உழுவாரும் எழுவாரும்

[ முன் குறிப்பு: 14-02-2015 அன்று பெங்களூர் தமிழ் சங்க கவியரங்கில் அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு எழுதி வாசித்த கவிதை ]

உழுவதையே தொழிலாக்கி உலகத்து மனிதர்களின்
------- உயிர்காக்க அவன்சென்று விதைக்க- அற்ப
பழுதுகளாய் பலர்எண்ணி அடிமையென விலைபேசும்
------- பாவத்தை எங்குசென்று புதைக்க?

உரம்வாங்கும் பணத்துக்கு விளைநிலத்தின் ஒருபகுதி
------- உயிலெழுதி அடமானம் கொடுக்க - மறுத்தால்
வரம்வாங்கி வந்தவனாய் வட்டிக்கடை முதலாளி
------- விரட்டுவதை யார்சென்று தடுக்க?

அடைகாத்து வைத்திருந்த பொன்வாத்து முட்டையெலாம்
------- அடிமாட்டு விலைகொடுத்து வாங்கி - சிலர்
கடைபோட்டு கண்கவரும் வித்தையிலே விற்பனையை
------- கச்சிதமாய் செய்கின்றார் ஓங்கி

நாற்றுநடும் நாள் தொடங்கி நெல்லறுக்கும் காலம்வரை
------- நாள்தோறும் ஒருகூட்டம் உழைக்கும் - அதை
ஏற்றுமதி செய்கின்ற மேல்தட்டு வர்க்கங்கள்
------- ஏழைகளை ஏமாற்றி(யே)ப் பிழைக்கும்

வெயிலோடும் மழையோடும் போராடி பயிர்செய்தால்
------- வருமானம் வரும் அதிலே கொஞ்சம் - அரை
வயிறோடும் பசியோடும் சாகின்ற உழவர்க்கு
------- வாழ்க்கையிலே வேறென்ன மிஞ்சும்

அறுவடையை எதிர்பார்த்து காத்திருந்த சிலநேரம்
------- அத்தனையும் வெள்ளத்தில் மூழ்க - இந்த
வறுமையெனும் வாழ்விற்குள் விதியென்னும் பேர்சொல்லி
------- விளையாடும் ஆண்டவனே வாழ்க

எழுதியவர் : ஜின்னா (16-Feb-15, 10:47 am)
பார்வை : 505

மேலே