வா வா வா

ஏழைகள் பலர்
உறங்கா இரவுகளின் மிச்சங்களை
எங்கே ஒளித்துவைத்தனர்...?
விழுங்கிய பகல் எப்படி
இப்படி இன்னமும் மின்னுகிறது...?

குபேரர்கள் கூடி
பிறர் உழைப்புக் குருதி குடித்துக்
களித்து கும்மாளமிட்ட
பகல்களின் மிச்சங்களை
எங்கே ஒளித்து வைத்துள்ளனர்..??

ஏழ்மைப் பற்றியும்
உழைப்புறுஞ்சும் கொடுமைப் பற்றியும்
எல்லோருமா எழுதி தீர்த்துவிட்டனர்??
சொற்களுக்கு ஏனிங்கு பஞ்சம்...?

பகலும் இரவும்
பூவுலகின் இரு கண்கள்...
அறிவும் ஞானமும்
இரு ஒளிவட்டுகள்..
ஆதவனும் நிலவும்...
ஆதவனாய் அறிவு
நிலவாய் ஞானம்..
நிலாவாய் குளிர்பவன் ஞானி...!
சூடாய் இருப்பவன் அறிவாளி...!!

அறிவின் அடித்தளம் சொற்கள்
பின் ஞானம் எதன் மூலம்...?

அறிவின் எச்சங்கள்
எங்கு ஒளிந்துள்ளன...?
ஞானத்தின் வழிதல் எங்கே
சிதறிக் கிடக்கின்றன...?

அன்றியும்
உன் எழுதுகோலின் வெளிச்சத்தால்
இரவின் பகல்களை
ஞானத்துடன் வெளிக்கொண்டு வா..!!

பகலுக்கு இன்னும்
ஞான ஒளியேற்று ,வா..வா...

எழுதியவர் : அகன் (18-Feb-15, 7:37 pm)
பார்வை : 87

மேலே