறாய் ?
வேல்விழியாளே... !
என் ஆருயிரே !
நீலமுகிலியே..........!!


படித்து முடித்தாள்.. விழியை மூடினாள். முகம் முழுக்க சிவந்துப்போனது.
சற்று நிமிடங்கள் கழித்து,

மெல்ல விழி திறந்தாள்.
கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.........

”சி.......சிரஞ்சீவி........................................!!

எதிர் இருக்கையில் அமர்ந்த சிரஞ்சீவிக்கு அருகில் செல்ல எழுந்து நிறக முற்பட்டவள். ஆர்வ மிகுதியில் அருகிலிருக்கும் ’அதை’ எடுக்க மறந்துவிட்டாள். எழுந்த வேகத்தில் தடுமாறும் நிலையை உணர்ந்த சிரஞ்சீவி அவளை கைத்தாங்கலாக பிடிக்க அவளை நெருங்கினான்.

“ நீலா... பார்த்துபா.. “ என்றவனின் கழுத்தை இறுக பிடித்துக்கொண்டு அவன் முகத்தில் முத்தமிட்டு சொன்னாள் .

”நீ என்னை நல்லா பார்த்துப்ப பா.. கால் இல்லாத என்னை காதலிக்கும் நீ நல்லா பார்த்துப்ப பா........உன்னோட இதயம் என்கிட்டயே இருக்கட்டும் சிரஞ்சீவி ப்ளீஸ் ”

இதை கேட்ட சிரஞ்சீவியின் விழிகள் ஆதவனின் வெள்ளொளியாய் மின்னியது. நீலமுகிலியின் அழுத கண்களில் வெட்க சுடரொளி வீசியது.


ஓர் இன்ப மயக்கத்தில் அந்த எக்ஸ்பிரஸ் அவென்யூ விட்டு வெளியேறினர் பார்வையற்ற சீரஞ்சீவியும், கால் இழந்த நீலமுகிலியும் ஒருவருக்கொருவர் கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு.. இனி இணைப்பிரியா காதல் ஜோடிகளாக..........................!

-------------------------------------------------------------------------------------

-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (14-Feb-15, 10:50 pm)
பார்வை : 3548

மேலே