அலங்கார மோகம் -ரகு

அலங்காரக் கடவுள்கள்
எங்கு காணினும் ஒரு யாசகப்பார்வை
பின்தொடர்ந்து கொண்டேயிருந்தது
சற்றேப் பரவசப்பட்டு

யதார்த்தமாகவே தொடங்கிய
யாசகப் பார்வைக்காரன் பின்
அதிலேயே லயித்துக் கிடக்கலானான்

தடைபடும் யாசகத்தால்
பட்டினிகிடக்கவும் பழக்கிக்கொண்டான்
தன்னை

கொடூரப்பார்வை குழந்தைச்சிரிப்பு
பேதமேதுமில்லை அவனின்
அலங்காரத் தேடலில்

பொன்நகைகளோடு பவனிவரும்
தேர்க் கடவுள்களைத் திகட்டத்திகட்டப்
பார்த்து சிலிர்த்துக்கொள்வான்

இப்படியான தொடர்கதையில்
தானேயொருநாள்
கடவுளாகித் தெருவிலிறங்கினான்
கூட்டங்கூடியது

அவனின்
மோகப்பார்வையொத்தவர்கள்
சீடர்களாகினர்

இப்போதும் அவனின்
அலங்காரத்தேடல் தொடர்ந்துகொண்டுதான்
இருக்கிறது
ஆனால் அதில் கடவுள்கள் தானில்லை

எழுதியவர் : அ.ரகு (26-Feb-15, 9:03 pm)
பார்வை : 201

மேலே