பெண்ணின் பெருமை

பெண்ணின் பெருமை
பாவலர் கருமலைத்தமிழாழன்

பெண்சிசுவைப் பெண்களிங்கே கொல்லு கின்ற
பெருங்கொடுமை ஒருபக்கம் நடக்கும் போதே
பெண்குழந்தை தான்வீட்டின் செல்வ மென்றே
பெருமைபடும் காட்சியையும் காணு கின்றோம்
பெண்களினைக் கண்களெனச் சொல்வ தெல்லாம்
பெயரளவில் இல்லையெனும் உண்மை யிங்கே
பெண்ணாக நாடுதன்னை நதிகள் தம்மைப்
பெயரிட்டு அழைப்பதுவே கண்முன் சான்று !

வீட்டிற்கு ஒளியேற்றும் விளக்கைப் போன்று
விளங்குகின்ற பெண்களுக்கு ஈடும் உண்டோ
வீட்டதனின் குலப்பெருமை வளர்ப்ப தற்கு
வித்தாக இருப்பவரும் பெண்கள் தாமே
மாட்டுப்பெண் எனவந்து பிறந்த வீட்டின்
மாண்போடு புகுந்தவீட்டை மணக்கச் செய்து
கூட்டுறவாய் மாமிமாமன் கொழுந்தன் நாத்தி
குடும்பமாகக் காப்பவரும் பெண்கள் தாமே !

மகளாக வீட்டிற்கே அழகு சேர்த்து
மங்கலத்தை நிரப்பிடுவாள் ; மனைவி யாக
அகமிணைந்து கணவனுக்கத் துணையாய் நிற்பாள்
அருந்தாயாய்க் குழந்தைகளை வளர்ப்பாள் அன்பாய்
முகத்தினிலே முன்நிற்கும் மூக்கைப் போல
முன்நின்று இல்லறத்தை நடத்திச் செல்வாள்
பகல்ஒளியைத் தரும்கதிராய்த் திகழும் பெண்ணின்
பயன்பெருமைக் கீடாக எதுவு மில்லை !

( உலக மகளிர் நாள் மார்ச்சு 1 )

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (25-Feb-15, 5:30 pm)
பார்வை : 413

மேலே