புருவகாலம் 5 - அந்த இரண்டு புளியமரத்தில்
அப்போது எனக்கு பத்து வயது இருக்கும் என்றே நினைக்கிறேன். காக்கி சட்டையின் காவலுக்குள்தான் எனக்கான கற்பு இருந்தது அப்போது.
அப்போதெல்லாம்...சனி ஞாயிறு இரண்டும் எனக்கான வசந்த காலங்கள். அந்த நாட்களில்தான் நான் அடுத்த வாரத்துக்கான திட்டங்களை வகுத்தெடுப்பது வழக்கம். குளம் குட்டை எங்கிருக்கிறதென தேடி பிடித்து ஓரி விளையாடி நீந்தி களிப்பதும் பழக்கம்.
வேப்பங் கொட்டைகளை பொறுக்கியபடி பயணிக்கும் என் பள்ளி பிராயத்தின் கிழமைகளை கூட நான் பொருட்படுத்தியதேயில்லை .
அப்போதெல்லாம் இலுப்பையும் புளியமரமும் சாலையின் இருபக்கமும் நெருக்கமாய் இருக்கும். அதனால் ஒருபுறம் இருள் நிறைந்த பகுதியென கருதி சிறிது அச்சப்படினும் மழைக் காலங்களில் மேய்ச்சல் இல்லாத ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் நாங்கள் இலை தழைகளை வெட்டி தலையில் சுமப்பது இந்தப் பகுதியாகத்தான் இருந்தது.
கல்லிப்பழமும், கரும்பும் விரும்பி உண்ட பருவம் அது. அந்தியின் வாசம் வருவதை...மேய்ச்சலை விட்டு கட்டுதரிக்கு செல்லும் மாடுகள் சொல்லிவிடும் எனக்கு.
அப்பா அப்போதுதான் இரண்டு புளியமரங்களை குத்தகைக்கு எடுத்திருந்தார். விடுமுறை நாட்களில் அதை காவல் செய்வது என் பொறுப்பு. இல்லையேல் காற்றின் தீரத்தில் கொட்டிதீர்க்கும் பழங்களை யாரேனும் பொருக்கி செல்ல கூடுமே. அப்படி யாரேனும் பொருக்குவதை பார்த்திருந்தால் செறுப்பு பிஞ்சிடும் எனக்கு.
பின்ன... செங்கள் சூலையில் வாழ்க்கையை தொலைத்துவிட்ட அப்பா அதை எங்களிடம்தான் தேடிக்கொண்டிருந்தார். நாங்களாவது நன்றாயிருக்கவேண்டுமென்கிற ஆசை அவருக்கு. அதனால் தான் புலியமரத்துக்கு என்னை காவலுக்கு போட்டிருந்தார் அப்பா.
காற்றில் வெம்மை இருப்பதை எனக்கு தெரிந்து நான் அங்குதான் அதிகம் படித்திருக்கிறேன். ஏதோ என் வீட்டு சொந்த மரத்தை காவல் காப்பது போல இருந்தது அப்போது எனக்கு. ஒரு கர்வம் ஒரு மகிழ்ச்சி என்னவென்று சொல்ல முடியாத ஒரு சந்தோஷ உணர்வு.
தென்பக்கத்தில் இருக்கும் மரத்தின் புளி அளவில் சிறியதாக இருந்தாலும் அது சுவையாக இருக்கும். அதனால், பசிவரும் நேரமெல்லாம் அந்த மரத்தின் புளியை ஒரு பதம் பார்த்துவிடுவேன்.
அதோடு அந்த மரத்தை பார்த்தாலே அப்போதெல்லாம் என் நாக்கில் எச்சிலூறும். அது மட்டுமில்லாது என் சிறு வயதில் புளிய மரத்தின் தளிர் (கொழுந்து) இலைகளை பறித்தும் சாப்பிட்டிருக்கிறேன். அதுவும் கூட சுவையாகத்தான் இருக்கும் வரண்டுபோன நாக்குக்கு.
அந்தி சாயும் நேரம் வரை எனக்கு பிடித்த வடக்கு பக்க மரக்கிளையில் படுத்திருப்பேன். அதில் பெரிய அளவிலான மூன்று கிளைகள் கிளைத்திருக்கும் பகுதியில் கொஞ்சம் குழிவான இடமிருந்தது. அதனால், எந்தவித எரிச்சலும் இல்லாமல் புளிய மரத்தின் கிளையில் மௌனத்தை ஒப்படைத்துவிட்டு ஏதேனும் ஒரு பாடலை பாடியபடி சாலையை வேடிக்கை பார்த்து கிடப்பேன்.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஏதேனும் ஒரு சாதிக்கலவரம் இந்த சாலையில் நடந்து கொண்டேயிருக்கும். எத்தனையோ மனிதர்களின் மண்டை உடைந்திருக்கிறது இங்கு. 1985 ஆம் ஆண்டுவாக்கில் நடந்த ஒரு கலவரத்தில் ரெட்டியூரை சேர்ந்த பாண்டியன் சுட்டுக்கொள்ளப்பட்டது இங்குதான்... அதன் பிறகு அவர் ஹீரோவானது தனிகதை.
சாதி வளர்ந்தது. மனிதர்களை தவிர...!
அதனால், இன்றுவரை இந்த பகுதியில் உள்ள மக்களிடம் ஒருவித சாதிய வெறுப்புணர்ச்சி இருக்கத்தான் செய்கிறது.
தெக்கு ரோட்டில் ஒரு அரைமைல் தூரம் சென்றால் வந்துவிடும் என் கிராமத்தை அடுத்த கிராமம் குறுங்குடி. மலர்களை விதைத்துவிட்டு சில நேரம் மரணத்துக்காக தவம் கிடக்கும் பூமி அது. எந்நேரமும் உழைக்கும் மக்களை நான் அங்குதான் அதிகம் பார்த்திருக்கிறேன். இருப்பினும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சபிக்கப்பட்ட இன்னும் எத்தனையோ சமூகத்தை சேர்ந்த என் மக்கள் எப்போதும் சாதியின் காலரை தூக்கி விட்டபடிதான் ஒவ்வொரு மணியின் துளியிலும் பயணித்து கொண்டிருந்தார்கள்.
அதனால், வெட்டு குத்து என தொடங்கி காவல்துறையின் கட்டுபாட்டுக்குள் வரும் போது அது போராட்டமாய் வெடித்து சிதறும். இப்படியான கலவரங்கள் கணக்கிலடங்காதவை.
உச்சி வெயில் ரத்தத்தை குடிக்கும் சமயத்தில் ஏதேனும் ஒரு வயலின் வரப்புகளில் நடந்தபடி பதநீர் கொண்டுவரும் முருகேசன் அண்ணனின் குரல் கேட்கும் என் காதுகளுக்கு. நெடுக்க பிளந்து போட்ட இரண்டு மூங்கில் துண்டுகளில் இரண்டு முனைகளிலும் கட்டப்பட்ட உரி பானையோடு அவர் பதநீரையும், ஒரு பக்க பானையில் கள்ளையும் சுமந்துவரும் காட்சி நம் கண்ணை மறைக்கும்.
கானல் நீர் தகிக்கும் கட்டாந்தரையின் தேகமெல்லாம் வெயிலால் வெந்து துவளும் நேரத்தில் கள்ளும், பதநீரும் அருந்துவது எத்தனை சுவை. சரியாய் அந்த நேரத்தில் எங்கிருந்தோ அப்பா வந்து அதை வாங்கி தருவார். அடடா...சொல்லவா வேண்டும்.
அப்பாவும் முருகேசன் அண்ணனும் புறப்பட்டப் பிறகு ஏதெனும் ஒரு பழைய எழுத்தாளர்களின் புத்தகத்தோடு கழியும் புளியமரத்து காவல் பணி எனக்கு. சரியாய் பசி அடிவயிற்றை கிள்ளும்.
ஊரெல்லாம் புகைமூட்டம் சிந்த அந்தி சாய்கிற தருணத்தில் கருவேலமரமும், காட்டாமனியும், அடுப்பிற்கு விறகாய் எரிந்து கொண்டிருக்கும், சுவாசத்தின் வானமெல்லாம் வயிறுமுட்ட புகையை விழுங்கியபடி பெற்றவளின் இரவுகள் எங்களுக்கான உணவை தயார் செய்திருக்கும்.
அதனால்தானோ என்னவோ இப்போதெல்லாம் அம்மா இருமினால் கூட... கூடவே எங்களுக்கும் வலி எடுத்து கொள்கிறது. ஆனால் அருகிருந்து பார்க்கத்தான் முடியவில்லை எங்களால்.