நவீன முதிர்கன்னி
கள்ளுண்ணாமை, பிற பெண்ணின் கண் நோக்காமை-
புகை போக்காமை என்று,
எந்த மைகளிலும் மயங்காவொரு கனவான்
கணவனாய் வர வேண்டும் என்று
நினைவினை தொலைத்தாள் ஓர் கன்னி!
வானுயர் புகலிடம் ஒன்று,
வாழ்கையை விரைவாக்க ஊர்தி ஒன்று
லட்சங்களில் சம்பளம் என்றால் நன்று என்று
நனவினைத் தொலைத்தாள் அக் கன்னி!
ஒன்றிருந்தால் மற்றொன்றில்லை என்று
இலகுவாய் கடந்திட்ட வரன்கள் பல அன்று
கேட்க ஓர் நாதியில்லை இன்று
தவவலிமை ஏறப் பெற்றதால் அவள் தவக்கன்னி!
செய்து வைத்த பெண்சிலையாய் வியக்க வைத்தாள் அன்று
சந்தையில் மதிப்பிழந்த மண்சிலையாய் இன்று
உடலுக்கு முன் உள்ளம் வயதானதைப் போன்று
முதுமை வேகத்தில் இளமை தொலைந்திட்டதே முதிர்கன்னி!