வாக்குமூலம்

'என்னை பிடிக்கும் ' என்று சொல்பவர்களை
எனக்கு பிடித்திருக்கிறது..
அவர்களின் கண்களில் நான் என்னை
குற்றங்கள் அற்றவனாக காண்பதால்..
தவறியும் கேட்டுவிடவில்லை அவர்களிடம்
என்னை பிடிப்பதற்கான காரணத்தை..
ஒருவேளை,
நான் குறைவாக பேசியதற்காக இருக்கலாம்;இல்லை,
அவர்கள் அதிகம் பேசிவிட்டதன் காரணமாக இருக்கலாம்;அல்லது
விரும்பபடுகின்ற ஒரு குற்றவாளியாக நான் இருந்திருக்கலாம் ..
குவளையின் வடிவில் நீர்;
அவரவர்களின் வடிவில், அவர்களிடம் நான்;
அப்பிம்பங்கள் சாகாவரம் பெற்றிருக்கின்றன..
என்னுள் மாறிக்கொண்டே இருக்கும் என் பிம்பங்கள்
எப்போதும் எனக்கு அச்சமூட்டுகின்றன...
சிலநேரம் தேவ தூதனாக...
சிலநேரம் நிர்மூடனாக..
சிலநேரம் பாவபட்டவனாக
சிலநேரம் பரிசுபொருளாக..
சிறந்ததை சேமிக்கும் முயற்சியில்
என்னை நான் இழந்துவிட்டேன்..
காற்றில் எழுந்த ஒரு இறகு..
கண்பார்வையற்றவன் உணரும் நிறம்..
அறச்சொற்கள் ஏதும் ஆறுதல் அளிக்கவில்லை
காலமோ கடந்துகொண்டிருக்கிறது..
எதை மிச்சம் விட்டுசெல்ல
என் அடையாளமாய்..?!
நீங்கள் படைத்த என் பிம்பிங்களை தவிர..
வழக்கம்போலவே சிரித்துத் தொலைக்கிறேன், உங்கள்முன்..
உங்களிடமிருந்து என்னை மறைக்க..
எனவே,
சாகட்டும் இவ்வரிகளும்.

எழுதியவர் : கல்கிஷ் (16-Feb-15, 5:03 pm)
Tanglish : vaakkumoolam
பார்வை : 81

மேலே