நட்பு =காதல் =அன்பு ---------தொடர் =பகுதி 4
################## 4 ####################
தொட்டு சென்ற தென்றலாய் நம் உறவு
விட்டு சென்ற அன்றிலாய் நம் பிரிவு
பிரிவுகளையும் சந்தோஷிக்கிறேன்...
ஏன் தெரியுமா?
என் புன்னகையில் பூக்களாக நீ..
உருவத்திலே உதிரமாக நீ..
கண்ணீரிலும் கடைசியாக நீ..
என் மரணத்திலும் உயிர்க்கிறாய் நீ...
நட்பே நட்பே...!
################# நன்றி :ஜி.ஷக்தி (07 .09 .2012 )
பாசப் பாத்திரத்தில்
என் குடும்பமே
உன்னிடம் யாசித்தது
அன்பு அன்பு அன்பு மட்டுமே!
பூசனைக்கும் என் பிள்ளைகள்
உன் புன்னகையை ஏற்றனர்!
மரணப் படுக்கையின்
“ஆல்பகோடா” பழத்துண்டு
என் தந்தைக்கு நீ!
சொத்தே இல்லாத பாகப் பிரிவினை
‘பானிப்பட்டில்’
பொங்கலுக்கு நாங்கள் தஞ்சம்
உன் முற்றத்தில்!
பொங்கல் காசு கொடுத்து
இந்த இரும்புக் குதிரையை உருக்கிய
ஊது உலை நீ!
உன் வீட்டு எச்சில் இலை
என் சரிகை வேட்டித்துண்டில்
உன் வீட்டு விழாக்களுக்கானவை..
உன் உறவின் கிழிசல்களை
என் தோள் நரம்பால்
உன் இல்லறச்சண்டைகளின் போது
தைத்துள்ளேன்
நினைவில் உள்ளதா?
உன் வியாபாரச் சந்தைக்கு
சதிவலை பின்னி
பிடித்துப் போட்டாய்
என்
வளர்ப்பு மீன்களை…
சுனாமியாய்
உன் ரௌத்திரத்தில்
அழிந்தது மீன்கள் மட்டுமல்ல
மீன் தொட்டியும் தான்!
நீ அழித்த மீன்கள் மணக்கும்
நாளை கருவாடாய்.
உடைந்த தொட்டியின்
கண்ணாடி சில்லுகளில்
ஒளிப்பிம்பாய் என் உழைப்பு!
ஆனாலும் உனது
துரோக நகக்கண்களில்
என் குருதி நனைவுகளின்
பிண வாடை,
என் செய்வாய்?
உடைந்த சில்லுகள் சிராய்த்ததில்
என் இதயக் குருதியின்
ரங்கோலி தரையெங்கும்.!!!
உன் தலைச் சுமையில்
எனது நினைவுகள் தந்த
பாரம் மறக்க
புழு நெளியும் புன்னகை புகுந்த வாயால்
பொய் சரக்கை கூவி விற்ற
ஏமாற்று வியாபாரி நீ!
நீ விற்றதில்
என் முதலீடு மாத்திரமே சம்பங்கு
உன் முதலீடு ????
உன் விழிகளில்
என் வழிகளின் பிரசவம்.
என் வழிகளிலெல்லாம்
பல்லக்கினுள் நீ.
பாதப் பதிவுகளாய் என் நடை.
என் சிந்திய வியர்வையில்
விளைந்தன உனது வெற்றிப்பயிர்!
களையாய்க் கடுகளவும்
நான் இருந்ததில்லை.
என் உழைப்பில் விளைந்த
முற்றிய நெல்மணி கொத்திய
கூரிய அலகின் குருவிகள்
என் இதயத்தின் மையத்திலும்
காயம் செய்தன .
நீதான் மருந்திட்டாய்…,
எனக்கல்ல
குருவிக்கூட்டத்திற்கு!
காயமே பொய் என்று
பறைசாற்றி மகிழ்ந்தாய்!
உறவு ரோஜா உற்சாகமாய்
முரண் முள் இல்லாமலேயே!
இச்சாதனை தான் எத்தனைக் காலத்திற்கு...
நம் சிநேகிதத் தோட்டத்தில்.
விசாரிப்பு விழிகளின் விரிப்பில்
ஊரே உள்ளடங்கியது
உதடுகளின் உச்சரிப்பில் நமது பிரிவு.....
“உன்னுடன் என் உறவு
முள் இல்லா ரோஜாவா?”
அறியவில்லை அவர்கள்
முட்களையும் மெழுகுமுனையாக்கும்
செப்படி வித்தைக்காரன் நீயென்று
அதுவும்
உன் காரியம் கைகூடும் வரை!
என் ஊக்குவிப்பு இதழ்களே
உன் ரோஜா முழுதும்.
என்னைப் போல் பலருடையதும்…?
ரோஜா மாலை உனக்கு
மார்பிலும் மேடைகளிலும்…!
ஆனால்
உன் மாலையினின்றும் உதிர்ந்த
வீதியெங்கும் சிதறிய இதழ்கள்
இனி உன்னிடம்
சீறிப் பாய்ந்து கேட்கும் பல
வினாக்களுக்கு விடையென்ன
வைத்துள்ளாய்
சொல்!
எப்போதும்
பிரிவும் பிளவும் உன்னுடையது...
எப்போதும் முதல் நீட்டல்
என்னுடையது…
சமரசக் கை குலுக்கல்கள்
நம்மிடை எத்தனை முறை?
இன்னும் தேடுவோம்....