வரலாற்று யாத்திரைகள் 14

நீல வானம் முழுக்கப் பஞ்சுப் பொதிகளாய் மேகம்.. ஊரெல்லாம் உறங்க, தூத்துக்குடி துறைமுகம் அந்த அதிகாலைப் பொழுதிலும் சுறுசுறுப்புடன் காணப்பட்டது. இரவில் இரையெடுத்து விட்டு கடலின் இரைச்சலையே தாலாட்டாகக் கொண்டு கப்பலின் மேல் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த கருடக் கழுகுகள் கூட்டம் கூட்டமாக எழுந்து கடற்கரையில் வைக்கப்பட்ட சரக்குகளில் தங்களுக்குத் தோதாக ஏதும் கிடைக்குமா என்று பார்த்தன. சில வெண்கால் கூர்மூக்கிப் பறவைகள் பஞ்சுப் பொதியைக் கொத்தி கூடு கட்ட பஞ்செடுத்துக் கொண்டன.

நூறாண்டு காலமாக பல்வேறு காலடித் தடங்களை கண்ட கடற்கறை. மூன்று மாமனிதர்களின் பாதச்சுவடுகள் இங்கு மட்டுமல்ல, சரித்திரத்திலும்.. !

மீண்டால் கப்பலோடு; இல்லையேல் கடலோடு என்று சொல்லிப் போனவர் வந்தது கப்பலோடு.

இவரோடு போட்டியிட முடியாமல் தமது சரக்கு கட்டணத்தை பாதியாக, கால்வாசியாக குறைத்தனர் வெள்ளையர்; பலனில்லை!

“வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம்,-அடி
மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்.
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்- எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்”- என்று துடித்தெழுந்து பாடினார் இவர் இன்னுயிர் நண்பர் அமரகவி.

விடுதலை வேள்வியில் தோளோடு தோள் நின்று தமது ஆற்றலால் வெள்ளையனை அச்சுறுத்தி சிறையிலும் வெளியிலும் நிழலாய் நீடித்த இவரது இன்னொரு நண்பர் சுப்பிரமணிய சிவா!!

தமது நண்பர்கள் விடுவிக்கப்பட்டாலன்றி தாம் வெளியே வர முடியாது என்று மறுத்து இரட்டை ஆயுள் தண்டனைக்கு ஆளாகி செக்கிழுத்த செம்மல் அவர்!

உலக அரங்கில் தங்களை நாகரிக மனிதர்களாக வெள்ளையர்கள் காட்டிக் கொள்ள முயன்றபோது அதனால்தான் மனிதரை செக்கிழுக்கச் செய்தீர்களா என்று வீசப்பட்ட கேள்விக்கு கொள்ளையர்களாகிப் போன வெள்ளையர்களிடம் பதிலில்லை!

மூவருக்கும் சுதந்திர வேட்கை நெஞ்சத்தில்; வாழ்க்கை நகர்ந்ததோ பஞ்சத்தில்!

ஒரு பஸ்ஸை வாங்கி ஓட்ட முடியாமல் திணறுகிறது இன்றைய அரசு.

அடிமை இந்தியாவில் நிதி திரட்டி ஒன்றல்ல, இரண்டு கப்பல்கள் வாங்கி ஆங்கிலேயருக்கு எதிராக கடல் வாணிகம் செய்ய....... தேசபக்தி மட்டும் போதாது!!

தூத்துக்குடியின் சரக்குகள் எஸ்.எஸ். கல்லியோ, எஸ்.எஸ். லாவோ என்ற இரு கப்பல்களில் ஏற்றப்பட்டன. சற்று நேரத்தில் சங்கு ஊதியது. கப்பல் கொழும்புவுக்கு புறப்பட ஆயத்தமானது.

நுரை தள்ளும் நீலக்கடலில் ஒரு கோப்பையைப் போல அசைந்து சென்றது கப்பல். அதன் பக்கவாட்டில் பொன்னெழுத்துக்களில் சுதேசிய கப்பல் கம்பெனி என்ற பெயர் காணப்பட்டது.

கப்பலின் முகப்பில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் என்ற பெயரைத் தாங்கிய நிலையில் அவர் சிலை இருந்தது.

நவம்பர் பன்னிரெண்டு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஆறாம் ஆண்டில் ஓடத் துவங்கியது கப்பல். இன்னும் அதன் ஓட்டம் தடைப்படவே இல்லை!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (18-Feb-15, 4:05 pm)
பார்வை : 142

மேலே