இனிக்கும் நினைவுகள்

என் இரவுகளின்
இமைமூடா விழித்திருப்பில்
ஒரு இரவு..
ஒரு புறத்தில்
கடந்து வந்த காட்டுப் பாதையும்
பயணிக்க வேண்டிய பாலைவனமும்
காட்சிகளாய் விரிந்து நிற்க..
கானல் நீர் நோக்கி நகர்வதற்கு
கால்கள் ஆயத்தமாகும் நேரம்
கண்காணா தூரத்தில் ..
நீ..!
உன்னை
என்னிடம் கொண்டு வந்து சேர்க்க
என் நினைவுகளை
அனுப்பி வைத்தேன் ..
உன்னை தூக்கி வர..!
திரும்பி வந்தன
அந்நினைவுகள்..
வெற்றுக் கைகளோடு..!
வேறொரு மடி மீது
நீ துயில் கொள்ளும்
காட்சியினை
கண்டதை சொல்லியவை..
கண்ணீரை தந்து சென்றன..
தாகம் தீர்த்து நான் பருகிடவே!
அந்தக் கண்ணீர் ..
கரிக்கவில்லை..
இனித்தது..
நீயாவது ..
இன்பமாய்
இருக்கிறாய்
என்று எண்ணிய போது!