வரலாற்று யாத்திரைகள் 13

இந்திய சுதந்திர வேட்கை கொண்டு வேட்டையாடப் புறப்பட்ட பெண்புலி இவள்...அடுப்படியும் கரி பூசிய கைகளும் பெண்மையின் அடையாளங்களாய் சித்திரிக்கப்பட்ட அந்த இருள் நாட்களில் மாதர் துயர் நீக்கும் மருத்துவராய்த் திகழ்ந்தாள்..

தீவிர கதர் இயக்கத்தில் பங்காற்றியவர்களின் பிள்ளைகள் கூட பிரிட்டிஷ் படைக்கு யுத்த சேவை செய்வதற்கு கல்லூரிப் படிப்பை விட்டொழித்து காக்கிச் சட்டை பூட்டிய போது பூக்களுக்கு ஆயுதம் பழக்க
வகுப்பெடுத்துக் கொண்டிருந்தாள் இவள்..

பதினான்கு வயதில் அரசியல் நுண்ணறிவில் ஆர்வம் கொண்டு காங்கிரசின் சேவாதளப் பொறுப்பாளர் நேதாஜியின்பால் ஈர்ப்பு கொண்டாள்... அடுத்த 15 ஆண்டுகளிலேயே சிங்கப்பூர் விமான நிலையத்தில் நேதாஜி அவர்களுக்கு நடந்த வரவேற்பு கூட்டத்தில் அவர் கொள்கைகளை நிறைவேற்ற பேராவல் கொண்டார் இவர்...

"ஆயுதப் படைப் போராட்டத்தில் பெண்களும் சமமாகப் பங்கேற்க வேண்டும் ..அவர்கள் பங்கேற்றாலே போராட்டம் முழுமை பெறும்..அதுவே முறையும் கூட..அந்தத் தளம் சுதந்திரத்திற்காகப் போராடி மாற்றானும் புகழ்ந்துரைத்த வீரத்தை விளக்கிய பெண்ணரசி ஜான்சி லக்ஷ்மி பாயின் பெயர் கொண்டு விளங்கும்"..

நேதாஜியின் கூற்றால் இது சாத்தியப் படாதென உரைத்த பலரும் வியக்கும்படி ஜான்சி ராணி படைத் தளபதியாக மட்டுமின்றி பெண்கள் நலனுக்காக ஓர் அமைச்சராகவும் பொறுபேற்றார்..விடுதலை பசியில் ஒன்று கூடிய பெண்ணினம் அடி மரத்தை வேரறுக்கும் வண்டாய்த்தான் போனது எதிர்த்து நின்றவர்க்கு!

ஜான்சி ராணி தளம் அமைத்துப் போராடி முத்திரை பதித்து விட்டோம் ...இனி ஓய்வாக விடுதலை பெற்ற இந்தியாவில் சுகமாக இருக்க எண்ணவில்லை இவர்...தாய் மண்ணுக்காக குருதி கொடை வழங்கி வீழ்ந்தவர்களுக்கு தக்க உதவி செய்ய முழு மூச்சாய் களத்தில் இறங்கினார்..

சுதந்திரம் ,சமத்துவம்,சகோதரத்துவம் என்ற உயரிய இலக்கை தன் வாழ்வின் லட்சியமாய்க் கொண்ட இவர் மருத்துவப் பணியிலும் பொதுச் சேவையிலும் தன்னை முழுதாய் அர்பணித்துக் கொண்டவர்...

மகளிரின் கண்ணியமான மனித உரிமைகளைக் கொச்சைப் படுத்தும் நிகழ்வுகளை எதிர்த்த அகில இந்திய மாதர் சங்கத்தின் தலைவர் இவர்..

நட்சத்திரங்களின் ஒளிப் பிழம்புகளில் சுடர் விடும் நம்பிக்கை வார்த்தைகள் ...அணையாத ஒளியில் ஆயிரமாயிரம் சூரியன்கள்.....

அவர்,


இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சி ராணி படைத் தளபதி "கேப்டன் லக்ஷ்மி!"

எழுதியவர் : கார்த்திகா AK (16-Feb-15, 7:51 pm)
பார்வை : 243

மேலே