நீ இல்லை என்னருகில்

என்னோடு காதல்
கொள்ள வேண்டிய
உன் விரல்கள்
கணினியோடு காதல்
கொண்டபடி கடந்து
போகிறது என்
காரிருள் காலங்கள்

ம் இப்போது
வலுக்கட்டாய விடுப்பு
என் விரல்களுக்கும்!

என்னோடு காதல்
பாஷை பேச வேண்டிய
உன் உதடுகள்
ஏதோ அலுவலக
அழைப்புக்கு பதில்
சொல்லி கொண்டிருந்தது

ம் இப்போது
மவுன அஞ்சலியில்
என் உதடுகளும்!

என்னை காதலுடன்
அணுஅணுவாய் வாசிக்கும்
காந்த கண்கள்
தீவிரமாய் பார்த்து
கொண்டிருக்கிறது கணினி
திரையின் கோடுகளை

ம் இப்போது
கட்டப்பட்டே கிடக்கிறது
என் கண்களும்!

நம் காதலை
தொலைத்து விட்டு
கடல் கடந்து வந்து
நமக்காக தானே
காசு சேர்க்கிறோம்
என்கிறாய்

ம் இப்போது
நிகழ்காலத்தை தொலைத்து
எதிர்கால ஏக்கத்தில் நான்!

ஒரிருளில் இரு
வேறு அறைகளில்
தம்பதிகளாய் நாம்

அருகில் இருந்தும்
நீ இல்லை
என்னவனாய் என்
தோள் அருகில்

ம் இப்போது
உனக்காக காத்திருந்த
எனக்குள் ஏதோ
எரிகிறது மெலிதாய்
உன்னை உள்வாங்க
வேண்டிய நான்
ஒரு குவளை
தண்ணீரை விழுங்கி
உன் போர்வைக்குள்
கண்ணயர ஆரம்பிக்கிறேன்
என் தலைவா !

எழுதியவர் : யாழினி வ (6-Mar-15, 5:36 pm)
Tanglish : nee illai ennarukil
பார்வை : 216

மேலே