கண்ணீர்அஞ்சலி -ரகு

திருஷ்டிக்காக
உடைத்த பூசணி
காவுவாங்கியிருந்தது
ஈருயிர்களை

அன்றிலிருந்தே
தேங்காய்ச் சிதறல்களுக்கும்
எதிரியாகியிருந்தது
அந்தத் தெருநாய்

வெறிபிடித்ததைப் போலவே
விரட்டிக் குறைக்குமது
யாரையும் கடித்ததில்லையாம்

பூனை குறுக்கே வந்ததெனத்
திரும்பியவனையும்
எரிநட்சத்திரம்
பார்த்தாலாகாதென
கண்மூடியவனையும்

அருகில்வந்து குரைத்து
அலறவைத்தது
ஒரு ராத்திரியில்

அலகு குத்தி
ரதமிழுப்போரையும்
பாதயாத்திரைப்
பக்தர்களையும்
பயமுருத்துமது

பிச்சைக்காரர்களிடமும்
பைத்தியங்களிடமும்
சிநேகமாயிருப்பது
மிரண்டவர் கண்டுவியந்த புதிர்

சாலைகடக்கும்போதொருநாள்
அடிபட்டுச் செத்துப்போக

கண்ணீர்அஞ்சலி பதாகை
கேட்டுப்போனவளை
கடை ஊழியர்கள்
விரட்டிவிட்டனர்

நரபலியை
நேரில் பார்த்துப்
பைத்தியமானவளாய்க் கூட
இருக்கலாமவள் !

எழுதியவர் : அ.ரகு (25-Feb-15, 7:47 am)
பார்வை : 506

மேலே