வெண்பா - தவமா தரிசனமா

சொற்கள் தமையடுக்கிச் சொன்ன தளைகட்டி
நிற்பர் கவிதை நிரப்புவர் - சிற்பி

சிலைதன்னை ஊன்றிச் செதுக்குதல் போலே
பலகாலம் நோற்றேபா யாப்பர் - உலகத்தார்

நன்றென்னும் அந்த நறுஞ்சொல்லைக் கேட்கவே
என்றென்றும் நெஞ்சத்தில் ஏங்குவர் - ஒன்றே

தொழிலென்று கொண்டே தொழில்படுவர் பாட்டில்
எழில்கொண்டு வந்திடவே எண்ணிப் - பொழில்தேடிச்

சோலை வனந்தேடிச் சொல்லா இடந்தேடிக்
காலை இரவென்று பாராமல் - மூளையும்

தொந்திரவில் லாமல் தொழில்பட வேண்டியே
தந்திரங்கள் செய்யத் தலைப்படுவர் - மந்திரம்போல்

இத்தனை செய்தும் இரங்காத இன்கவி
சித்தெனத் தோன்றும் சிறுநொடியில் - அத்தனையும்

சாலமோ மாயமோவெண் தாமரை யாள்தந்த
சீலமோவென் றெண்ணிச் சிலிர்க்கையிலே - நாளும்

இருந்த தவத்திற் கிரங்காதே இன்றோர்
அரிய நொடியில் அருளேன்? - புரிய

முடியாத மாய முழுமுதலோ? ஊன்றிப்
படியாத எந்தன் பவமோ? - அடியார்தம்

அன்பிற் கிளகுமவ் ஆண்டவன்போல் பாட்டும்நம்
என்பில் உருகி எழுவதோ? - என்றால்

அவனியிலே வெண்பா அடுக்குபவ ரெல்லாம்
தவமிருந்து பெற்ற தரமோ - நவநவமாய்ச்

சாற்றுகின்ற பாக்கள் தனிவரமோ? ஓர்நொடியில்
ஊற்றெடுக்கும் உண்மைத் தரிசனமோ? - மாற்றுரைக்க

யாரும் இருக்காத ஏகாந்த வேளையிலே
ஊறும் இதற்கோர் உரை!

[நேரிசைக் கலிவெண்பா]

குறிப்பு: நன்றி: பேரா.மரு.வ.க. கன்னியப்பர்

கலிவெண்பா வெண்பா வகைகளுள் ஒன்று.
இது இன்னிசைக் கலிவெண்பா, நேரிசைக் கலிவெண்பா என இருவகைப்படும்.
இன்னிசைக் கலிவெண்பா பதின்மூன்று அடிகள் முதல் பல அடிகளில் தனிச்சொல் பெறாமல் வரும்.
நேரிசைக் கலிவெண்பாவின் இரண்டிரண்டு அடிகள் ஒவ்வொரு எதுகையும் தனிச்சொல்லும் பெற்று கண்ணி என்ற பெயரில் பலவாக வரும்.
************
என் குறிப்பு:
பொதுவில் வெண்பா 4 அடியில் அமையும். 5 முதல் 12 அடிவரை அமைவது பஃறொடை (பல்+தொடை) வெண்பா எனப்படும். அதற்கு மேல் போனால் அது கலிவெண்பா.

எழுதியவர் : விஜயநரசிம்மன் (19-Feb-15, 8:46 pm)
சேர்த்தது : விசயநரசிம்மன்
பார்வை : 264

மேலே