புருவகாலம் 4 - எனக்கொரு கேள்வி இருக்கிறது

என் தெருவில் மச்சு வீடுகளே இல்லாத ஒரு நேரத்தில் பெரும்பாலும் வானத்து நட்சத்திரங்களை பார்த்தபடி உறங்காத இரவுகள் எங்களுக்கு வாய்க்கவேயில்லை.

மேற்கு நோக்கி கிழித்த கோடுபோல மண்ணெண்ணெய் விளக்கொளியிலும் மங்கலான வண்ணத்தில் யதார்த்த மக்களை சுமந்து கொண்டு பார்வைக்கு லயித்து கிடக்கும் எங்களின் தெரு.

இரவுநேரம் ஆனதோ என்னவோ என் மக்களின் வீடுகளில் பலர் தெருவில் வந்து உட்காந்து விடுவார்கள். அரவங்கள் திரும்பிய பொழுதுகளில் நிலா கீற்றின் சாரங்கள் சன்னமாய் வீதிகளில் விழ ஆரம்பித்திருக்கும். ஆங்கங்கே செய்து கிழித்த வேலைகளைப் பற்றி வாய் அளந்துகொண்டிருக்கும். சிறுபிள்ளைகள் விளையாட்டுக்கு பொய் சொல்வதைப் போல்.

மணியார் வீட்டு வயலைத் தாண்டி கேநியாங்கரையிளிருந்து வரும் காற்று மேலத்தெருவுக்குள் நுழையும்போதே அத்தனை புழுக்கத்தையும் கடந்து ஒரு ஏகாந்தம் நம்மை தழுவுவதை நாம் உணரமுடியும்.

யாரோ ஒருத்தர் குடித்துவிட்டு வரும்போதே கேட்ட வார்த்தைகளால் பாடிக்கொண்டே வருவார். எவனோ ஒருவன் இருட்டில் நாய்களிடம் சிக்கி கடிப்பட்டு ஓடுவான். யாரோ ஒருத்தி படிக்காமல் விட்டதால் அடிவாங்கி கொண்டிருப்பாள்.. இன்னும் இப்படி நிறைய.

ஒட்டடைகளால் கூரையமைத்து தெற்கு முகம் பார்த்த என் வீட்டுதிண்ணையில் உதிர்ந்து கொண்டிருக்கும் மண் சுவற்றுக்கு அருகே உருவம் இழந்துகிடக்கும் கோரை பாயின் மத்தியில் கொசுக் கடியால் நாங்கள் விழித்துக் கிடக்கையில்... ஏதாவது ஒரு கதையை சொல்லி எங்களை உறங்க செய்வது எனது பாட்டிக்கு கைவந்தகலை. இவள் அம்மாவின் அம்மா.

அவள் உருவத்தை மறக்காமல் இருப்பதற்காய் இன்று வரை அவ்வையாரையும் மறக்காமல் இருக்கிறேன். ஆம், என் பாட்டி நான் சிறுவயதில் படித்த புத்தகத்தில் இருந்த அவ்வையாரை ஒத்து காணப்படுவாள்.

அதனால் என் நண்பர்கள் அவள் நடந்து வருவதை தூரத்திலிருந்து பாத்துவிட்டால் என்னிடம் வந்து உங்க அவ்வையார் பாட்டி வர்றாங்க என்று சொல்வது வழக்ககம்.

அவ்வையாரின் படத்தை எங்காவது நான் பார்த்துவிட்டால் எனக்கு என் பாட்டியின் ஞாபகம் வந்துவிடும். ஆனால், அவள் இல்லாத இந்த உலகில் நான் யாரிடம் சொல்வேன் இதை. கே பி சுந்தராம்பாளின் உருவத்தைத்தான் நான் இன்னும் அவ்வையாரென்று பொத்தி வைத்திருக்கிறேன். திருவள்ளுவனைப் போல, இயேசுவை போல..

அவள் ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும் கையில் ஒரு மஞ்சள் பை நிறைய தின்பண்டம் கொண்டுவருவாள். அது அதிரசமாகவோ அல்லது முறுக்கு வகையாகவோ இருக்கும்.

அப்படி அவள் எங்களை பார்க்க வந்திருந்த பொழுது நிலவொளியில் அவள் சொன்ன கதைகளை கேட்டபடியே உணவு உண்ட தருணம் மறக்கவே முடியாதது. இப்போது அவள் இல்லை. அவளோடு நானும் இல்லை.

நீண்ட இடைவெளிக்கும் மௌனத்துக்கும் பிறகு நான் இருக்கிறேன். எனக்கொரு கேள்வி இருக்கிறது உங்களுக்கிருப்பதைப் போல.,

அப்போதெல்லாம் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பிள்ளைகளும் பெற்றவர்களும் சேர்ந்து உணவுஉண்ணும் நிகழ்வு மிக சாதாரணமாக நடக்கிற ஒன்று. ஆனால், ஒரு 20 ஆண்டுகள் கடந்து பார்க்கையில் எந்த மனிதனும் இந்த அனுபவத்தை பெருகிறதாய் இல்லை. இப்போதெல்லாம் தெருக்களில் அமர்ந்து உண்பது அவர்களின் கௌரவத்தை குறைத்துவிட்டதாய் நினைக்கிறார்கள் என் மக்கள்.

இந்த புதிய வாழ்க்கை எங்கிருந்து எங்களுக்கு வந்ததென்று நான் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். சொல்வதற்குதான் ஆளில்லாமல் இருக்கிறது என் அறையில்.

எழுதியவர் : வரலாறு சுரேஷ் (17-Feb-15, 10:40 pm)
பார்வை : 111

மேலே