கடிகாரம்

உலகத்தில் எல்லாப் பொருட்களும்
கடிகாரம்தான்
நேரத்துக்குக் காட்டும் மாற்றம்
தானே கடிகாரம்!

தென்னை மெதுவாக வளர்வதும்
கடிகாரம்தான்
காவோலை விழுந்த அச்சும்
கடிகாரம்தான்

பூப்பதும் காய்ப்பதும் முதிர்வதும்
உதிர்வதும்
கோடை வசந்தம் மாரி இலையுதிரென்ற
வருடக் கடிகாரம் தானே.

ஒவ்வொரு பொருளின் நிழலும்
பகலில் நேரம் காட்டும்
ஒவ்வொரு பொருளின் குளிரும்
இரவில் நேரம் காட்டும்

தாளம் பாடல் கேட்டால்
குழந்தைக் காலம் வரும்
ஒவ்வொரு பாட்டிலும் மனிதன்
காலத்தை கணக்கிடவே செய்வான்

எவ்வளவு துருப்பிடித்தது என்பதில்
உலோகக் காலம் கணிக்கப்படும்
எவ்வளவு கதிர்த்தது என்பதில்
இறப்புக் காலம் கணிக்கப்படும்

நுண்ணலைச் சிவப்பு நகர்தலில்
அண்டத்தின் காலம் கணிக்கப்படும்
பின்னலைப் பின்னிய விதத்தினில்
பெண்களின் வயதும் தெரிந்திடும்

மனிதன் கூட மொத்தத்தில்
கடிகாரம்தான்
இதயத் துடிப்பு கடிகாரம்
முச்சி விடுவதும் கடிகாரம்
கண் இமைப்பதும் கடிகாரம்
முடி வளர்வதும் கடிகாரம்

உலகமே மனிதனுக்கு நேரம்
காட்டினாலும்
மனிதனுக்குள்ளே கடிகாரம்
இருந்தாலும்
கரத்தில் கூட கடிகாரம்
கட்டினாலும்
நேரத்துக்கு வேலை செய்யாதவன்
மனிதன் மட்டுமே
**கதிர்த்தது - radioactive dating
நுண்ணலைச் சிவப்பு நகர்தலில் - microwave redshift

எழுதியவர் : மது மதி (16-Feb-15, 4:01 pm)
Tanglish : kadikaaram
பார்வை : 84

மேலே