விதி விலக்கு

“டாடி இன்னிக்கு சத்யா மிஸ் எனக்கு லன்ச் ஊட்டி விட்டாங்க” என்றாள் மாலு குட்டி.
“யாரையும் தொந்தரவு செய்ய கூடாது குட்டி.”
‘அவங்களே தான் வந்து ஊட்டி விட்டாங்க . நான் கேக்கவே இல்ல டாடி.” மாலு சொன்ன சத்யா மிஸ் மோகனுக்கு தெரியும்.
மோகன் ஒரு ஹார்ட்வேர் கடை முதலாளி. ஏழு எட்டு பேர் வேலை செய்யும் பெரிய கடை அது. மோகன் தினமும் காலையில் மாலினியை பள்ளியில் விட்டு விட்டு வந்து கடை திறப்பது வழக்கம். மாலையில் கடை வேலையாட்கள் எவராவது மாலுவை அழைத்து வருவார்கள்.
அன்று செப்டம்பர் 7 வழக்கம் போல கடைக்கு லீவு விட்டிருந்தான். மாலுவை அழைத்து வர மோகன் தன் புது Honda காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அன்று கணக்கு பரிட்சை. எப்படி செய்திருப்பாளோ? இரவு நெடுநேரம் அப்பாவும் பொண்ணும் கணக்கை போட்டு கசக்கி இருந்தார்கள். மதியம் 12.40 ஆகி விட்டது. பெல் அடித்து 10 நிமிடம் ஆகியிருக்கும். காரை வேகமாக செலுத்தினான். சற்று தூரத்தில் கூட்டமாக மக்கள் நின்று கொண்டிருப்பதை பார்த்து வேகத்தை குறைத்தான். அப்போது அருகே இருந்த கோவிலுக்குள் இருந்து அம்மன் அலங்காரத்துடன் பல்லக்கில் வர சாலை முழுவதும் அடைக்கப்பட்டு விட்டது. பின்னால் ஒரு பேருந்து வந்து நிற்க மோகன் வேறு வழி இல்லாமல் காரை ஆப் செய்து விட்டு காத்திருந்தான். பத்து நிமிடம் ஆகியும் கூட்டம் கலையவில்லை. அப்போது தான் போன் அடித்தது.
‘ஹலோ நான் ஸ்கூல இருந்து சத்யா மிஸ் பேசறேன். மோகன் சார் தானே? மாலினியை கூட்டிட்டுப் போக யாரும் வரலயே.”
‘நான் வந்துட்டு இருக்கேன். இங்கே ஒரு ரோடு ப்ளாக். இன்னும் பத்து நிமிசத்தில வந்து விடுவேன். தேங்ஸ் மேடம்.”
மோகன் வந்து சேர அரை மணி நேரம் ஆகியது. மாலினியும் சத்யா மிஸ்ஸ_ம் வண்டி பார்க் செய்யும் இடத்துக்கு அருகே இருந்த கேண்டீனில் இருந்தார்கள். மாலு ஏதோ வாயில் போட்டு மென்று கொண்டிருந்தாள். காரை நிறுத்தி விட்டு வந்த மோகனை மாலு தன் மிஸ்ஸ{க்கு அறிமுகப்படுத்தினாள். ‘மிஸ் இது தான் மோகன் டாடி.”
‘ஹலோ சார். நான் மாலினி க்ளாஸ் டீச்சர் சத்யா. நான் கிளம்பும் போது தான் பார்த்தேன். தனியா விளையாடிட்டு இருந்தா. அதான் போன் பண்ணினேன். டீ சொல்லட்டுமா சார்.”
‘வேண்டாம் மேடம். தேங்ஸ். வழக்கமா கடைப் பையன் வருவான். இன்னிக்கு கடை லீவு. கொஞ்ச நேரம் ரோடு ப்ளாக் ஆயிடுச்சு. ஏதோ கோயில் விசேஷம் போல.”
‘ஆமா சார் பக்கத்தில ஒரு அம்மன் கோயில் இருக்கு. மாலினி போய் ராகுலை கூட்டிட்டு வா.”
தூரத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை அழைக்க மாலினி ஓடினாள்.
‘ராகுல் என் மகன் சார். அவனும் மாலினி கிளாஸ் தான் செகண்டு B.”
‘மாலு நாலு வருசமா இங்கே தான் படிக்கறா. உங்கள நான் பார்த்ததில்லை.”
‘நான் இந்த மே மாசம் தான் ஜாயின் பண்ணினேன். முன்னே சென்னையில இருந்தோம்”
‘ஓ அவங்க அப்பா என்னவா இருக்கார்?” மோகன் கேட்டான்.
‘சார்”
‘ராகுல் அப்பா என்னவா இருக்கார்?” மீண்டும் கேட்டான் மோகன்.
‘மில்ட்ரி சார். ஆர்மி டில்லி” என்று தடுமாறி பதில் வந்தது சத்யாவிடம் இருந்து. இந்த கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை போலத் தெரிந்தது.
குழந்தைகள் இருவரும் வந்து விட ‘பை பை” சொல்லி பிரிந்தார்கள் இருவரும். பள்ளி மெயின் கேட் பக்கத்தில் speed Breaker அருகே மீண்டும் சந்தித்தார்கள்.
‘சார் மாலினி அம்மாகிட்ட தினமும் டிபன் பாக்ஸ்ல ஏதாவது வெஜிடபிள் கொடுத்தனுப்ப சொல்லுங்க.”
‘மிஸ் எனக்கு அம்மா இல்லை. இறந்துட்டாங்க. அதனால தான் எப்பவும் செப்டம்பர் 7 கடை லீவு.” என்று சொல்ல ஆடி போனாள் சத்யா.
‘எனக்கும் அப்பா இல்லை. கன் பைட்டிங்ல இறந்துட்டாங்க” என்று ராகுல் சொல்ல அதிர்ந்து போய் மோகன் சத்யாவை பார்க்க சட்டென்று வண்டியை இயக்கி சென்று விட்டாள்.
இது நடந்து ஆறு மாதங்கள் ஆகியும் இன்னமும் மனம் பழைய நிலைக்கு வரவில்லை இருவருக்கும். ‘எனக்கும் அப்பா இல்லை” என்று சொன்ன அந்த பிஞ்சு முகத்தை மறக்க முடியவில்லை மோகனால். ஸ்கூலுக்குள் செல்வதை தவிர்த்தான் சத்யாவை பார்த்து விடுவோமோ என்று பயந்தான். கண்ணை மூடிக்கொள்ளலாம். மனதை என்ன செய்ய. அதே நிலையில் தான் இருந்தாள் சத்யாவும். மாலினியை தினமும் பார்க்கும் அவள் மனதை வேலையில் முழு கவனம் செலுத்தமுடியாமல் தவித்தாள்.
மன உறுதி கொண்ட இருவருக்கும் இது ஆச்சர்யமாக இருந்தது. மறுமனம் செய்து கொள்வது பற்றி பேசிய உறவினர்களை எளிதாக தவிர்த்தவர்கள் இருவரும். இப்பொழுது என்ன நடக்கிறது? என்ன சொல்கிறது மனம்? தன் நிலையில் இருக்கும் ஒருவரை பார்த்ததால் மனம் குழம்பிவிட்டதா? இருக்காது. குழந்தைகள் அன்று சொன்ன வார்த்தைகள் தான் பாதித்து விட்டது. இன்னமும் கொஞ்சம் நாள் போனால் சரியாகி விடும் என்று நினைத்தார்கள் இருவரும். ஆனால் நிலை மாறவில்லை. மாலு தினமும் சத்யாவைப் பற்றி ஏதாவது பேசினாள். ஒரு முடிவுக்கு வந்தவனாக மோகன் துணிந்து சத்யாவை சந்தித்து பேசினான். ஞாயிற்று கிழமை மருதமலைக்கு வர முடியுமா என்று கேட்டான். பேசிவிடுவது தான் தன் மனதுக்கும் நல்லது என்று நினைத்த சத்யா சரியென்று சம்மதித்தாள்.
வடவள்ளி பேருந்து நிலையத்தில் டிபன் சாப்பிட்டார்கள். அப்போது மோகன் சுற்றி வலைக்காமல் பேசினான்;.
‘நான் உங்கள கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன் ”
இதை எதிர்ப்பார்த்து இருந்தாள் சத்யா. அமைதியாக இருந்தாள். பின் மீண்டும் பயணம் தொடர்ந்த போது சொன்னாள்
‘என்னால வேற ஆம்பள கூட ..” குரல் தடுமாறியது. கண் கலங்கியதை மறைக்க தலையைத் திருப்பிக் கொண்டாள்.
பாரதியார் பல்கலைகழகத்திற்கு அருகே காரை நிறுத்தினான் மோகன்.
‘மாலு பிறந்த மறுநாள் காலை வரை இரண்டு பேரும் நல்லா தான் இருந்தாங்க. திடீர் என்று பல்ஸ் குறைய அவ அம்மாவ ஐசியுக்கு கொண்டு போயிடாங்க. கடைசியா பாத்த அவ முகம் என் கண் முன்னால அப்படியே இருக்கு. இன்னமும் என் மனசு நிறைய அவ தான் இருக்கா. மறுபடியும் கல்யாண வாழ்க்கைய நான் எப்பவும் நினைச்சு பாத்ததில்ல. குழந்தை இரண்டும் எனக்கு அம்மா இல்லை அப்பா இல்லெணு சொன்னப்ப நான் ரொம்ப அப்செட் ஆயிட்டேன். நீங்களும் அவரை மறக்க வேண்டியதில்லை நானும் என் மனைவியை மறக்க வேண்டியதில்லை. இந்த குழந்தைகளுக்கு அப்பா அம்மா இல்ல என்ற நிலைய நம்மால் மாற்ற முடியும். அதுக்காக தான் கேட்டேன். இந்த மன இறுக்கத்தில் இருந்து வெளிய வர இதை உங்ககிட்ட பேசுவதை தவிர எனக்கு வேற வழி தெரியல. உங்க முடிவு எப்படி இருந்தாலும் சரி. “
மலையில் முருக பெருமானை தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கும் போது பூசாரி கொடுத்த பூவை தலையில் வைத்துக் கொண்ட சத்யா சொன்னாள்
‘உங்களுக்கு இன்னிக்கு நேரம் இருந்தால் அப்பா கிட்ட வந்து பேசுங்க”
வாழ்க்கைப் பாதையை சற்று அகலப்படுத்திக் கொண்டார்கள். உடன் வந்தவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி அளிக்க முடிந்தது. இவர்கள் எடுத்த முடிவில் குழந்தைகளை விட அதிகம் மகிழ்ந்தவர்கள் சத்யாவின் தந்தையும் மோகனின் தாயாரும் மருதமலை முருக பெருமானும்.

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (17-Feb-15, 3:10 am)
பார்வை : 335

மேலே