வேலைக்கு செல்லும் பெண்ணின் ஒரு நாள் டைரி

அதிகாலை வேளையில்
சமைப்பானின் விசில் சத்தம்
சற்றும் இடைவெளியின்றி
தெருவெங்கும்.....!
குளியலரையில்
சல சலவென சத்தம்
சூரியன் உதிக்கும் முன்......!
ஒப்புக்கு முணு முணுக்கும்
ஓரிரண்டு ஸ்லோகங்கள்........!
செந்நா சுடா அளவு
சுட சுடச் காபி.......!
தினசரி நாளிதழின்
தலைப்பு செய்திகளை
மேம்போக்காக மேய்ந்திடும்
ஓரப்பார்வை.
தலையை துவட்டியபடி....!
மழலைகளை துயில் எழுப்ப
உலகில் இல்லா மொழியில்
மயக்கிடும் மந்திரங்கள்......!
இவையாவும்
சிங்கார சென்னையில்
பளீரென வெளிறும்
பகலவன் தோன்றும் முன்......!
அரும்புகளை அலங்கரித்து
ஆட்டோவில் ஏற்றிவிடும்
வீர தீர சாகசங்கள்.......!
ஏணி போல காலணி........!
கைப்பாவை போல் கைப்பை.........!
நடையை சமன் செய்ய குடை.........!
என அனைத்தையும்
பொருக்கிக் எடுத்து
அரக்கபறக்க சென்றிடுவாள்
ஆறு ஏ வை பிடிக்க......!
நடத்துனரை
தேடிபிடித்து
தேனாம்பேட்டை
எனச்சொல்வாள்
கூரையின் கம்பியை
பிடித்தபடி.......!
காமுகனாளர்களின்
உரசல்களையும்
உதாசீனம் செய்வாள்
மனதில் புழுங்கியபடி......!
அலுவலகத்தில்
வழிந்திடும் ஆண்களை
விழி கொண்டு அடக்கிடுவாள்........!
எல்லை மீறும்போது
எச்சரிக்கையும்
ஏவி விடுவாள்........!
உழைத்து களைத்து
இல்லத்துக்குள் நுழைய
வழி மேல் விழிவைத்து
காத்திருந்த பிள்ளைகளை
அள்ளி அணைத்து
உச்சியில் முத்தமிட.......!
களைப்புகள் நீங்கிடும்
கணப்பொழுதில்........!
தொலைக்காட்சி தொடர்
தொல்லையே என்றாலும்
தொய்ந்த முகத்துடன்
காணத்தான் செய்வாள்.......!
கண்ணீர் சிந்தியபடி......!
காய்கறிகளை நறுக்கியபடி.......!
காம கணைகள் தொடுக்க
காத்திருக்கும்
கணவனையும்.......!
திரேகதிசுக்களால்
சீர் செய்து
போர்வைக்குள்
கண்முடி நுழைந்திட.......!
கடிகாரத்து முட்கள்
சற்றொப்ப இரண்டும்
மேல் நோக்கி
இணைந்திருக்கும்
ஒன்றோடு ஒன்று......!
*************************************
மகளிர் தினவாழ்த்துக்கள்
*************************************