கனவே கலைந்து போ ---------- பாகம்-1 துப்பறியும் திகில் தொடர்
இங்கெல்லாம் வருவான் என்று நினைக்கவில்லை பிரசாத். வலிய விதி அவனை குப்பைத் தொட்டியில் தள்ளியிருக்கிறது, போலிஸ் ஸ்டேஷனிலும் மறு வாழ்வு மையத்திலும் போட்டு அலைக்கழித்திருக்கிறது. இவ்வளவு அழகான இடத்தில் அதே விதி அவனை நிறுத்தும் என்று சற்று முன் கனவு கூடக் கண்டதில்லை. பத்திரிக்கை நிருபர் செந்தில் குமாருக்கு ஏதோ வைரஸ் காய்ச்சல். அதனால் கலைமணி அகாடமியில் நடைபெறும் ஓவியக் கண்காட்சி பற்றி செய்தி சேகரிக்க அவன் அதே பத்திரிக்கை அலுவலகத்தில் இருக்கிற ஆல்-இன்-ஆல் மல்டி திறமைசாலி’ யான அதாவது எடுபிடியான பிரசாத்தை அனுப்பியிருந்தான். ஒரு பேப்பர் நிறைய கேள்விகளை எழுதி, அதற்கான பதிலை பெற்று வரும்படி சொல்லியிருந்தான்.
இங்கு வந்தால் கண்காட்சியின் பொறுப்பாளர் பிரஸ் ரிலீஸ் என்று போட்டு மூன்று பக்க பிரிண்ட் அவுட்டும், சில போட்டோக்களும் கொடுத்து மதிய சாப்பாடும் இலவசம் என்று சொல்லி விட்டதால் ஒரு அழகான சூழ்நிலையில் இஷ்டம் போல மேய்கிற வாய்ப்பு பிரசாத்துக்கு கிட்டியது! வாழ்க வைரஸ் காய்ச்சல்!
கலைமணி அகாடமியின் மூன்றாவது தளம். செயற்கையாகக் குளிரூட்டப்பட்ட சில்லென்ற அறை மெல்லிய ஷெனாய் இசையில் தளும்பியது. மெதுவாகப் படியேறிப் போனான். வராண்டாவில் நின்று வெளியே பார்த்தான்.
பிரகாசமான, பரந்த நீல வானம்.
அத்தனை ஜீவராசிகளுக்கும் இடம் கொடுக்கிற நீல வானம்.
இந்த வானத்தின் கீழ்தானே மரம் செடி, கொடியென பூமித்தாய் தன் கூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டு சுற்றி வருகிறாள்.... அவள் கூந்தலுக்கு சாம்பிராணியாக தொழிற்சாலைகள் வெளிப்படுத்தும் புகையும் இந்த வானத்தின் கீழ்தானே. புகை அதிகமாகி அவள் இருமும் போது ஏற்படும் அகச்சிவப்பு மற்றும் புற ஊதாக் கதிர்கள் பாய்ந்து பரவுவதும் இந்த வானத்தின் கீழ்தானே....
சில ஓவியங்கள் அவனைக் கண் ஜாடை காட்டி அழைத்தன; சில மிரள வைத்தன. இதயத்தை கனக்க வைத்தன சில; மனதை லேசாக்கிப் பறக்க வைத்தன சில...
முதல் பரிசு பெற்ற ஓவியம்; கீழே நந்தினி என்ற பெயருடன்..
இங்கேயும் நீல வானம். ஆயினும் பரேட் முடித்த பிறகு அட்டென்ஷன், ஸ்டாண்ட்டடீஸ்.... ஸ்டாண்ட் ஈசி என்று சொல்கிற போதே பெருமிதத்தோடு ஒட்டிக் கொள்கிற களைப்பான நீல வானம். புன்னகைக்கவும் வீட்டுக்குப் போகவும் தேவைப்படுகிற கொஞ்சூண்டு பிரகாசத்தை மட்டும் வைத்துக் கொண்டு கால் நீட்டி காற்று வாங்கியது வானம். ஏணி போட்டால் எட்டி விடலாம் போல் நிலா.
பச்சை, நீலம், பழுப்பு- மொத்தமிருந்தது மூன்றே நிறங்கள்.. அவற்றில் எத்தனை சாயல்கள் உண்டோ அத்தனையும் அந்த ஓவியத்தில்... ! “வானகமும் கானகமும்” என்று தலைப்பு!
நிலவைச் சுற்றி கண்ணை உறுத்தாத இளம் நீலம், போகப் போக அடர்ந்து கருப்பானது. அந்த அடர்ந்த கருமையில் ப்ரகாச நீல நட்சத்திரங்கள்.... !
நிலவுக்கு நேர் கீழே இளம் பச்சையில் குலுங்கிய தாவரங்கள் போகப் போக கரும் பச்சையாகி நிறம் மறைந்து வடிவம் மட்டும் காட்டி, பிறகு வடிவமும் இழந்து இருளில் சங்கமித்தன.
எங்கிருந்தோ தொடங்கி எங்கேயோ போனது நீரோடை.. ! வித விதமான வடிவங்களில் வித விதமான பழுப்புச் சாயல்களில் ஓடைப் படுகையில் கூழாங்கற்கள்.. ! நிலவின் பிம்பம் நீரோடையில் நெளிந்து தெரிந்தது. நீரோடுவதை அவன் பார்க்க வில்லை. உணர்ந்தான்.. ! கால்களில் சில்லிப்பு மோத, சட்டென்று நகரக் கூடச் செய்தான். ஓவியம் வெளியில் வந்து விட்டதோ, ஓவியத்துக்குள் அவன் போனானோ- தெரியவில்லை...அவன் நீரோடைக்கு இணையாகப் படுத்திருந்தான். இலைகளின் சலசலப்பை ரசித்தான்.. தெறித்த நீர்த் துளிகள் உதட்டில் பட்டு இளம் பச்சை நிற டைல்ஸ்களில் முத்துக்களை உண்டாக்கின!
இளம் பச்சை நிற டைல்ஸ்கள்? அதுதான் அந்த ஹாலின் தரையில் பதித்திருந்தது. முத்துக்கள்? ஆம்! பிரசாத் முத்துக்களை பார்த்தான்....!
இப்போது பிரசாத்தை பற்றி சில வார்த்தைகள்... நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அருமையான கல்லூரி மாணவன் அவன். வேதியியல் துறை. தெரிந்தோ, தெரியாமலோ அவனும் அவன் தம்பியும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டனர். போதை என்றால் சாதாரண போதையல்ல; எல்எஸ்டி எனப்படும் அதி பயங்கர போதை... ! சிறிது ரத்தத்தில் ஏற்றிக் கொண்டால் அவரவர் கற்பனைப்படி கண்ணுக்கெட்டிய தூரம் ரோஜாப் பூக்களாய் பார்க்கலாம்.. அவற்றில் ஏறிப் படுத்துக் கொள்ளலாம்... அதன் வாசனையைக் கேட்கலாம்; நிறங்களை ருசிக்கலாம்....!
புலன்களைத் தாறுமாறாய் தறி கெட்டுப் போக வைக்கிற போதை அது! விலையும் அதிகம்!
இப்படி எத்தனையோ முறை போதையேற்றிக் கொண்டு சாக்கடையிலும் குப்பைத் தொட்டியிலும் விழுந்து கிடந்திருக்கிறான் பிரசாத்! அவன் தம்பி அவனை விடத் தீவிரமாய் இறங்கி, அவஸ்தைப் பட்டு, முட்டி மோதி இறுதியில் தற்கொலை செய்து கொண்டான்!
தம்பியின் மரணம் அவன் குடும்பத்தை வெகுவாய் பாதித்தது; அடுத்தடுத்து பெற்றோர்கள் மரணமடைந்தனர். சுற்றம் தாங்குவதற்கு பதில் பணத்தை உறிஞ்சி இவனை வெளியே துப்பியது. கடைக்கோடியில் நின்ற அவனை சில நண்பர்கள் கை தூக்கி விட்டனர். மறு வாழ்வு இல்லத்தைச் சரணடைந்தான். டாக்டர் மேகலாவின் சிகிச்சையும் சொல்லவொண்ணா அர்ப்பணிப்பும் இவன் தொலைத்த இவனை இவனிடம் திருப்பிக் கொடுத்தன!
இருந்தாலும்...
போதையில் பழகிய மூளையல்லவா?
ஏதோ ஒன்று அல்லது யாரோ ஒருவர் அவனை வெகுவாகப் பாதித்தால்..., வெகுவாகப் பாதித்தால் மட்டுமே இப்படித்தான் காட்சியும் யதார்த்தமும் ஒன்றாகி விடும்..! கற்பனை அப்படியே கண் முன் எழும்பும்.. மனப்பிரமையும் மாயப் பிம்பங்களும் யதார்த்தத்துடன் கலந்து, பிரித்தெடுக்க கொஞ்சம் கஷ்டப்படுவான்....!
மற்றபடிக்கு பிரசாத்துக்கு அபார மூளை! இல்லாவிட்டால் இன்ஸ்பெக்டர் முரளிக்கு இன்பார்மராக இருக்க முடியுமா? போதை மருந்துகளை தயாரிப்பது, பதுக்கி வைப்பது, கடத்துவது என்று அந்த விவகாரத்தில் சந்து பொந்து அறிந்து, யூகித்து மோப்பம் பிடிக்கிற திறமை பிரசாத்துக்கு நிறையவே உண்டு...!
இதில் சிக்கல் என்னவென்றால் கதை முழுக்க பிரசாத்தின் கண்ணோட்டத்தில்தான் நகரும்... !
பிரசாத் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்!
நிலவு மெதுவாக அவனருகில் வந்தது. நிலவு ஜாஸ்மின் சென்ட் போடுமோ? “ஹலோ சார்” என்றது!
“என்ன சார், என்னோட ஓவியத்துக்குள்ளேயே போயிட்டீங்களா? வெளில வாங்க, லஞ்ச் ரெடி!”
இளஞ்சிவப்பில் தங்க நிற ஜரிகை போட்ட சேலையில் அதை விட முகம் ஜொலிக்க நின்றிருந்தாள் அந்தப் பெண்.
அட, இவள் கங்கா பவானி டிவி சீரியல் ஹீரோயின் நந்தினி ஆயிற்றே? இன்னும் அவ்வளவு பிரபலமாகாத புது ஹீரோயின்! இந்த ஓவியத்தை வரைந்ததும் இவள்தானா?
ஆச்சரியம்! சந்தோஷம்! அவன் உணர்ச்சிகள் அப்படியே முகத்தில் பிரதிபலிக்க, அதைப் படித்தாள் அந்தப் பெண்.
“ஹலோ மேம், நான் உங்க ரசிகன்” கை குலுக்க கை நீட்டினான்.
அரை நொடி தயக்கத்துக்குப் பிறகு அவளும் கை கொடுத்தாள். “ப்ரண்ட்ஸ்?”
நல்ல நட்புக்கு அவள் ஏங்குவது கண்ணில் தெரிந்தது. பிரசாத் தன்னைப் பற்றி சுருங்கச் சொன்னான்.
“சார், ஜி.எம். புரொமோட்டர்ஸ் நடத்தின சிறப்புக் குலுக்கல்ல எனக்கு ஒரு அபார்ட்மெண்ட் பரிசா கிடைச்சிருக்கு.. வர்ற புதன் கிழமை ஐந்தாம் தேதி கிரகப் பிரவேசம் வச்சிருக்கேன்.. வந்துடுங்க.. ! ”
அழைப்பிதழை நீட்டினாள்.
பந்தா ஏதுமின்றி விகல்பமில்லாமல் நந்தினி அழைத்தது பிரசாத்தின் மனதைத் தொட்டது.
மொபைல் எண்கள் இடம் மாறின.
நந்தினி கீழிறங்கினாள்.
அலையலையாகக் கூந்தல் அப்படியே உடலை மூட, நிலாவொளி முக்காடு போட்டது.
கரும்பச்சைக் கொடிகள் இருபுறமும் செங்குத்தாக நிலவை நோக்கி எழும்பின; அவற்றிலிருந்து இளம்பச்சை படர்கம்பிகள் தோன்றி நுனியில் மினி கைகள் முளைத்தன.
குட்டி குட்டிக் கைகள்! விரல்களில் பளிச்சென்று வெள்ளைக்கல் பதித்த குட்டி குட்டி மோதிரங்கள்!
விரல்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து ஏணிப்படிகளாயின. அவற்றில் வலிக்காமல் கால் வைத்து மிதந்து மேலேறினாள் நந்தினி. நிலவில் வெள்ளை சிம்மாசனம் தெரிந்தது... !
“எக்ஸ்யூஸ் மீ.. ” கூட்டம் அவனைத் தள்ளி விட்டது. கூட்டத்தோடு ஒருவனாக சாப்பாட்டு மேஜையில் போய் அமர்ந்தான் பிரசாத்.
தொடரும்