தாய்மாமன்
முருகன்தூக்கம் வராமல் புரண்டு படுத்தான் ..பக்கத்து வீடுகள் அமைதியாக நிசப்தத்தில் இருந்தன.காவலர்களின் ரோந்து வாகனமும் வந்து போய்விட்டது..பலவிதமான குழப்பங்களில் மனசு கிடந்து அடிசிகிட்டது.ஊரிலிருந்து தங்கச்சி செல்வி போ னில் பேசினாள் மகள் ருதுவாகி விட்டாளாம் .. வருகிற ஞாயிற்றுக் கிழமை தலைக்கு தண்ணி ஊற்றி சடங்கு வைத்திருக்கிறாள் .....முன்னாடி வேலையில இருக்கும் போது இந்தமாதிரி செலவுகளுக்கு சுணக்கம் இல்லாமல் செய்ய முடிந்தது ...அவனுக்கு போக முடியவில்லை என்றாலும் அவனுடைய சம்சாரத்தை போகச் சொல்லிடுவான்.ஆனால் இப்பவெ ல்லாம் முடியவில்லை .உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் ஒரு மாதமாக விட்டுவிட்டு இரண்டு முறை அறுவை சிகிச்சை வயிற்றில் செய்து மறுபிறப்பு எடுத்து மீண்டு வந்திருக்கிறான்...சேமிப்பு எல்லாம் மருத்துவச் செலவுக்கே சரியாப் போச்சி .கடின வேலைகள் ஏதும் செய்யக் கூடாது என்று மருத்துவர்கள் சொன்னதால அவன் வேலை பார்த்த ஆலையிலிருந்து விருப்ப ஓய்வுக்கு எழுதி கொடுத்து விட்டான்...வந்த காசுகளும் செலவழிஞ்சாச்சி அடுத்து .என்ன பண்ணுவதென்றும் தெரியாத சூழ்நிலையில் தான் தங்கச்சிட்ட இருந்து போன் வந்தது.. இதுல வேற பள்ளியில் படிக்கிற அவனுடைய மகளுக்கு அடுத்த வாரம் பீஸ் கட்டனும்...இப்போதைக்கு அவன்கிட்ட இருப்பது கொஞ்சம் சில்லறை நாணயங்களும் அதிக நம்பிக்கைகளும் தான். முருகன் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து அறை விளக்கை போட்டுக் கொண்டு சுவரோடு சாய்ந்து கொண்டு உத்தரத்தையே பார்த்து கொண்டிருந்தான்.ஒரு ஈ - சிலந்தி வலையில் மாட்டிக் கொண்டு தப்பிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தது .
இந்த சீர் முறையெல்லாம் ஏழைகளுக்கு சரிப்பட்டு வருமா …இதெல்லாம் அந்த காலத்தில பெண்வாரிசுகளுக்கு சொத்தில பங்கு கிடையாதென்று இருந்த போது கல்யாணத்திற்குப் பிறகு பூரா சொத்தையும் ஆம்புள பிள்ளைகளே அனுபவிப்பாங்க உடன் பிறந்த சகோதரிகளின் மனசு கோணக்கூடாதென்று இந்த மாதிரி நேரத்தில தாய் வீட்டு சார்பாக கொஞ்சம் செலவு செய்திடுவாங்க .முழு சொத்தும் அனுபவிக்கிற தாய் மாமன் மார்களுக்கு அந்த செலவு ஒன்றும் பெரிய செலவாகத் தெரியாது.….கவுரவமாகவும் ஆகிப் போச்சி …ஆனாலும் அப்படியே பழக்கமாகி, பாவப் பட்டவங்களையும் சிரமப் படுற மாதிரி கட்டிப் போட்டிடுச்சி .காலாம் காலமாய் புரையோடிப் போன பழக்க வழக்கங்களை அவ்வளவு சீக்கிரமா மாற்ற முடியுமா என்ன .
``என்னங்க தூங்கலையா"..... அவன் மனைவி கோசலை பக்கத்தில் வந்து நின்றாள்
``ஒன்றுமில்லை மருமகள் சடங்கு பற்றிதான் யோசிச்சு கிட்டிருந்தேன்" ...
``தங்கச்சிகிட்ட பிறகு செய்கிறேன் என்று சொன்னால் என்ன ........நம்ம நிலைமைதான் அவளுக்குத் தெரியுமே"....முருகன் இப்படி சொன்னதும் கோசலை உடனடியாக மறுத்தாள்
``சே ..அசிங்கமாகிப் போகும் ...சொந்தக்காரங்க தப்பா பேசுவாங்க " ....
``என்ன தப்ப பேசப் போறாங்க....நம்ம பிள்ளைக்கு விசேசம் வச்சோமே உன் அண்ணன் வந்தானா ....அவரால முடியல ...அது நமக்குத் தெரியும் .....நான் எதுவும் அதைப் பற்றி ஒருநாளாவது பேசி இருப்பேனா ".....
முருகன் இதைச் சொன்னதும் கோசலையின் முகம் சற்று மாறியது...என்னதான் இருந்தாலும் பிறந்த இடத்தை விட்டு கொடுக்க மாட்டார்கள் அல்லவா பெண்கள் ...
``எல்லாரும் உங்களை மாதிரி இருக்க மாட்டாங்க...ஏற்கனவே இன்னொரு தங்கச்சி மகளுக்கு செய்து கிட்டு இவளுக்கு செய்யலன்னா பிரச்சினை யாகும் ...ஏதாவது செய்துதான் ஆகணும்."...என்றாள் கோசலை .
``அடகு வைக்கிறதுக்கு ஏதாவது நகை இருக்குதா ...ஏற்கனவே இருந்ததெல்லாம் அடகு வச்சாச்சே.".. முருகன் கேட்டான்.
``கழுத்தில கிடக்கிற இந்த தாலி செயின் மட்டும் இருக்கு ....நாளைக்கு இதை அடகு வச்சிக்கிடலாம்...தூங்குங்க...எனக்கு தூக்கம் வருகிறது."....
கோசலை சொல்லி விட்டுப் போனபிறகு மனசு லேசாக இருந்தது...அப்படியே தூங்கிப் போனான் முருகன்.
தங்கச்சி வீட்டில் தடபுடலாக நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தது .அவனும் முறை கெடாமல் முடிந்த அளவுக்கு செய்து பேரைக் காப்பாற்றிக் கொண்டான்.நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொண்டிருந்தார்கள்...கோசலை யாரையோ அவங்க சொந்தத்தை பார்த்துவிட்டு வர போயிருந்தாள்.முருகன் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான்...பக்கத்து ரூமில் பேச்சரவம் கேட்டது....குரலைப் பார்த்தா வடிவு அத்தை மாதிரி இருந்தது...அவனுக்கு தூரத்து சொந்தம்...
``என்னம்மா அண்ணன் ஊரிலிருந்து சீரெல்லாம் கொண்டு வந்திருக்கானே..சந்தோசம்தானே....''
``ஆமா....ஆமா...என்ன சந்தோசம் ....சேலை வாங்கிட்டு வந்திருக்கான் பாருங்க....குறைஞ்ச விலையில .....கொஞ்சம் பெரிசா செய்தாத்தான் என்ன....நான் என்ன இரண்டு மூன்று பொம்பள பிள்ளைகளா வச்சிருக்கேன்....ஒரேஒரு பிள்ளைதான ..என் வீட்டுக்காரர், அவங்க சொந்தக்காரங்க எல்லோரும் திட்டுறாங்க '' ... ..
தங்கச்சி பேசுவது தெளிவாகக் கேட்டது ...`என்ன உலகமடா இது`, கனத்த இதயத்தோடு நாற்காலியை விட்டு எழுந்து வெளியே வந்தான் முருகன்.
---------------------------------------------------------------