வாழ்க்க வாங்கலையோ வாழ்க்க

இரண்டாயிரத்து நூறு,

விவசாயம் ஒழிந்து
இயற்கை அழிந்து - முற்றிலும்
மாறுபட்ட பூக்கோளம்...

எதோ ஒருசில பணக்காரர்கள்
மாத்திரை போட்டு
சில மரங்களை வளர்த்திருந்தார்கள்...

அதை
அதிசயமென்று பலர்
வேடிக்கை பார்ப்பதற்கு
வந்து போனார்கள்...

பூமி
வெப்பமாகி போனது...

கடல் காய்ந்து கிடந்தது...

காற்று உலையாய் கொதித்தது...

எங்கும் எந்திரங்கள் மட்டுமே
எஞ்சி கிடந்தன....

பலர் உருகி கருகி கிடந்தார்கள்,
இன்னும் பலர்
குளிர்சாதன இயந்திரங்களை
பொருத்திக்கொண்டு வாழ்ந்தார்கள்...

எல்லோரும் ஆடையின்றி
அம்மணமாகவே திரிந்தார்கள்...

வசதியானவர்கள்
தங்கத்தையும் வெள்ளியையும்
பித்தளையையும் ஆடையாக
அணிந்திருந்தார்கள்....

கூடையில் வைத்துக்கொண்டு
கூவிக் கூவி விற்கிறாள் பாட்டி...

வாழ்க்க வாங்கலையோ.... வாழ்க்க.
வாழ்க்க வாழ்க்க....
வாழ்க்க வாங்கலையோ வாழ்க்க...

தெருவின் முச்சந்தியில்
தகர கூடையை
இறக்கி வைத்தாள் மூதாட்டி...

அவளை ஒரு கூட்டம் சூழ்ந்தது...

யம்மோவ், வாழ்க்க என்னா வெல..?

பத்துக்கு வாங்குனா
ஒருநாள் பசிக்காது...

நூறுக்கு வாங்குனா
ஒருவாரம் பசிக்காது...

ஆயிரத்துக்கு வாங்குனா
ஒருமாசம் பசிக்காது...

மாத்திரைகளை பலரும்
வாங்கிச் சென்றார்கள்..

அதையும் வாங்க வக்கற்ற ஏழைகள்
பசிக்கிள்ளும் வயிற்றோடு
வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்தார்கள்..!


-----------------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (17-Feb-15, 6:17 pm)
பார்வை : 172

மேலே