உதாசீனத்தின் உயிரொலி

உதாசீனத்தின் வலியறியா
நீ
எனக்களித்த
புறக்கணித்தலின்
சன்மானங்களை
எனதிதய
வரவேற்பறையில்
பிறரறிய முடியாவகையில்
காட்சிப் படுத்தியிருக்கிறேன்
நிகழ்வுகளுக்கொன்றாய் !

உனது
திட்டமிடலுடன் கூடிய
ஒதுக்குததில்
எனது இடது மார்பில்
நீ குத்திய
உதாசீனத்தின்
பதக்கங்கள் -
ஆரிக்கிலுக்கும்
வென்ட்ரிகிலுக்குமிடையில்
மின்னலடித்துச்
ஜொலிக்கிற போதெல்லாம்
உனக்கான
இருள் பக்கங்கள்
எனக்குள் மட்டும்
பேருதயம் கொள்கிறது !

என்றாவதொருநாள்
ஏதோவோரிடத்தில்
உதாசீனத்தின்
கொடு முள்ளில்
நீயுனது
பாதம் பதிக்க
நேர்கையில் -
அன்றென் இதய வலி
உன் பாதவழியாக
நீயுணரக்கூடும்
அந்நாளில் -
உன் பாவமன்னிப்பின்
மண்டியிடலில்
உன் கால்முட்டி
பதிந்திருக்குமெனது
கல்லறை
உதாசீனமின்றி
உயிர்கொண்டுனை
ஆசீர்வதிக்கும் .

எழுதியவர் : பாலா (21-Feb-15, 10:23 am)
பார்வை : 115

மேலே