டிசெக்சன் ஹால் - நகைச்சுவை சிறு கதை மீள் பதிவு

நகரத்தின் புராதன மருத்துவக் கல்லூரி அது. தமிழ்நாட்டிலே மாணவர்களுக்கு முழு சுதந்திரம் அளிப்பதில் பேர் போன கல்லூரி. சேரி மக்கள் தொடங்கி ஏசி உபயத்தில் மே மாதத்திலும் நடுநடுங்கும் மேல் தட்டு வர்க்கம் வரை வந்து போகும் மருத்துவமனை. ஆந்திராவின் மணவாடுகளும் மஞ்சிவாடுகளும் தமிழர்களோடு கொஞ்சிக் குலாவும் இடம்.
உதிரி உதிரியாய் பிரம்மாண்ட கட்டடங்கள். வெளிப்புற சிவப்பு வண்ணக் கல்லூரிக் கட்டடம் தன்னை ‘உடற்கூறியல் துறை’ என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் அறிவித்துக் கொண்டது. படியேறி மேலே போனால் ஒரு வரிசையில் சின்ன சின்னதாக ஆசிரியர்கள் அறை, மறு புறம் வகுப்பறை;
வகுப்பறைக்குள் ஓரமாக கண்ணாடி அலமாரிகளில் அடுக்கப்பட்ட மனித அவயவங்கள். எதிரே ஹோ’வென்ற டிசெக்சன் ஹால் எனப்படும் பிண அறுவை சோதனைக்கூடம். ஹாலை வலது இடது என இரண்டாகப் பிரித்து ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு வரிசைகளில் கிடந்தன பத்து டேபிள்கள். டேபிள்களில் கண்ணை எரிக்கும் ஃபார்மலின் பூச்சோடு பிணங்கள்.! ஒவ்வொரு பிணத்தைச் சுற்றிலும் வெள்ளை கோட் சகிதம் எட்டு முதல் பத்து மருத்துவ மாணவர்கள். இரண்டாம் சனி, ஞாயிறு இரு நாட்களும் ஃபார்மலினில் ஊறி, புதிதாய்க் குளித்த புத்துணர்ச்சியில் பிணங்கள்.....!
சாம்பவி டேபிள் மேலிருந்த பிணத்தைப் பார்த்தாள். வெள்ளிக் கிழமை அவள்தான் பரோடிட் கிளாண்ட் எனப்படும் காதுக்குப் பக்கத்திலிருக்கும் உமிழ்நீர் சுரப்பியை அறுத்தாள். முக நரம்பு என்கிற ஃபேசியல் நரம்பு இந்த சுரப்பிக்குள் போய் ஐந்தாகப் பிரியும்- ஒரு கையின் விரல்களைப் போல அல்லது சிந்து நதி ஜீலம், சீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ் என்று பிரிவதைப் போல. அந்த நரம்பை அதன் கிளைகளோடு அலுங்காமல் குலுங்காமல் எடுக்க பிரயத்தனப் பட்டு அன்றைக்கு முடியவில்லை; இன்றைக்கு முடிக்க வேண்டும்.
டேபிள் மேலிருந்த பிணத்துக்கு பரோடிட் கிளாண்ட் பிய்ந்து போய் தொங்கியது. கன்னத்துச் சதைகளும் கொத்திக் குதறி இருந்தன. யாரோ மட சாம்பிராணி அறுக்கத் தெரியாமல் அறுத்திருக்கிறான். மேலும் வெள்ளிக் கிழமை அவள் அறுத்தது இந்தப் பிணத்தை அல்ல......!
சாம்பவி டேபிளை விட்டுத் தள்ளி வந்தாள். அந்தப் பிணம் எங்கே?
‘‘ஏம்பா, என் ‘டெட்பாடிய’ பாத்தீங்களா?’’ ஒவ்வொரு டேபிளாகக் கேட்டுக் கொண்டே வந்தாள். அன்று அவள் வெள்ளைச் சுரிதார் அணிந்து தலை முடியை விரித்துப் போட்டிருந்தாள்......!
‘‘என்னடா, டெட்பாடியே டெட்பாடிய தேடுது? ’’ சிலர் அரண்டனர்.
ஒரு வழியாக இடது கோடி டேபிளில் கண்டு பிடித்தாள். அரவிந்த் அப்போதுதான் டிசெக்சனில் இறங்கியிருந்தான்.
‘‘அரவிந்த், அது என் ‘டெட்பாடி; நீ நாலாம் நம்பர் டேபிளுக்குப் போ.....!’’
அரவிந்த் தூக்கி வாரிப் போட நிமிர்ந்தான். அவள் சொன்னது புரிய சில நொடிகளாயின. உதட்டின் கடைக்கோடியில் அரும்பிய சிரிப்பு அவளின் கட்டளைத் தொனியில் மறைந்தது. முக நரம்பின் மூன்று கிளைகள் அழகாக எடுக்கப்பட்ட நிலையில் டெட்பாடியை விட்டுக் கொடுக்க அரவிந்த் அன் கோவிற்கு மனமில்லை.
‘‘இது ஒண்ணும் உன் டெட்பாடி இல்லே. இது ஆம்பள டெட்பாடி. நீ எங்க செத்துப் போனியோ அங்க போய்த் தேடு.’’
சாம்பவி ஆத்திரமானாள்.
‘‘நீ பேசாதே! கசாப்புக் கடைக்காரனை விட கேவலமா கொத்தியிருக்க. நாளைக்கு நீயும் இந்த டேபிள்ள கிடந்து உன்னை ஒருத்தன் குதறுனா உனக்கு எப்படி இருக்கும்?’’
அரவிந்த் டேபிளை பார்த்தான். டேபிளில் கிடந்தவரை விட டேபிள் பயமுறுத்தியது. ‘‘உன் டெட்பாடின்னு பேரா எழுதியிருக்கு? அங்கே இருக்கிறத வச்சி செய்யேன் சாம்பு’’
‘‘அதுல ஒரு ஸ்ட்ரெக்சர கூட காணோம், என்னத்தை செய்றதாம்?’’ சாம்பவி ‘ஒரு’ என்ற சொல்லை உச்சரிக்கும் விதம் பொமெரியன் நாய்க் குட்டி மேலே தாவுவது போலிருக்கும்.
‘‘ஸ்ட்ரெக்சர காணோம்னா போலிஸ்ல கம்ப்ளெயிண்ட் கொடு’’ அரவிந்த் முணுமுணுக்க, ரௌத்திரமானாள் சாம்பவி.
‘‘ஒன்கிட்ட எனக்கென்ன பேச்சு’’ சாம்பவி பிணத்தின் வலக் கையை பிடித்து இழுக்க, டேபிளை விட்டு தலை குப்புற சரிந்தது பிணம். ‘‘நீ எந்திரிச்சு வாடா செல்லம்’’
அரவிந்த் பதறிப் போய் சுதாரித்து பிணத்தின் இடக் கையை பிடித்திழுத்தான். மாணவர்கள் அத்தனை பேரும் தங்கள் வேலை மறந்தனர். ஆங்காங்கே வெவ்வேறு அலை வரிசைகளில் சிரிப்பு சத்தம்.
அதற்குள் கூட்டம் சேர அல்போன்ஸ் சார் வந்து விட்டார்; முரட்டு உருவம்; அஸிஸ்டெண்ட் புரொபசர்.
‘‘ஏய், என்ன இது? ’’ அல்போன்ஸ் சார் அதட்டிய அதட்டலில் சாம்பவியும், அரவிந்த்தும் பயந்து விட்டனர்.
‘‘ரெண்டு பேரும் தள்ளிப் போங்க ’’ இருவரும் பிணத்தின் தலை மாட்டில் அருகருகாக நின்று கொண்டு அவரையே பார்த்தனர். என்ன தண்டனை தரப்போகிறாரோ?
‘‘நான் ஒன் டூ த்ரீ சொன்னதுக்கப்பறம் ஆரம்பிங்க’’ அல்போன்ஸ் சார் சொல்ல, மாணவர்கள் மத்தியில் இன்னொரு அலைவரிசை சிரிப்பு.....!
சாம்பவி பக்கம் மாணவிகள் இருவரும் அரவிந்த் பக்கம் மாணவர்கள் இருவரும் நெருங்கி வந்தனர்.
விசயத்தை அரைகுறையாக கேள்விப்பட்டு, புரொபசர் வெங்கடேசன் சார் வந்து விட்டார். ‘‘இதென்ன கையப் பிடிச்சி இழுத்தாங்களாமே, டிசிப்ளின் டீசென்சி எதுவும் இல்லையா?’’ கோபமாகக் கேட்கவில்லை, கேள்வியாகக் கேட்டார்.
அது வரை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த திலோத்தமா மேடம் எழுந்து வந்தார்- இன்னொரு புரொபசர். எந்த பிரசினை தானாக தீரும், எதில் தலையிட வேண்டும் என்பது தெரிந்தவர்.
‘‘சார், சாம்பவி கைய அரவிந்த் பிடிச்சு இழுக்கல, அரவிந்த்த சாம்பவி ஒண்ணும் செய்யல. அதனால டிசிப்ளின் டீசென்சிக்கு வேலையில்ல. கத்துக்கிற ஆர்வத்துல சண்டை போடுறாங்க’’
‘‘இந்தப் பசங்க மேல ஆக்சன் எடுக்க முடியுமா?’’
‘‘டெட்பாடி கம்ப்ளெயிண்ட் பண்ணா எடுக்கலாம், சார் ’’, திலோத்தமா மேடம் அப்பாவியாகச் சொன்னார்.
‘‘டெட்பாடிக்கு செய்கூலி சேதாரம்? ’’
‘‘அவர் நல்லா இருக்கார், ஹி ஈஸ் கம்ஃபர்டபிள்’’
‘‘சரி, இவங்க ப்ரசினை?’’ ஒரு லேசர் கற்றையைப் போல அவர் பார்வை சாம்பவி மேல் படர்ந்து அரவிந்த்திடம் தாவியது.
‘‘அவங்களே தீர்த்துகுவாங்க சார்.’’
‘‘தென் ஓகே’’, சின்னப் புன்னகையோடு நடந்தார் வெங்கடேசன் சார். ஒரு திசையில் அவர் கால் நகர ஆரம்பிக்கும் முன் கண் நகரும்.
சாம்பவி விடாப்பிடியாய் அங்கேயே நிற்க, அரவிந்த் குழுவினர் நாலாம் நம்பர் டேபிளுக்குப் போய் விட்டனர். நாலாம் நம்பர் டேபிளில் ஏற்கெனவே நின்றிருந்தவர்கள் இந்தப் பக்கமாக வர ஆரம்பிக்க, சாம்பவி தன் உபகரணங்களை எடுக்க ஓடினாள்.
‘டெட்பாடி’ தனியாக விடப்பட்ட அந்த நிமிடங்களில் எங்கிருந்தோ வந்தது காக்கை ஒன்று. டேபிளில் உட்கார்ந்து பரோடிட் கிளாண்டை ஒரு கொத்து கொத்தி திருகியது. அப்படியே தூக்கிக் கொண்டு போனது!
அருணை ஜெயசீலி.