எடுத்துச்செல்
நமக்குள்
மழை பெய்த
நாட்களின்
மண்ணின் மணத்தினை
நீ யெடுத்துச்
சென்று விட்ட பின்
வெறும்
மண்ணினை வைத்து
வனைதல்
மறந்து போன
கையற்ற குயவன்
நான் என்ன செய்ய ?
நீ
மறதியாய்
என்னில்
விட்டுச் சென்றவைகளின்
தாளிடல் திறந்து
வசந்தத்தினொவ்வொரு
அதிகாலையிலும்
என் மீது சொரியும்
சரக்கொன்றைப்
பூக்களின் கண்ணீரில்
கசிந்து வடியும்
விசும்பலின் மஞ்சளை
எத்தனை நாளைக்கு
நான் எனது
மன அலமாரிக்குள்
முடக்கி வைக்க ?
நமக்குள்ளான
பொரித்தலின்
குஞ்சுகளை
என்னிடம் விட்டு விட்டு
இரை தேடிச்சென்ற
நீ
வலசை போவதின்
திசை மறந்து
எங்குற்றாய் எம் பாவாய் ?
உன் நினைவுகளின்
ஆழப் பற்றுதலில்
வேர்விட்டிருக்குமிந்த
மரத்தினை
எத்தனை
மரங்கொத்திகள்
தினந்தோறும்
கொத்திக் குதறுகின்றன
தெரியுமா ?
உனது
நினைவுகளை
அடைகாத்துக்கொண்டிருக்கும்
அந்த
ஒரேவொரு
மயிலிறகு
மட்டுமே இப்போது
மிச்சம் என்னிடம்
அதையும்
உனது சாமரத் தயாரிப்பிற்கு
மனமுவந்து
பரிசளிக்க
நான் தயார்
எப்போது
எடுத்துக்கொண்டு
செல்லப் போகிறாய் ?