அந்த நால்வர் - ஒரு சிறுகதைப் பதிவு

அந்த நாலு சிறுவர்களும் விளையாடுகிறார்கள் என்றே முதலில் நினைத்தேன். ஒரு நீள்சதுர தெர்மாக்கோல் தட்டியின் நான்கு முனைகளிலும் குச்சி சொருகி, அதன் மேல் இன்னொரு தட்டியை வைத்து ஒரு ‘மண்டபம்’ செய்யப்பட்டிருந்தது. சுற்றிலும் மிக நேர்த்தியாக மூங்கில் கீற்றுகளில் சுற்றிய பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ‘சாமி விளையாட்டு’ விளையாடுகிறார்கள் என்று நினைத்தேன். அந்த மண்டபம் ஒரு தேர் போல இழுக்கப்படத் தோதாய் முன்பகுதியில் ஒரு கயிறு கட்டிக்கொண்டிருந்தான் அந்த நால்வரில் ஒருவன். இன்னும் இருவர் ‘சாமி’யைத் தயார் செய்துகொண்டிருந்தனர் போலும், ஒருவன் இன்னொரு தெர்மாக்கோல் தட்டியை மேளம் போல ஒரு குச்சியால் தட்டிக்கொண்டிருந்தான்.

வண்டியை நிறுத்திவிட்டு அவர்களை இன்னும் கொஞ்சம் அருகில் கவனித்தபொழுதுதான் அது ‘மண்டபம்’ அல்ல ஒரு ‘பாடை’ என்பது தெரியவந்தது. ‘அடப்பாவிங்களா! என்ன டா விளையாட்டு இது?’ என்று கேட்க எண்ணி அருகில் சென்றேன்.

எனக்கு ‘பைக்’ ஓட்ட தெரியாது. முப்பது வயது, பெயர் கார்த்திக். இதுக்குமேலும் இப்படியே இருந்தால் சரிவராது என்று வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ள முடிவெடுத்தேன், என் நண்பர் சுந்தரம் உதவியோடு. அவரது பைக்கில்தான் இருவரும் அந்த ஆர்.டி.ஓ மைதானத்திற்கு ஒரு ஞாயிற்றுக்கிழமைப் பகலில் வந்திருந்தோம் ‘கூட்டம் இருக்காது!’.

‘பாடை கட்டி விளையாடுறதுலாம் ஒரு விளையாட்டா டா?’ என்று கேட்கும் முன் அந்த இருவர் தயார் செய்து கொண்டிருந்த ‘சாமி’யைக் கவனித்தேன், ஒரு பழைய துணியில் ஏதோ பொம்மையைச் சுற்றிவைத்து ‘பிணமாக’ தயார் செய்துகொண்டிருந்தனர். சரிதான் பசங்க ரொம்பத் தெளிவாவே விளையாட்டை ஆடுறாங்க என்று எண்ணினேன், நண்பரும் என்னருகில் வந்து சேர்ந்தார்,

“சார், பசங்க பாடை கட்டி விளையாடுறாங்க சார்!” என்றேன்,

“அடப்பாவிகளா…” என்று அவர் சொல்லிமுடிக்கும் முன்பே இருவரும் அந்தப் ‘பிணத்தை’க் கவனித்தோம், அது பொம்மையல்ல, உண்மையாகவே பிணம்தான். இறந்துவிட்ட ஒரு நாய்குட்டியின் உடல் அது. அதற்குத்தான் இவர்கள் ‘இறுதி மரியாதைகளை’ச் செய்ய ஏற்பாடு செய்துகொண்டிருக்கின்றனர் என்பது ஒரு கணத்தில் மனத்தில் உரைத்தது.

”என்ன டா, நாய்க்குட்டிக்கா இதெல்லாம் பண்றீங்க?”

“ஆமாண்ணா… நாங்க வளர்த்த நாய்தாண்ணா… ஒரு கார்க்காரன் அச்ட்டுப் போய்ட்டான்!” பாடையை அமைத்துக்கொண்டிருந்தவன்தான் முந்திக்கொண்டு பதில் சொன்னான்.

“த்தோ, இவ(ன்) தங்கச்சித்தா அவுத்து வுட்டா, பாவம் கார்ல அட்ச்ருச்சு…”

“நா அவள நல்லா அட்சிட்டேன் அப்பவே” -தங்கச்சிக்கு அண்ணன்.

”எப்ப டா ஆச்சு?” சுந்தரம் வினவினார்,

“நேத்து சாங்காலம் சார்” பாடையை இன்னும் இன்னும் நுணுக்கி ஜோடனை செய்துகொண்டே பதிலிறுத்தான் அவன்.

“இவ்ளோ நேரமா டா அதை வெச்சுட்டு இருக்கீங்க?” என்றார் அவர் கவலையுடன், ஆனால் அந்த நால்வருக்கும் நோய்கள் தொற்றிக்கொள்ளும் என்ற கவலை இருந்ததாக தெரியவில்லை. நோய்க்கும் இவர்களைத் தொற்றிக்கொள்ளும் கவலை இருக்கும் என்று தோன்றவில்லை!

”சார், உங்க செல்லுல போட்டோ எடுத்து வெச்சுக்கோங்க சார்” என்றேன்,

“எதுக்கு சார் அதெல்லாம்?” என்றார், அந்த நால்வருக்கும் ஏறத்தாழ அவரது பையனின் வயதுதான் இருக்கும்,

“நாய்தான்னனு தூக்கிப்போட்டுப் போகாமா அதுக்கு பார்த்துப் பார்த்து இவ்ளோ செய்றாங்களே பசங்க, நாம செய்வோமா? எடுங்க…”

“தம்பி, உங்கள போட்டோ எடுத்துக்கலாமா?”

“எடுண்ணா… நாந்தான் இதெல்லாம் பண்ணேன்…” உற்சாகமாய் ‘பாடை’க்குப் பக்கத்தில் அமர்ந்து ‘போஸ்’ கொடுத்தான் அவன்,

“டேய், சீக்கிரம் முடிடா” இருவரில் ஒருவன் கொஞ்சம் கடுப்பானான், ‘நாந்தான் பண்ணேன்’ என்ற சொற்கள் அவனை உசுப்பிவிட்டன போலும்,

“நீங்களும் வந்து நில்லுங்க டா, சேர்த்து போட்டோ எடுக்குறோம்”

“அதெல்லாம் வேணாண்ணா…” அவனுக்கு உண்மையிலேயே இந்த ‘விளம்பரம்’ பிடிக்கவில்லை என்றுதான் தோன்றியது. நால்வருள் அவனே தலைவனாகவும் இருக்க வேண்டும் என்று அவன் மற்றவருக்குப் பிறப்பித்த கட்டளைகள் காட்டின.

அடுத்த சில நிமிடங்களில் அந்த நாய்க்குட்டியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது, கார்கள் ’எட்டு’ போட இருந்த பாதையில் தனக்கே தனக்கான பாடையில் பவனி வந்தது அந்த நாய்க்குட்டியின் உடல். சிறுவர்கள் குறைவில்லாமல் தெர்மாக்கோல் தாரை தப்பட்டைகளை அடித்துக்கொண்டே சுற்றி வந்தனர். ஒன்று, இரண்டு, மூன்று…

“போதும் டா, குழிக்குள்ள வைப்போம்…” தலைவனின் கட்டளை

“இன்னும் ஒரு சுத்து போவோம் டா” தங்கச்சியின் அண்ணன், அவனுக்கு வருத்த்தோடு ஒரு சின்னக் குற்ற உணர்வும் இருந்தது, நாய்க்குட்டியை உள்ளே வைத்து மூடிவிட அவன் மனம் ஒப்பவில்லை போலும். மற்ற மூவருக்கும் கூட அப்படித்தான். தூங்கும் நாய்க்குட்டியை எழுப்பிவிடாமல் நகர்த்துவதாகவே எண்ணி அவர்கள் அதனைத் தோண்டி வைத்திருந்த குழிக்குள் வைத்தனர்.

அப்பொழுதுதான் நாங்களும் கச்சிதமாய் தோண்டிவைக்கப்ப்ட்டிருந்த அந்தக் குழியைக் கவனித்தோம். ’எட்டு’ப் பாதையின் ஒரு பாதி வட்டத்தின் நடுவில் இருந்த மணலான இடத்தில் இரண்டுக்கு ஒன்று அடி அளவில் ஒன்றரை அடி ஆழத்தில் தோண்டப்பட்டிருந்தது குழி. அதன் அருகிலேயே இன்னும் கொஞ்சம் பூக்களும், கற்பூரமும், இரண்டு மூங்கில் குச்சிகளைக் குறுக்காய்க் கட்டிய சிலுவையும், ஒரு பால் பொட்டலமும், தோண்டியெடுத்த மண் குவியலும் இருந்தன.

இவர்கள் செயலை விளையாட்டு என்று எண்ணியது எவ்வளவு பெரிய தவறு என்று அப்போது ஆழமாய் உணர்ந்தோம்.

“சார், பசங்க உண்மைலேயே ரொம்ப அக்கறையா ஏற்பாடெல்லாம் பண்ணிருக்காங்க பாருங்க!” என்றேன்,

“ஆமா சார், பால் கூட வாங்கி வெச்சிருக்காங்க” என்றார் சுந்தரம்.

“பால் வாங்க காசில்லாமத்தான் நேத்தே பண்ணல சார்” என்றான் தங்கையின் அண்ணன், நிச்சயம் அவந்தான் அதுக்கான ஐந்து ரூபாயைத் தேற்றியிருப்பான் என்று எண்ணினேன்.

”உங்க பேர்லாம் என்ன டா?” என்றேன், இவர்களை ஒரு சாதாரண சந்திப்பில் சேர்த்துவிட மனமில்லாமல். இவர்கள் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ளப் போகிறேன் நான்.

“எம்பேரு விஸ்ணு, இவ(ன்) குமாரு, அவ(ன்) ச்சால்சு, இவ(ன்) அசோக்கு”

அதாவது, நாய் அடிபட காரணமாயிருந்த (பாவம் அவள்!) தங்கையின் அண்ணன் ‘விஷ்ணு’. தலைவனாக தோன்றியவன் ’சார்லஸ்’. பாடை அலங்கார நிபுநன் ‘அசோக்கு’. நாலாமானவன் ‘குமார்’.

உள்ளே வைத்த நாய்க்குட்டியைத் துணியால் மூடி, அதன் மேல் பூக்களை அலங்கரிக்கத் தொடங்கினான் அசோக். நாய்க்குட்டி ‘மல்லாந்து’ இருக்கும்படி வைக்கப்பட்டிருந்தது. அதன் வாயைத் திறந்தபடி வைத்து, அதை மூடாதபடியே துணியைச் சுற்றியிருந்தான். அடுத்து என்ன செய்யலாம் என்பதைப் போல அசோக்கும் சார்லஸும் பார்த்துக்கொண்டனர்.

”மண்ணப் போட்டு மூடிடலாம் டா” என்றான் குமார். ஆனால் அவர்களுக்கு மனசே இல்லை!

”பாட்டு பாடுறா” என்றான் சார்லஸ், விஷ்ணுவைப் பார்த்து. வெட்கமோ வேதனையோ அவன் பாடாமல் யோசித்துக்கொண்டே நின்றான்.

“நாங்க வேணா தள்ளிப் போயிடவா டா?” என்றேன்,

“வேண்டாண்ணா” என்றுவிட்டு ஒரு பாடலைத் தொடங்கினான். சுடுகாட்டில் பாடும் பாடல் போல. ஏதோ சித்தர் பாடல் போலவும் இருந்தது. என் மனம் அதை உள்வாங்கவில்லை! பாடல் முடிந்தது, மீண்டும் ‘அடுத்து என்ன’ என்றே நின்றனர், ஆனால், அது தெரியாமல் நின்றதாகப்படவில்லை, நாய்க்குட்டியை மண்ணைப் போட்டு மூட அவர்களுக்கு மனசில்லை. நான் என் பையிலிருந்து ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்துக்கொடுத்தேன்,

“இத அதும்மேல வைச்சுட்டு மூடிடு”

அவர்கள் நால்வரும் மாற்றி மாற்றி மண்ணைப் போட்டு மூடினார்கள், எங்களையும் போட சொன்னார்கள், ஏனோ மறுத்துவிட்டோம், நாய்க்குட்டியின் வாய் இருக்குமிடத்தில் மட்டும் ஒரு குழி செய்து அதன் வழியாக பாலை ஊற்றத் தொடங்கினார்கள், உயிரோடு இருக்கும் குட்டிக்குக் ஊட்டுவதாகவே அவர்கள் எண்ணினார்கள் என்றே தோன்றியது.

“நான் இந்தப் பசங்களுக்குக் கொஞ்சம் காசு கொடுக்கலாம்னு நினைக்கிறேன் சார்” என்றேன்,

“அதெல்லாம் எதுக்கு சார்?” என்றார் சுந்தரம்,

“போய் சோப்பு வாங்கி நல்லா கை கால கழுவுங்க-ன்னு சொல்லப் போறேன்… ஒரு பாராட்டாவும் இருக்கட்டும்”

“அது சரிதான் சார், எங்க ஊர்ல வாத்தியார் ஒருத்தர் இருந்தார் சார், அவரோட ரெண்டு பசங்களுமே நல்லாப் படிச்சு ஒருத்தன் இந்தியாலயும் ஒருத்தன் வெளிநாட்லயும் வேல பாக்குறாங்க, ஆனா அந்த வாத்தியார் செத்துப் போனப்ப அனாதை பொணமா ஊர் பஞ்சாயத்து மூலமாத்தான் அவரை எரிச்சாங்க… இந்தப் பசங்க நாய்க்குட்டிக்கு இவ்ளோ பண்றாங்க!”

“நாமளா இருந்தா பண்ணுவோமா? நாய்தானேனு இருப்போம், இந்தப் பசங்களுக்கு புதைக்க என்னன்ன வேணும்னு கூட தெரிஞ்சுருக்கு, நம்ம வீட்டுப் பசங்களுக்கு என்ன தெரியும் சொல்லுங்க?”

அவர்கள் நாய்க்குட்டியின் ‘சமாதி’யை மூடி பூசினார்கள், ஒரு கைப்பிடி சிமெண்ட் கூட வைத்திருந்தனர் சமாதியை முழுமையாக பூசி மூட, உண்மையிலேயே என்னை ஆச்சரியப்படுத்தியது அவர்களது ஏற்பாடு. மிச்சமிருந்த பூக்களாலும், பாடையில் இருந்த பூக்களாலும் சமாதியைச் சுற்றி அலங்காரம் செய்துவிட்டு, ஒரு வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி வைத்து, மூங்கில் சிலுவையையும் நட்டு வைத்தனர். எந்தக் கடவுளும் அந்த நாய்க்குட்டிக்கு அருள் கொடுக்காமல் இருக்க முடியாது!

இந்த நாலு பேரை விட வேறு என்ன பெரிய அருள் வேண்டும்?

அவர்கள் முடித்துவிட்டு வரட்டும் கையில் நூறு ரூபாய் கொடுத்து நால்வரும் சமமாய் பங்கிட்டுக்கொண்டு நன்றாய் குளித்துவிட்டு வேண்டிய பொருளோ தின்பண்டமோ வாங்கிக்கொள்ளச் சொல்லலாம் என்று காத்திருந்தேன். அதற்குள் எங்கிருந்தோ சுவரேறிக் குதித்துச் சற்றே பெரிய பையன் ஒருவன் வந்து சேர்ந்தான். வந்தவன் இவர்களைக் கேலியாக பார்த்துக் கேலியாகவே பேசினான். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துகொண்டதில் அவனது கேலி அதிகமானது. இவன் இருக்கும்பொழுது பணத்தைக்கொடுக்க முடியாது என்று மேலும் காத்திருந்தேன்.

அவன் அவர்களை ஏதேதோ கேள்வி கேட்டுக்கொண்டிருந்தான், விடுவதாக இல்லை. நான் சட்டென்று அந்த நால்வரிடமும் பேச்சுக்கொடுக்கத் தொடங்கினேன். அவர்கள் என்ன படிக்கிறார்கள், எங்கே படிக்கிறார்கள், எங்கே வீடு என்பது பற்றியெல்லாம் நானும் சுந்தரமும் விசாரித்தோம். வந்த பெரியவன் கொஞ்சம் விலகத் தொடங்கினான். சாலையில் அவனுக்குத் தெரிந்த ஒரு பெண் போவதைப் பார்த்துவிட்டான் போல, மீண்டும் சுவரேறிக் குதித்து அவள் பின்னால் ஓடப் போய்விட்டான்.

நான் அந்த நால்வர் பக்கமும் திரும்பினேன், பைக்குள் பிடித்திருந்த நூறு ரூபாய் தாளை எடுத்து சார்லஸிடம் கொடுத்தேன்,

“நாலு பேரும் எடுத்துக்கோங்க, சண்டை போடாம பிரிச்சுக்கோங்க” என்றேன், அவன் மறுக்கவில்லை, மறுக்கத் தெரியாத வயசு!

“சண்டைலாம் போட மாட்டோம் -ண்ணா”

”நீங்க பண்ணது ரொம்ப பெரிய விஷயம் டா, வாழ்கைல எப்பவும் இப்படியே இருங்க, நல்லாப் படிங்க, சரியா…”

“வீட்டுக்குப் போனதும் முதல் வேலையா கை காலைலாம் நல்லா சோப்பு போட்டுக் கழுவிக்கோங்க”

“இல்லண்ணா, நாங்க குளிச்சே குளிச்சிடுவோம்” குமார்,

“அதுவும் நல்லதுதான்…”

“ஆமாம்னா, இதல்லாம் பண்ணா குளிக்கனும்” விஷ்ணு.

அவர்கள் குளிப்பது நோய் தொற்றக்கூடாது என்பதற்காக அல்ல, ஒரு நண்பனின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதைப் பூர்த்தி செய்வதற்காக என்று உணர்ந்துகொண்டேன். நானும் வீட்டுக்குப் போனவுடன் தலைக்குளிக்க முடிவு செய்தேன்.

எழுதியவர் : விஜயநரசிம்மன் (16-Feb-15, 7:12 pm)
பார்வை : 388

மேலே