புதிய பறவை
அந்தப் பறவையை இதற்குமுன்
நான் பார்த்ததில்லை..
மூன்று நான்கு நிறங்கள்
அதன் சிறகுகளில்..
என்னைப் பார்த்து
பயப்படவில்லை அது..
ஏதோ என்னை முன்பே தெரியும்
என்பது போல் இருந்தது
அதன் செயல்கள்..
கீழே தரையில்
தத்தி தத்தி நடந்து
புழு ஒன்றை கொத்தி..
பின் அருகில் இருந்த
அருகம்புல் நுனியில்
முகிழ்த்து நின்ற பனித் துளியை
சுவைத்து உள்ளிழுத்து..
ஒரு முறை
உடலை இப்படியும் அப்படியும்
சிலிர்த்துக் கொண்டு
மீண்டும் என்னை உற்று நோக்கியது..
சன்னமாக சீட்டியடித்து
அதனை அழைத்தேன்..
அருகில் நடந்து வந்து ..
தலையை அண்ணாந்து
சிறகுகள் விரித்து
மேலெழும்பி பறந்து சென்றது..
நான் பெருமைப் படுத்தப் பட்டதாய்
ஏதோ ஒரு நிறைவு..
என்னுள் பறந்து வந்து
தரை இறங்கி..
நிலைத்தது!