பாவம் ஆட்டை விட்டுவிடு

கழுத்தறுத்து தோலுரித்து கச்சிதமாய் வெட்டி
கொழுப்பகற்றிக் கூறிட்டப் பின்னால் - கழுவி
அடுப்பேற்றி உண்கின்ற ஆசைக்கு ஆடு
கொடுக்கும் அறியா கழுத்து.

நேர்த்தி எனும்பேரில் நீவளர்த்த ஆடொன்று
கீர்த்தி அடையு மெனும்போர்வை -போர்த்தி
கழுத்தறுக்கும் காதகத்தை செய்யக் கடவுள்
அழுவான் தெரியா துனக்கு

பலியாலே துன்பம் சரியாகு மென்றால்
பலியாகு நீயே! முடிந்தால் - புலியொன்றைக்
காட்டில் துரத்திப் பலிகொடு . ஏமாந்த
ஆட்டை அறுத்தல் தவிர் .

மாமிச முண்ணும் மறைமுக ஆசைக்கு
சாமியை காரணம் சொல்லியே -பூமியில்
வாயில்லா ஜீவன் வளர்த்து வெட்டுகின்ற
ஆயுதத்தை இன்றே அழி.

எந்தக் கடவுள் எனக்கு இதுவேண்டும்
தந்திடு என்றே உனைக்கேட்டான்? - தந்திரமாய்
அந்தக் கடவுள் பெயராலே ஆடறுக்கும்
உந்தன் மனதிடம் கேள்.

உன்னுயிர் மேலென்று ஓடோடிச் சென்றிங்கு
இன்னோர் உயிரை பலிகொடுக்கும் - முன்னே
பலியாகும் பாவ உயிரின் மனதை
மலிவாக எண்ணல் விடு.

மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (27-Feb-15, 2:53 am)
பார்வை : 82

மேலே