காதலும் சமூகச்சாடலும் - சந்தோஷ்
உண்மைகள் யாவும்
சருகாகி மண்ணில் கலந்து
உரமாகி மெளனமாகிவிடுவதால்தானே
அன்பே..!
பொய்ச்சொற்கள் யாவும்
வளர்ந்து நந்தவனமாய் செழிக்கிறது.
செழித்த நந்தவனத்தில்
நீ செல்கிறாய் தேரில்
நான் தவிக்கிறேன் தரையில்..!
வார்த்தை தவறிவிட்டாய்
கண்ணம்மா - இருந்தும்
என் மார்பு துடித்திடவில்லை
செல்லம்மா..!
-------------------
எனதன்பில் அன்று
காதல் கொழுத்துப்போன
காதலியே..!
நாம் ஏன் காதலித்தோம்?
ஏன் காதலிக்க மறுத்தோம்?
வித்தியாசமாய் இருக்கிறது
எல்லாம்
வினோதமாய் முடிந்தது.
அகோரப்பசியெடுத்தும்
ஆரவார ஆசைக்கொண்டும்
பூமியாளின்
பொன்னுடலில் துளையிட்டே
அமிர்தம் முதல் விஷம் வரை
பருகும் மானிடர்கள்
மழையில்லாத போது..
இறுதியில் என்னவோ
சபிப்பது
அந்த ஆகாயத்தைதான்.... ?
இன்றைய பிழைப்புக்கு
மரம்வெட்டி
நாளைய மழைக்கு
முடிவுக்கட்டி
மரமறுக்கும்
விறகு வெட்டியானின்
சோர்வு வியர்வைக்கு
தென்றல் போர்த்துவது
என்னவோ
இன்னொரு மரம்தானே..?
இல்லையா என் தோழி ?
செய்வதெல்லாம் செய்துவிட்டு
பொழுதுபோக்குவதெல்லாம் போக்கிவிட்டு
வியாக்கின மமதையில்,
புறக்கணிப்பு போதையில்
ஒருவருக்கொருவர் மாறிமாறி
சபித்துக்கொள்ளும்
நம் தற்காலிக உறவினைப்போலதானே
யாதும் யாவரும் ?!!
இல்லையா..?
என் முன்னாள் சிநேகிதியே.??
--------------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.