+காக்கைச் சிறகினிலே-இன்னும் சற்று நொடிகளில்-போட்டிக்கவிதை+

கரங்களின் இணைப்பினிலே யுகங்கள் மறந்திருந்தோம்!
==கருத்துப் பரிமாற்றத்தில் கணங்கள் கழித்திருந்தோம்!
மரங்களின் நிழல்தனிலே மகிழ்ந்தே அமர்ந்திருந்தோம்!
==மனங்களின் பிணைப்பினிலே மதங்கள் அழித்திருந்தோம்!

கானகப் பயணத்திலே பறவையாய் பறந்திருந்தோம்!
==காற்றின் கதகதப்பில் கவிதைகள் படைத்திருந்தோம்!
வானத்தைத் தொட்டுத்தொட்டு வண்ணமாய் வாழ்ந்திருந்தோம்!
==வசதியை மறந்துவிட்டு நட்பினால் வளர்ந்திருந்தோம்!

நண்பனே உன்னைக்கண்டால் கவலைகள் ஓடிடும்!
==நதிக்கரை ஓரம்வாழும் முயல்களும் கூடிடும்!
அன்பனே மேகம்கூட சாரல்மழை தூவிடும்!
==இமைமூடி குயிலும்கூட இன்னிசையாய் கூவிடும்!

சொல்லிடும் வார்த்தைகளில் சிரிப்பெடுத்து தந்திடுவாய்!
==சோகமான நேரத்தினில் தோள்கொடுத்து நின்றிடுவாய்!
கிள்ளிடும் நண்பர்வந்தால் கண்ணசைத்துச் சொல்லிடுவாய்!
==கிழக்கிலெழும் ஆதவனாய் என்மனதில் உதித்திடுவாய்!

உந்தன் உறவினிலே வானமெனக்கு எல்லை!
==உறங்கும் பொழுதினிலே கனவேகவலை இல்லை!
ஆக்கம் அத்தனையும் நம்நட்பை பாடிடுமே!
==காக்கைச் சிறகினிலே கருநிறமாய் வாழ்ந்திடுமே!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (15-Feb-15, 12:38 pm)
பார்வை : 115

மேலே