++வரலாற்று யாத்திரைகள் - 15 ஒரு பக்கக் கதைகள்++

(கி.பி. 22 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளின் கடைசி மாதங்களில் மாலை மயங்கும் வேளையில் சோலை ஒன்றில் இசையாய் வருடும் கிளைகளின் நுனியிலுள்ள இலைகளின் சரசரப்பில் தன்னை இழந்து இமைகளை மூடியபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் நாற்பத்தி ஐந்தாம் இராஜேந்திரன்.....)

அவரது சிந்தனையில் சிகரம் தொட்டிருந்தவர்கள் அவரது முப்பாட்டனாருக்கும் முப்பாட்டனாரும் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வலிமை வாய்ந்த மன்னராக‌ இருந்து, பாண்டிய மன்னர்களையும் பதினோரு வேளிரையும் வெற்றிகொண்ட, காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணை கட்டிய, இமயம்வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பிய இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கரிகாலனைப் பற்றியும், அதன் பின் எட்டு நூற்றாண்டு கழித்து வந்த முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரனைப் பற்றியுமே இருந்தது. அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்கு செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராஜராஜன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இராஜேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் தாக்கித் தோற்கடித்திருந்தது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.

(அதோடு மட்டும் நிறுத்தாமல் செல்லும் நாடுகளிலெல்லாம் அவர்களது சந்ததியினரை அரசாட்சியில் நிறுத்தினர். ஆண்டுகள் ஓட ஓட உலகத்தின் நிலப்பரப்பில் எழுபது சதவீதத்தினை கைப்பற்றி இருந்தனர். அவர்களின் இராஜ்ஜியம் விரிய விரிய தமிழும் உலகம் முழுவதும் அனைவரின் நாவினிலும் அரியணையை ஏற்றது. ஆத்தி மலரின் மணம் உலகம் முழுதும் ஆட்சி செய்தது. பல்லாயிரம் காப்பியங்கள் கண்ட தமிழ், உலக மொழியாக உலா வந்தது. "நீராரும் கடலுடுத்த ..." வேறு வடிவெடுத்து எல்லோர் செவிகளிலும் இனிய கானமாக நனைத்துக் கொண்டிருந்தது.

ஒவ்வொன்றாக நினைக்க நினைக்க கண்களில் கண்ணீர் பொங்க பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தார் உலக மகா சக்கர வர்த்தியான நாற்பத்தி ஐந்தாம் இராஜேந்திரன்.... அவருக்கு முன்னே அமைதியாய் அமர்ந்து அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர் உலகத்திலுள்ள ஏழு தமிழ் கண்டங்கள், பேரரசு மண்டலங்கள், மண்டலங்கள், கோட்டம், வளநாடு என அனைத்து பிரிவுகளையும் ஆளும் அவரது நம்பிக்கை நட்சத்திரங்கள்.)


அடைப்புக்குறிக்குள் இல்லாதவை நடந்த வரலாறு...
அடைப்புக்குறிக்குள் இருப்பவை வரலாறு இப்படி மாறி இருந்தால் எப்படி இருக்கும் என்பதன் கற்பனை...
நன்றி கவிஜி தோழரே...

பின் குறிப்பு:

தான் போரில் வென்ற நாடுகளுக்கு அரச குமாரர்களைத் தலைவர்களாக்கி ஆட்சியைத் திறம்படப் புரியும் முறையை முதலில் பின்பற்றியவன் இரசேந்திரனே ஆவான்.

சோழர் காலத்தில் தமிழ் சிறப்புற்று இருந்தது. நிர்வாகம், வணிகம், இலக்கியம், சமயம் என்று பல தளங்களில் தமிழ் பயன்படுத்தப்பட்டது. சோழர்களின் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் பல தமிழிலேயே அமைந்துள்ளன.

சோழர் காலம், தமிழ் இலக்கியத்திற்குச் சிறப்பானதொரு காலமாகும்.இக்காலத்தில் இலக்கிய வளர்ச்சி மிகுந்திருந்தது. ஆனால் சோழர்களால் தமிழ், உயர் கல்வி கூடங்களில் ஊக்குவிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சோழர் காலக் கல்வெட்டுக்களில் பல இலக்கியங்கள் குறிப்பிடப் பட்டுள்ளனவாயினும், அவற்றுட் பல தற்காலம் வரை நிலைத்திருக்கவில்லை.

இராசராச சோழன் காலத்தில் "தேவாரம்" முதலிய நூல்கள் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. சமண, பௌத்த நூல்களும் இயற்றப்பட்டன. திருத்தக்க தேவர் என்பவரால் இயற்றப்பட்ட "சீவகசிந்தாமணி"யும், தோலாமொழித் தேவரால் இயற்றப்பட்ட "சூளாமணி"யும், இந்து சமயம் சாராத முக்கியமான சோழர் கால இலக்கியங்களாகும்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த கம்பர் தமிழில் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படும் "கம்பராமாயணத்"தை எழுதினார். வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவி இது எழுதப்பட்டதாக இருந்தாலும், கம்பர் இதைத் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்ப ஆக்கியுள்ளார்.செயங்கொண்டாரரின் "கலிங்கத்துப்பரணி"யும் இன்னொரு சிறந்த இலக்கியம். இரண்டாம் குலோத்துங்க சோழன் பெற்ற கலிங்கத்து வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது இந்நூல்.

இதே அரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் "குலோத்துங்க சோழ உலா" என்னும் நூலையும் "தக்கயாகப் பரணி", "மூவருலா" என்ற நூல்களையும் இயற்றியுள்ளார். மேலும் சேக்கிழாரின் "பெரிய புராணமும்" இக்காலத்ததே.

சோழர் காலத்தில்தான் திருப்பாவை, திருவெம்பாவை போன்றவை சோழ நாடெங்கும் ஓதப்பட்டன. சோழர் காலத்தில் இலக்கிய வளர்ச்சி உச்சத்தை எட்டியது.

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (23-Feb-15, 3:29 pm)
பார்வை : 184

மேலே