புருவகாலம் 7 - அப்பா வாங்கிய கடன்களில்
நாம் ஏதோ ஒன்றை பேசிக் கொண்டிருக்கும்போது ஞபகங்கள் எங்கேனும் சென்றுவிட்டு திரும்புவதை யாரும் மறுத்துவிடுவதில்லை. அப்படி ஒரு தருணத்தில் விழுந்து எழுந்தபோது, வெப்பக் காற்று வீசிப்போகும் சில ஞாபகங்கள் உள்ளூர கிடந்து நம்மை அரித்துக் கொண்டிருக்கிறன். அதை விடுத்துவிட்டு நம்மை தனியே எடுத்துவிட முடிவதில்லை.
அப்பா வாங்கிய கடன்களில் மத்தாப்புகளோடு புத்தாடைகளாய் மின்னிய தீபாவளி திருப்தியோடு மறைவதற்குள், மார்கழியின் உடல் மறைக்கும் பனியும், உஷ்ணத்தை சொரியும் குளிரும், வயலில் ஈரம் சொட்டும் அருகம்புல் சுமந்த வரப்பில் பெரிய வாய்க்காலருகே என் ஆடுகளை மேய்ச்சலுக்காய் ஓட்டிக்கொண்டு நடக்குபோதே நெல் முற்றி சாய்ந்து கிடக்கும் கதிர்களோடு வந்து நினைவு படுத்தும் தை மாதத்தின் வருகையை.
பட்டன் போடாத சட்டைகளே சிறகாய் விரிந்த காலத்தில், ஊரின் நான்கு புறங்களிலும் நெல் மணிகளால் வயல்கள் பழுத்து கிடப்பது கண்களுக்கு விருந்தாகவே இருக்கும். பொன்னிரமென்றால் அது இதுதான் என்பதை போல, கதிர்களை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளும் சந்தோஷம் அடடா.
ஆலங்குளத்திலிருந்தும் ஏரிக்கரையிலிருந்தும் பார்த்தால் ஊரே மஞ்சளால் போர்த்தியது போல அத்தனை பிரம்மை. இவ்வாண்டு அறுவடை திருவிழா சிறப்பாக அமையும் என்று நினைக்கும் தருணத்தில் பொங்கலின் வாசம் எங்கிருந்துதான் வீசுமோ தெரியாது அப்படி வீசும்.
இவற்றையெல்லாம் கடந்து ஒவ்வொரு நாளின் வாழ்க்கைக்காய் பெரும்பாலும் பகலில் எல்லோரும் வேலைக்கு சென்றிருப்பார்கள். குழந்தைகளும், சிறியவர்களும், வயதான பாட்டிகளும் தாத்தாக்களுமே அதிகம் நம் கண்களுக்கு தென்படுவார்கள் கிராமத்தில்.
உச்சி சூட்டில் கட்டிகிடக்கும் ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் தண்ணீர் காட்டுவதற்காய் வீட்டிலிருப்பவர்கள் கரம்புகளுக்கு சென்று வருவர். உச்சி வெயிலின் உக்கிரம் தாங்காத பெண்கள் தலையில் முந்தானையால் மறைத்துக் கொண்டு செல்வர். இத்தனைகளுக்கும் மத்தியில் அஞ்சல் காரர் கடிதம் கொடுக்கவேண்டிய வீட்டிலெல்லாம் பெல் அடித்தபடியே சென்று கொண்டிருப்பார். அவரின் காலடியில் அடிமாடாய் ஒரு ரப்பர் செறுப்பு கடந்து தேய்ந்து கொண்டிருக்கும்.
அப்போதெல்லாம் எங்கள் வீட்டு வாசலில் ஒரு செம்பருத்தி மரம் இருக்கும். அது என்னுடைய பெரிய அண்ணன் ஆசை ஆசையாக வளர்த்தது. முதன் முதலாய் ஒரு சின்ன குச்சியாக கொண்டு வந்து நட்டது. தினமும் அதை பார்த்துகொள்வது எங்கள் வேலை என்று அண்ணன் சொல்லிக்கொண்டிருக்கும் போதுதான் ஒரு ஆடு அதை பிடிங்கிகொண்டு ஓடிப்போனது. ஒருவழியாய் துரத்திக்கொண்டு ஓடி அந்த குச்சியை எடுத்து வந்து மறுபடியும் நட்டோம். பொத்தி பொத்தி வளர்த்தோம் என்பது போல…
அது நன்றாக வளர்ந்தது.
பலர் இதன் பூக்களுக்காகவும் தலையில் தேய்த்து குளிக்க இலைகளுக்காகவும் வீட்டிற்கு வந்து இருக்கிறவர்களிடம் பேசிக்கொண்டிருப்பார்கள். நாங்கள் யாரையும் எப்பொழுதும் பறிக்க வேண்டாமென்று சொன்னதேயில்லை. சொல்லவும் மாட்டோம், எல்லோருக்கும் சொந்தமானது போலத்தான் இது. ஊர் சொத்து இது.
காலையிலும் மாலையிலும் ஒரு இளவட்டக் கூட்டம் இதை சுற்றித்தான் பேசிக்கொண்டிருக்கும். அரசன் தாத்தா அப்பாவை தேடிக்கொண்டு வரும் போது இதன் ஓரமாகத்தான் எச்சில் துப்பி வைப்பார். அம்மா அவளுடைய இரண்டு செறுப்புகளையும் இதில்தான் ஏதேனும் ஒரு கிளையில் சொருகி வைத்திருப்பாள். அதிலும் ஒரு சிட்டுக்குருவி கூடு கட்டியிருந்தது. எத்தனை பேருக்கு பயன் தந்திருக்கிறது என் மரம். எனக்கும் இதுக்கும் ஒரு எட்டு வயதுதான் வித்தியாசம்.
துணிகளை சலவை செய்து தேய்த்து கொடுக்கும் முருகேசன் அண்ணன் பெரும்பாலும் இந்த மரத்தினடியில்தான் இஸ்திரி பெட்டியால் துணிகளை தேய்த்து கொண்டிருப்பார். முருகேசன் அண்ணனுக்கு நிறைய குடிக்கிற பழக்கம். சில நேரங்களில் மரத்தடியில் வண்டியை போட்டுவிட்டு போதையில் வண்டியிலேயே தூங்கிபோயிருப்பார். தூக்கத்தில் புரண்டுபடுத்து ஒருமுறை கீழே விழுந்த கதையும் உண்டு. பொருட்படுத்தப்படாமலே போனது வலி.
இதே சமயத்தில்தான் கீழத்தெருவில் மரவள்ளி கிழங்கு வியாபாரம் செய்யும் கம்பர் மாமாவின் சைக்கிள் கிழக்கு பக்கத்தில் இருந்து மேற்கு நோக்கி போகும் சத்தம் கேட்கும். கிழங்கு...கிழங்கு...என்கிற மாமாவின் சத்தம் ஊரையே அலை கழிக்கும். வீட்டு வாசலில் யாரும் சொல்லாமலே செம்பருத்தி மரத்தோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு ஒரு கிலோ கிழங்கை தராசில் நிறுத்தி அம்மாவை கூப்பிட்டு கொடுப்பார் கம்பர் மாமா. அம்மா சிரித்துக் கொண்டே, தம்பி காசில்ல எனசொல்ல வாயெடுக்கும் போதே..
அக்கா புடிக்கா மொதெல்ல... காசாம் பெரிய காசு, மாவு கிழங்கு கிடைக்கவே மாட்டேங்குது இன்னைக்கு என்னமோ அதிசயமா கிடைச்சதுங்கிறேன்.. சின்னவனே குண்டான எடுத்தாடா... நல்லா கழுவிட்டு கொஞ்சமா மஞ்ச தூளும் உப்பும் போட்டு வேக வச்சா எவ்ளோ ருசியாயிருக்கும் தெரியுமா? நேத்து சித்ரா செஞ்சிருந்தா.. மாமனுக்கு ரொம்ப புடிக்கும் மாமா வீட்டுலதானே இருக்காரு செஞ்சுகுடேன்" நா நாளைக்கு வர்ரேன் என்கிற மாமாவின் வார்த்தைகள் அவர் கடந்த பிறகும் அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும்.
எப்பா என்னா வெயிலுடா... என்கிற வார்த்தையோடு பாக்கெட்டிலிருந்த மிச்சமிருந்த ஒரு பீடியையும் எடுத்து பற்ற வைத்துக் கொண்டே அந்த அழுக்கு துண்டை எடுத்து வெளித் திண்ணையில் சுவரோரமாய் உதறிவிட்டு உட்காரும் அப்பாவின் லேசான வெள்ளை முடிகள் கலந்த தாடையை சொறிந்தபடி அவர் என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் அவரின் கண்கள் மீண்டும் ஒட்டடைகளால் நிரம்பிய பரண்களை பார்த்து ஏக்க பெரு மூச்சு விடும். அடுத்த வாரம் நடக்கும் ஏதோ ஒரு சொந்தகாரர் வீட்டு திருமணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்தபடியே…
அந்த பித்தல தவலை வேணாம்.., அது இப்பதான் மீண்டு வந்திருக்கு. ஏ புள்ள அந்த தூக்கு வாளி எங்க? அம்மாவிடம் கேள்விகேட்டு துளைத்தெடுக்கும் அப்பாவுக்கு ம்ம்... ஒன்கிட்ட ஒரே ரோதனையா போச்சு. எத்தன தடவ சொல்றது,.. போன மாசம் அமுதாவுக்கு வரிசை எடுக்க அத வச்சித்தானே குடுத்த. அதுக்குள்ள மறந்துரும்... ஒனக்கு" என்று எரிச்சலை கக்குவாள்.
அடுப்பங்கரை அருகே காலை நீட்டி உட்கார்ந்தபடி பழைய சோற்றை ஒருகையால் உப்பிட்டு கிளறிக்கொண்டே ஒரு கையால் கரண்டியிலெடுத்த குழம்பின் காரத்தை விரலால் தொட்டு நாக்கில் சுவை பார்த்தபடி சாப்பிட உட்க்கார்ந்திருக்கும் அம்மாவிடம் இப்படி ஏதாவது ஒரு பதில் இருக்கும். அந்த சமயத்தில் அவளின் தோரணை ஏதோ பெரிய உண்மையை சொல்லிவிட்டதை போல படும் எனக்கு.
தூரத்தே ஒரு புல்லட் வண்டி தெருவுக்குள் நுழைவது தெளிவாய் கேட்கும். தெருவில் சென்று கொண்டிருந்த வண்டி எங்களுடைய வீட்டு வாசலில் நிற்கும் சத்தம் கேட்டு வெளியே ஓடி பார்ப்பேன். வண்டியிலிருந்து கலியமூர்த்தி கலியமூர்த்தி என அப்பாவின் பெயரை சொல்லி அழைக்கும் பக்குவம் சதுருதீனை நினைவு படுத்தும்.
அப்பா வேலை செய்துகொண்டிருக்கிற இசுலாமிய பெரியவரின் இரண்டாவது மகன் சதுருதீன். அந்த வீட்டிலேயே அப்பாவோடு அதிக நேரம் செலவிடுவதும் அப்பாவை ஒரு வேலை ஆளாக கருதாமல் நண்பனைப் போல உரிய மரியாதை கொடுப்பதும் அனேகமாக இவராகத்தான் இருக்கும். பல நேரங்களில் அப்பாவை கேட்டுத்தான் எதையும் செய்தார். எந்த வயலுக்கு மருந்தடிகலாம்... எதற்கு களை பறிக்கலாம்.. யார் யாருக்கு இன்னும் எவ்வளவு பாக்கி இருக்கு? இவையனைத்துக்கும் அப்பாவிடம்தான் அவருக்கு பேச்சு. அப்பாவுக்கும் இவருக்குமான அன்யோன்யம் அப்படி.
விவசாயத்தை பற்றி அவருடைய மற்ற இரண்டு சகோதரர்கள் அறிந்திருந்ததை விட இவர் நன்றாகவே தெரிந்து கொண்டிருந்தார். அவரின் குரலை கேட்டவுடன் துண்டை உதறி தோலில் போட்டபடி அப்பா வெளியே எழுந்து போய் விடுவது ஒன்றும் புதியதல்ல, சதுருதீன் வரும் சமயங்களில் ஏன் இவர் வந்தார் என அப்பா வருத்தப்படுவதே இல்லை. மாறாக மரியாதையும் சந்தோஷமும் கூடி விடுகிறது இவருக்கு. பெரும்பாலும் சாப்பிட்ட கையோடு அம்மாவும் வாசலுக்கு வந்து விடுவாள். இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி நான் நிற்பேன்.
எனக்கு தெரிந்து இப்படி ஒரு பெரிய புல்லட் வண்டியை ஊரில் யாரும் வைத்திருக்கவில்லை. கருப்பு நிறத்தில் அது வருவதை பார்த்தாலே யானை மாதிரி. இவர் வந்து போகிற சமயங்களில் அது எனக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய கௌரவமாய் படும். நான் பிறப்பதற்கு முன்பிருந்தே இவர் இங்கு வருவது வழக்கம்தான். என்றாலும் ஏதோ தூரத்து உறவினர் வந்த சந்தோஷத்தை பெற்றுத்தரும் இவரின் வரவு.
சில நேரங்களில் களத்திலிருந்து நேராக அப்பாவை தேடிக்கொண்டு வந்து விடுவார். அப்போதெல்லாம் அப்பா எங்கே என இவர் கேட்கும் போது சரியாக பதில் சொல்ல வராது எனக்கு. அதனால் பக்கத்து வீட்டார்கள் அறுப்புக்கு நாளு வந்துடுச்சாம் பயறு விதைக்கலாமானு சீதாச்சி குண்ட பாத்துட்டு வரன்னு சொல்லுச்சிங்க.. ஒருவேல ஒங்கல பாக்குறன்னு அப்டியே போயிடுச்சோ என்னமோ, இன்னும் வரலைங்க" என்று ஏதேனும் சொல்லி விட்டு சமாளிக்கிற தைரியம் தாராளமாயிருந்தது அப்பாவுக்காக அப்போது.