மகாகவி ஈரோடு தமிழன்பன் பற்றி வானம்பாடி கவிஞர் இன்குலாப் -பகுதி 3

மகாகவி ஈரோடு தமிழன்பன் பற்றி வானம்பாடி கவிஞர் இன்குலாப்

நாங்கள் அடுத்தடுத்திருந்தோம்
நட்பிலும்
நாற்காலிகளிகளும்

மாணவ நாட்களில்
வைகைக் கரையின்
மணலூற்றுக்களையும்
நாணற்பூக்களையும்
தென்னந்தோகைகளையும்
அடுத்திருந்த
தியாகராசர் கல்லூரி அரங்கில்
அலைமோதிய கவிதா நிகழ்வில்
அறிமுகமானீர்கள்
கவிதையின் நிறைமுகமாய் ...

புதுக்கல்லூரியில்
பணியாற்ற வந்த முதல் நாளில்
நட்பில் பற்ற நம்கைகள் நீண்டன -
அன்பில் உயிர்க்கும் நம் இதயங்களிருந்து ....

அந்தத் தொடுகை
தொடர்கிறது
இன்றும் இனியும் ....

உச்சரிப்பதற்குக் கவிதைகளும்
உதவுவதற்குக் கைகளுமாய்
இருந்த மனிதர் நீங்கள் ....

நம் மேசையில் குவிந்த
கட்டுரை ஏடுகள் ,
வருகைப் பதிவேடு ,
கிளிக் கூண்டுப் புத்தகங்கள்
இததனைக்கும் அடியில்
சுதந்திரிமாய் விரிந்த
கவிதையின் விளிம்புகளுக்குப்
பூவேலைப்பாடு செய்து கொண்டிருந்தோம்.....

நானும் புலவர் உசேனும் ஊதிய
வெண்சுருட்டுப் புகை மண்டலத்தில்
ஒருபோதும் சுருக்காத
நட்பின் ஒளிமுகம் உங்களது ......


நெருக்கடியின் கொடுஞ்சிறகுகள்
விரிந்த ஒரு காலத்தில்
வானகமெங்கும் விடுதலையின்
பாடலைப் பாடிய
ஒரு சூரியனின்
இரு சிறகுகள் நாம் ....

சொல்லில் எப்போதும்
சித்தரிக்கும் கை உங்களது ...
எழுதித் தீராத வண்ணங்கள்
உங்கள் ஊற்றில் ,
பார்த்துப் பருகிய கண்கள் எனது ....


யாப்பின் இனங்கள் யாவையும் அளந்து
ஓய்வறியாத உங்கள் கற்பனை
உலகயாப்பு ஒவ்வொன்றையும்
மூத்ததமிழில் யாத்துயாத்துப்
புதிப்பிக்கிறது
கவிதையையும்
தமிழையும்
சொல்ல முடியுமோ ஓய்வுற்றீர்கள் என ?

உங்கள் நாற்காலிக்கருகில்
இன்று
நானில்லை
சந்திப்புகள் அருகிவிட்டன
எனினும்
நாள்தோறும் உரையாடுகின்றன
நம் இதயங்கள்







மகாகவி ஈரோடு தமிழன்பன் பற்றி வானம்பாடி கவிஞர் இன்குலாப் )

எழுதியவர் : இன்குலாப் (1-Mar-15, 3:29 pm)
சேர்த்தது : agan
பார்வை : 76

மேலே